`ஊழல்வாதிகளை அரவணைத்துள்ளார்; மோடி சொல்வது வேடிக்கையாக இருக்கிறது'- சாடும் முதல்வர் ஸ்டாலின்

`ஊழல்வாதிகளை அரவணைத்துள்ளார்; மோடி சொல்வது வேடிக்கையாக இருக்கிறது'- சாடும் முதல்வர் ஸ்டாலின்

"மோடியால் ஊழல்வாதிகள் என்று சொல்லப்பட்டவர்கள் எல்லாம் இன்றைக்கு பாஜக கூட்டணியில் இடம்பெற்று இருக்கிறார்கள். அவர் அரவணைத்துக் கொண்டிருக்கிறார். அவர் இதை சொல்வது வேடிக்கையாக இருக்கிறது" என்று முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

பெங்களூருவில் நடந்த எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை முடித்துவிட்டு சென்னை திரும்பிய முதல்வர் ஸ்டாலின் விமான நிலையத்தில் அளித்த பேட்டியில், "இந்தியாவின் ஜனநாயகம், அரசில் அமைப்பு சட்டம், மதச்சார்பின்மை, மாநில சுயாட்சி, ஏழை மக்களுக்கு வழங்கப்படக் கூடிய நலன் இவையெல்லாம் இன்று இந்தியாவில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறது. சர்வாதிகாரம், ஒன்றைத் தலைமை ஏதேச்சதிகாரம், அதிகார குவியல் இவற்றில் நாடு சிக்கி சென்று கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக வருகிற 2024ஐ மையமாக வைத்து பாராளுமன்றத்தில் அந்த வெற்றியை பெற வேண்டும் என்பதற்காக இந்தியாவில் இருக்கக்கூடிய பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து இருக்கிறது.

பாட்னாவில் நடந்த முதல் கூட்டத்தில் 16 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டார்கள். பெங்களூருவில் இரண்டு நாட்கள் நடந்த கூட்டத்தில் 26 பேர் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டு பேசியிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் எப்படி கூட்டணி அமைத்து வெற்றி பெற்று இருக்கிறோமோ அதே போல் இந்தியா முழுவதும் இதேபோல் கூட்டணி அமைந்து அந்த வெற்றியை காணுவதற்கான வியூகம் எல்லாம் வகுக்கப்பட்டிருக்கிறது. அகில இந்திய அளவில் கொள்கை கூட்டணியாக மாநில அளவிலே தேர்தல் கூட்டணியாக இது அமையும். அப்படி ஒரு சூழ்நிலை உருவாகி இருக்கிறது. பாட்னாவைத் தொடர்ந்து பெங்களூருவில் நடைபெற்றுள்ள கூட்டங்களை பொறுத்தவரைக்கும் ஒரு பெரிய மகிழ்ச்சி எனக்கு கிடைத்திருக்கிறது. எனக்கு மட்டுமின்றி இந்தியாவுக்கே மகிழ்ச்சி தரக்கூடிய செய்தியை நாடு காத்துக் கொண்டிருக்கிறது.

இப்படிப்பட்ட கூட்டணிக்கு என்ன பெயர் வைத்திருக்கிறோம் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். இந்தியா என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. அடுத்த கூட்டம் மும்பையில் நடைபெறுவதாக முடிவு எடுத்து இருக்கிறோம். அந்தக் கூட்டத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து அதில் பேசப்படும் என்று தெரிவித்திருக்கிறேன். ஆகவே 2024ஐ பொறுத்தவரைக்கும் ஒரு புதிய இந்தியாவை உருவாக்கும் ஆண்டாக தான் அமையும். உங்களுடைய ஆதரவும் ஒத்துழைப்பும் தொடர்ந்து இருக்க வேண்டும்" என்றார்.

அமலாக்கத்துறையின் நெருக்கடியை திமுக எப்படி சமாளிக்க போகிறது என்ற கேள்விக்கு, இதெல்லாம் எதிர்பார்த்த ஒன்றுதான். இன்னும் போகப் போக கொடுமைகள் நடக்கும். அதையும் சந்திக்க தயாராக இருக்கிறோம். அதிலும் நிச்சயம் வெற்றி காண்போம். அனைத்தையும் சட்ட ரீதியாக சந்திப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.

தமிழ்நாட்டில் நடக்கக்கூடிய அமலாக்கத்துறையின் நடவடிக்கை நியாயமானது என்று பிரதமர் சொல்லியிருக்கிறாரே என்ற கேள்விக்கு, பாஜக கூட்டணி இருக்கிறவர்கள் மீதான வழக்குகளை கண்டும் காணாமல் இருக்கிறார்கள். அதுதான் நியாயமானது. அவரை (மோடி) பொறுத்தவரைக்கும் என்று பதில் அளித்தார்.

ஊழல் கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து இருப்பதாக பிரதமர் சொல்லி இருக்கிறாரே என்ற கேள்விக்கு, இன்றைக்கு நடந்த கூட்டத்தில் அவர் அருகில் யாரை உட்கார வைத்திருக்கிறார் என்று தெரியுமா? அவரால் குற்றம்சாட்டப்பட்ட, அவரால் ஊழல்வாதிகள் என்று சொல்லப்பட்டவர்கள் எல்லாம் இன்றைக்கு அந்த கூட்டணியில் இடம்பெற்று இருக்கிறார்கள். அவர் அரவணைத்துக் கொண்டிருக்கிறார். அவர் இதை சொல்வது வேடிக்கையாக இருக்கிறது என்று கூறினார் முதல்வர் ஸ்டாலின்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in