1976-ன் மிசா ஸ்டாலினா, ஐபிஎஸ் ரவியா?

முதல்வர் - ஆளுநர் மோதலில் தெறிக்கும் இணையம்
1976-ன் மிசா ஸ்டாலினா, ஐபிஎஸ் ரவியா?

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநருக்கு எதிரான முதல்வரின் கண்டனத் தீர்மானமும், சபையை விட்டு ஆளுநர் பாதியில் வெளியேறியதுமாக இன்றைய நிகழ்வுகள் இணையத்திலும் எதிரொலித்து வருகின்றன.

ஆளுநர் எழுப்பிய ’தமிழ்நாடு - தமிழகம்’ சர்ச்சையே இன்னும் இணையத்தில் ஓயவில்லை. #தமிழ்நாடு என்பதன் கீழ் ஆளுநர் மற்றும் பாஜகவுக்கு எதிரான முழக்கங்கள் கடந்த சில தினங்களாகவே ட்ரெண்டிங்கில் இருந்தன. பொங்கல் தருணம் என்பதால் தமிழர், தமிழ் மொழி, தமிழ் மொழி, பண்பாடு, பாரம்பரியம் என #தமிழ்நாடு ட்ரெண்டிங் இந்திய அளவில் முன்னிலை வகித்தது.

இதனூடே இன்றைய சட்டப்பேரவை களேபரங்கள் காரணமாக, கூடுதலாக #GetOutRavi மற்றும் #MKStalin ஆகியவை #தமிழ்நாடு ட்ரெண்டிங்கிற்கு போட்டியாக முன்னேறின. சட்டப் பேரவையிலிருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி பாதியில் வெளியேறினார் என்பதைவிட, அவர் வாசிக்காது புறக்கணித்த பதங்கள் தமிழர்களை கொந்தளிக்க செய்திருப்பதும் பதிவுகளில் வெளிப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரைக்கு ஒப்புதல் தந்த ஆளுநர், வாசிப்பினூடே குறிப்பிட்ட சில வார்த்தைகளை மட்டும் தவிர்த்தது குறித்தான கேள்விகள் இணையவெளியில் எதிரொலித்து வருகின்றன. ஆளுநர் அப்படி தவிர்த்த வார்த்தைகளில், ’சமூகநீதி, சுயமரியாதை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமத்துவம், பெண்ணுரிமை , மத நல்லிணக்கம், பல்லுயிர் ஓம்புதல், தமிழ்நாடு, அமைதிப்பூங்கா, தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காஅம்ராசர், பேரறிஞர் அண்ணா, முதமிழறிஞர் கலைஞர், திராவிட மாடல்’ ஆகியவை அடங்கும்.

இதனையடுத்து, ‘தமிழ்நாடு அரசு தயாரித்த உரையை ஆளுநர் முழுமையாக வாசிக்கவில்லை. அரசு தயாரித்த உரை மரபுப்படி அவைக்குறிப்பில் பதிவு செய்யப்படும். ஆளுநர் சொந்தமாக சேர்த்துப் படித்தவை எதுவும் அவைக்குறிப்பில் இடம்பெறாது’ என்று ஆளுநருக்கு எதிராக முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டுவந்தார். இதனையடுத்து, ஆளுநர் ஆர்.என்.ரவி பாதியில் அவையை விட்டு வெளியேறினார்.

இந்த நிகழ்ச்சிகள் அனைத்துமே ’லைவ்’ஆக காணக்கிடைத்ததில் அதன் வீடியோ துணுக்குகள், நுணுக்கமாக கோர்க்கப்பட்டு இணையத்தில் வலம்வரத் தொடங்கின. ஆளுநர் வெளியேறும் தருணத்தில் அவரை முதல்வர் ஏறிட்ட கணத்தை பதிவு செய்த படம் இணையவெளியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இதனுடன் ஆளுநரை சாடியும், முதல்வரை விதந்தோதியும் மீம்ஸ் வரிசை சரவெடியாக வெடித்து வருகின்றன.

’ஸ்டாலின், கலைஞரை விட மிகவும் ஆபத்தானவர்’ என்று ஹெச்.ராஜா உதிர்த்த திருவாசகம், ’ஆர்.என்.ரவி 1976 ஐபிஎஸ் பேட்ச் என்றால் மு.க.ஸ்டாலின் 1976 மிசா பேட்ச்’ போன்றவை அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. இவற்றுக்கிடையே தர்மபுரி எம்.பி.செந்தில்குமார் புழக்கத்தில் விட்ட ரவி என்பதற்கான ரகம்ரகமான முன்னொட்டுகள் அடங்கிய மீம், மதுரை எம்.பி சு.வெங்கடேசனின் ‘ஆளுநரே பாதியில் அல்ல, முழுமையாக வெளியேறுங்கள்’ என்ற பதிவு உள்ளிட்டவற்றால் ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் திமிலோகப்பட்டு வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in