‘காணொலிக் காட்சியிலிருந்து வெளியே வாங்க முதல்வரே..’ -வி.பி.துரைசாமி விளாசல்!

‘காணொலிக் காட்சியிலிருந்து வெளியே வாங்க முதல்வரே..’  -வி.பி.துரைசாமி விளாசல்!
கட்சியினருடன் பாஜக மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சியின் 17 வார்டுகளில், பாஜக வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களை ஆதரித்து தமிழக பாஜக துணைத்தலைவரும், முன்னாள் துணை சபாநாயகருமான வி.பி.துரைசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’திமுக ஆட்சி, முதல்வர் ஸ்டாலின் செயல்பாடு, தேர்தல் வாக்குறுதிகள், பொங்கல் பரிசு, பாஜக அலுவலகம் மீதான தாக்குதல்’ உள்ளிட்ட பலவற்றையும் தொட்டு விரிவாக விளாசினார்.

உலகத்தையே உலுக்கி எடுத்த கரோனா தொற்றுநோய் தமிழகத்தில் குறைந்து விட்டது என்று நேற்றைய தினம் தமிழக முதல்வர் மற்றும் அவருக்கு உறுதுணையாக உள்ள அதிகாரிளும் முடிவெடுத்து அறிவித்து விட்டார்கள். இந்த நிலையிலாவது தமிழக முதல்வர் காணொலிக் காட்சி மூலமாக ஆதரவு கேட்பதை விட்டு, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை போல மக்களை நேரில் சந்தித்து ஆதரவு கேட்க வேண்டும்.

இரு தினங்களுக்கு முன்னர் பெட்ரோல் குண்டு வீச்சு தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் நடந்தது. பெட்ரோல் குண்டு வீசிய சில மணித்துளிகளில், தமிழக காவல்துறை அதிகாரிகள் அடையாளங்களை அழிக்க தொடங்கினார்கள். இந்நிலையில்தான் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, என்ஐஏ விசாரணை கோரியிருக்கிறார். தேசிய புலனாய்வு அதிகாரிகள் களமிறங்கி, பெட்ரோல் குண்டு வீச்சின் பின்னணி குறித்தும், குற்றவாளி மற்றும் அவருக்கும் வெளிநாட்டினருக்கும் உள்ள தொடர்பு ஆகியவை குறித்து கண்டறிய வேண்டுகோள் வைத்திருக்கிறார். இது சம்பந்தமாக மத்திய உள்துறை அமைச்சருடன் அண்ணாமலை பேசிக்கொண்டிருக்கிறார்.

சட்டம் ஒழுங்கு என்பது தமிழ்நாட்டில் மோசமாகிவிட்டது. தமிழகத்தில் ஏறத்தாழ 600 கொலைகள் நடந்துள்ளன. அந்த வகையில் தமிழகம் இந்தியாவில் முதல் இடத்தில் இருக்கிறது. கழுத்தை தனியாக வெட்டி சாலையில் எடுத்துச்செல்வது சாதாரணமாகி இருக்கிறது. தூத்துக்குடி, திண்டுக்கல் பகுதியில் ஆரம்பித்து இன்று தமிழகம் முழுவதும், இதுபோன்ற கோரக் கொலைகள் நடைபெற்று வருகிறன.

எங்களுக்கும் திமுகவுக்கும் வரப்பு வாய்க்கால் தகராறோ பணத் தகராறோ கிடையாது. தேர்தல் காலத்தில் வழங்கிய 520 வாக்குறுதிகளை ஏன் நிறைவேற்றவில்லை என்று எதிர்கட்சிகள் கேட்காமல் இருப்பார்களா? குறிப்பாக குடும்பத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய் தருவதாக சொன்னார்கள். யாருக்கும் இதுவரை ஒரு பைசா கிடைக்கவில்லை. நகைக்கடன் தீர்ப்பதில் முதல் கையெழுத்து என்று சொன்னார்கள். இந்த 8 மாத காலத்தில் 8 பேர் கூட அந்த பலனை அனுபவிக்கவில்லை.

விவசாயக் கடனை தீர்ப்பதாக சொன்னார்கள். உற்பத்தி செய்த நெல்லை கொள்முதல் செய்யாமல் அத்தனை மூட்டைகளும் வீணானது. கொள்முதல் கொள்கையில் என்ன மாறுபாடு என்று தெரியவில்லை. ரொக்கம் சேர்க்காத, பொங்கல் பரிசு வழங்கலில் மாபெரும் ஊழல் நடந்துள்ளது. மிளகுக்கு பதிலாக பப்பாளி விதைகளையும், மிளகாய் பொடிக்கு பதிலாக செங்கல்பொடியையும், மாடுகூட சாப்பிட இயலாத அரிசியையும் வழங்கினார்கள்.

ஆனால் மத்திய அரசு, விவசாயிகள் உற்பத்தி செய்த நெல்லுக்கு கட்டுப்படியாகும் விலையை நிர்ணயம் செய்தது. 75 ஆண்டுகால இந்தியாவில் வரி போடாமல் 140 கோடி மக்களுக்கு ஒரு பட்ஜெட் கொடுத்தது மோடி அரசாங்கம். நீங்களும்(திமுக) பட்ஜெட் கூட்டம் நடத்த இருக்கின்றீர்கள். ஒரு பைசாகூட வரியில்லாது நீங்கள் பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டும். வரியில்லா பட்ஜெட் தந்த மத்திய அரசு 350 பொருட்களுக்கு விலையை குறைத்து உள்ளது. அதேபோல் நீங்களும் விலையை குறைக்க வேண்டும். பெட்ரோல், டீசலுக்கு பத்து ரூபாயை மத்திய அரசாங்கம் குறைத்து கொடுத்தது போல, நீங்களும் குறைத்து மக்களுக்கு உதவி செய்ய வேண்டும்.

நீட் தேர்வை பொறுத்தவரை, மத்திய இணையமைச்சராக இருந்த காந்திசெல்வன் கொண்டு வந்த சட்டத்தை, உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு தேர்வு நடத்த உத்தரவிட்டது. நீட் தேர்வை பாஜக நடத்துவது போல் எங்கு போனாலும் பாஜகவை தாக்கி முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார். நீட் தேர்வு என்பது அவசியமானது. நீட் தேர்வு தீர்மானத்தில் கவர்னர் கூறியவற்றை திருத்தம் செய்யாமல், மீண்டும் அதே தீர்மானத்தை திருப்பு அனுப்பி உள்ளனர்” என்றார் வி.பி.துரைசாமி.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in