`எம்.ஜி.ஆரின் நாகரிகத்தை இன்றைக்கு இருப்பவர்களிடம் எதிர்பார்ப்பது தவறு'

கருணாநிதியை நினைவுகூர்ந்த முதல்வர் ஸ்டாலின்
`எம்.ஜி.ஆரின் நாகரிகத்தை இன்றைக்கு இருப்பவர்களிடம் எதிர்பார்ப்பது தவறு'

“நம் தலைவர் முத்தமிழறிஞரின் பெயரைச் சொன்ன காரணத்தால், அவருடன் காரிலே வந்த ஒருவரை ‘எனக்கே தலைவர் கலைஞர், அவர் பெயரை நீ சொல்லலாமா’ என்று இறக்கி விட்டவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அப்படிப்பட்ட நாகரிகத்தை இன்றைக்கு இருப்பவர்களிடம் எதிர்பார்ப்பது தவறுதான்” என்று முதல்வர் ஸ்டாலின் வேதனையுடன் கூறினார்.

தேனி மாவட்டம், ஊஞ்சாம்பட்டி கிராமத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "நம்முடைய தலைவர் கலைஞரிடத்தில் ஒரு பத்திரிகை நிருபர் ஒரு கேள்வியைக் கேட்டார், உங்கள் மகன் ஸ்டாலினைப் பற்றி ஒரு வரியில் சொல்லுங்கள் என்று, கலைஞர் சொன்னார், 'ஸ்டாலின் என்றால் உழைப்பு, உழைப்பு, உழைப்பு' என்று சொன்னார். அந்த உழைப்பைக் கற்றுக் கொடுத்தவரே அவர்தான். அப்படி உழைப்பதற்கு எனக்கு ஊக்கம் கொடுத்தவரே அவர்தான்.

எனக்கு மட்டும் இல்ல, தமிழ்நாட்டின் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கும் அதுதான் வழிகாட்டியாக அவர் விளங்கிக் கொண்டிருக்கிறார். ஆக, அவருடைய பிறந்தநாளான ஜுன் 3-ம் தேதியை அரசு விழாவாக நடத்திட வேண்டும் என்று சட்டமன்றத்தில் நான் அறிவித்து, எல்லா கட்சித் தலைவர்களும் அதை வரவேற்று, அதை நிறைவேற்றித் தந்திருக்கிறார்கள். ஆக, ஒரு தந்தையினுடைய பிறந்தநாளை அரசு விழாவாக நடத்த வேண்டும் என்று அறிவிக்கிற வாய்ப்பு அவருக்கு மகனாக இருக்கக்கூடிய இந்த ஸ்டாலினுக்கு கிடைத்திருப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

பி.ஜே.பி கூட ஆதரித்தது, எல்லா கட்சிகளும் ஆதரித்தார்கள். ஆதரிக்காத கட்சி யார் என்று இந்த மேடையில் நான் சொல்ல விரும்பவில்லை. இந்த மேடையை நான் அரசியலாக்க விரும்பவில்லை. கருணாநிதி என்று நம் தலைவர் முத்தமிழறிஞரின் பெயரைக் குறிப்பிட்டு, தலைவர் பெயரை கருணாநிதி என்று பெயரை சொன்ன காரணத்தால், அவருடன் காரிலே வந்த ஒருவரை இறக்கிவிட்டவர் யார் என்றால், முன்னாள் முதலமைச்சர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள். எனக்கே தலைவர் 'கலைஞர் தான், அவர் பெயரை நீ சொல்லலாமா என்று இறக்கி விட்டவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அப்படிப்பட்ட நாகரிகத்தை இன்றைக்கு இருக்கக்கூடியவர்களிடத்தில் எதிர்பார்ப்பது என்னுடைய தவறுதான். ஆனால் இதன் மூலமாக மக்களிடம் தாங்கள் யார் என்பதை அவர்கள் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

நல்லதோர் நாட்டை மட்டுமல்ல - நல்லதோர் நாகரிகமான அரசியலையும் உருவாக்க நாம் நினைக்கிறோம். அதற்குத் தேவை தொலைநோக்குப் பார்வையும் நல்லெண்ணமும் தான். எனது தொலைநோக்குப் பார்வை என்பது அனைத்திலும் சிறந்த தமிழ்நாடு என்ற பெயரை நாம் பெற வேண்டும். அனைத்திலும் சிறந்த தமிழ்நாட்டை உருவாக்குவதற்கு என்னை நான் ஒப்படைத்து செயல்படுவேன்" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in