முறைகேடு... வாக்குப்பெட்டி உடைப்பு... 7 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு

முறைகேடு... வாக்குப்பெட்டி உடைப்பு... 7 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு

தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது முறைகேடு நடந்ததாக புகார் கூறப்பட்ட 7 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

தமிழகத்தில் கடந்த 19ம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அமைதியாக நடந்தது என்று மாநில தேர்தல் ஆணையமும், டிஜியும் கூறினர். அதே நேரத்தில், சென்னை உள்பட சில இடங்களில் கள்ள ஓட்டு தொடர்பான புகார்களால் பல இடங்களில் ஆளும் கட்சிக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. வாக்குச்சாவடிக்குள் புகுந்து குடிபோதையில் வாக்குப்பதிவு இயந்திரம் உடைப்பு, வாக்குப்பதிவு இயந்திரம் பழுது உள்ளிட்ட இடையூறுகள், பிரச்சினைகளும் நடந்தன. இதுபோன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு உள்ளான சென்னை, மதுரை உள்பட 4 மாவட்டங்களில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அதன்படி, சென்னை மாநகராட்சி 51-வது வார்டில் அமைந்துள்ள வண்ணாரப்பேட்டை வாக்குச்சாவடி (எண் 1174), 179-வது வார்டில் அமைந்துள்ள பெசன்ட்நகர் ஓடைக்குப்பம் வாக்குச்சாவடி (எண் 5059), மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சி 17-வது வார்டில் உள்ள வாக்குச்சாவடி (எண் 17 டபிள்யூ), அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சி 16-வது வார்டில் உள்ள வாக்குச்சாவடி (எண் 16 எம், 16 டபிள்யூ), திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை நகராட்சி 25-வது வார்டில் உள்ள வாக்குச்சாவடி (எண் 57 எம், 57 டபிள்யூ) என 5 வார்டுகளில் 7 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அந்த பகுதிகளில் இன்று விடுமுறை அறிக்கப்பட்டுள்ளதால் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். மறுவாக்குப்பதிவு என்பதால் அங்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை மறுவாக்குப்பதிவு நடக்க உள்ளது. கடைசி ஒரு மணி நேரம் அதாவது மாலை 5 மணி முதல் 6 மணி வரை கரோனா அறிகுறி உள்ளவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் மட்டும் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள். மறுவாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு இடது கை நடுவிரலில் அழியாத மை வைக்கப்படுகிறது.

மறுவாக்குப்பதிவு நடைபெறும் வாக்குச்சாவடிகளில் பதிவாகும் வாக்குகள் இன்றைய தினமே வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச்செல்லப்பட்டு பாதுகாவல் அறைகளில் பாதுகாப்புடன் வைக்கப்பட உள்ளன. இந்த வாக்குகளும் நாளை எண்ணப்படுகிறது. இதையொட்டி வாக்கு எண்ணப்படும் மையங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. வெளிநபர்கள் உள்ளே வருவதை தடுக்க சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in