`அன்று ஹாத்வே, இன்று அரசு கேபிளை பலி கொடுக்கிறது திமுக அரசு'- அண்ணாமலை காட்டம்

`அன்று ஹாத்வே, இன்று அரசு கேபிளை பலி கொடுக்கிறது திமுக அரசு'- அண்ணாமலை காட்டம்

`சுமங்கலி கேபிள் விஷன் போன்ற தங்கள் குடும்ப நிறுவனங்களின் வளர்ச்சிக்கு அன்று தனியார் நிறுவனங்களை பலி கொடுத்த திமுக, இப்போது அரசு கேபிள் நிறுவனத்தை பலி கொடுக்க நினைக்கிறது' என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை காட்டமாக விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், `தொடர்ந்து ஏழை எளிய பொதுமக்களை பாதிக்கும் வகையிலேயே இந்த திறனற்ற திமுக அரசு செயல்பட்டு வருகிறது. சுமார் 20 லட்சத்திற்கும் அதிகமான எளிய பொதுமக்களே வாடிக்கையாளர்களாக கொண்ட அரசு கேபிள் நிறுவனத்தின் ஒளிபரப்பில் கடந்த இரு நாட்களாக தடை ஏற்படுத்திருக்கிறார்கள். இந்த இரண்டு நாட்கள் நமது மக்களுக்கு மீண்டும் 2006- 2011 காலகட்ட கொடுங்கோல் குடும்ப ஆட்சியை நிச்சயமாக நினைவுபடுத்தி இருக்கும். பெருமளவில் வாடிக்கையாளர்களை வைத்திருந்த ஹாத்வே கேபிள் நிறுவனத்தின் கேபிள் கம்பிகளை அறுத்தெறிந்தும் அதைச் சார்ந்திருந்த கேபிள் ஆபரேட்டர்களை அடியாட்களை கொண்டு மிரட்டியும் இந்த நிறுவனத்தை தமிழகத்தை விட்டு விரட்டி கேபிள் தொழிலை தனது ஏகபோக உரிமையாக மாற்றிய திமுகவின் குடும்ப நிறுவனம் சுமங்கலி கேபிள் விஷன்.

தற்போது அரசு கேபிள் நிறுவனத்தையும் முடக்கி மீண்டும் கேபிள் தொழிலை ஒட்டுமொத்தமாக கைப்பற்ற முயற்சிப்பதும், அரசு கேபிள் ஒளிபரப்பில் தடைகளை ஏற்படுத்தி அதன் மூலம் அவர்களுக்கு திமுக அரசு உதவுவதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. சுமங்கலி கேபிள் விஷன் நிறுவனம் 1996-ம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டது. 2001-ம் ஆண்டுக்கு முன்னர் தமிழகத்தில் இருந்த ஒட்டுமொத்த கேபிள் இணைப்புகளில் 80 சதவிகிதம் சுமங்கலி கேபிள் விஷன் நிறுவனத்திடம் சென்றது. 2001-2006 காலகட்டத்தில் மீண்டும் ஹாத்வே 60 சதவிகித இணைப்புகள் பெற்று முன்னுக்கு வந்தது. 2006-2008 காலகட்டத்தில் கோபாலபுரம் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளால் சுமங்கலி கேபிள் நிறுவனம் முடங்கி கிடந்தது.

2008க்கு பிறகு மீண்டும் தலை தூக்கி சுமங்கலி கேபிள் விஷன் நிறுவனத்தின் அசுர வளர்ச்சிக்கு திமுக அரசு உதவியதால் நிறுவனம் 2010-ல் தமிழகத்தில் இனியும் தொழில் செய்வதில் எந்த பிரயோஜனமும் இல்லை என்று ஒட்டுமொத்த வணிக செயல்பாடுகள் நிறுத்திவிட்டது. தொடர்ந்து சுமங்கலி கேபிள் விஷன் போன்ற தங்கள் குடும்ப நிறுவனங்களின் வளர்ச்சிக்கு இதற்கு முன்னர் தனியார் நிறுவனங்களை பலி கொடுத்த திமுக, இப்போது அரசு நிறுவனத்தை பலி கொடுக்க நினைக்கிறது. திறனற்ற திமுக அரசு இந்த மக்கள் விரோத போக்கை தமிழக பாஜக வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்காது என்பதை அழுத்தமாக தெரிவித்துக் கொள்கிறேன்' என்று கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in