`பெரியாரின் பேரன் ஜக்கம்மா மீது முழு நம்பிக்கை வைத்துள்ளார்'- வீடியோ வெளியிட்டு ஈவிகேஎஸ்ஸை கிண்டல் செய்த அண்ணாமலை

`பெரியாரின் பேரன் ஜக்கம்மா மீது முழு நம்பிக்கை வைத்துள்ளார்'- வீடியோ வெளியிட்டு ஈவிகேஎஸ்ஸை கிண்டல் செய்த அண்ணாமலை

பெரியாரின் பேரன் ஜக்கம்மா மீது முழு நம்பிக்கை வைத்துள்ளார் என்று வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை விமர்சனம் செய்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஈவேரா திருமகன் உடல் நலக்குறைவால் இறந்ததை அடுத்து அந்த தொகுதிக்கு தற்போது இடைத்தேர்தல் நடைபெறுகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈபிகேஎஸ் இளங்கோவனுக்கும் அதிமுக சார்பில் போட்டியிடும் தென்னரசுக்கும்தான் நேரடி போட்டி நிலவுகிறது. வரும் 27-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மொத்தம் 96 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ள நிலையில் 83 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

இதனிடையே, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தற்போது பிரச்சாரம் சூடுப்பிடிக்க தொடங்கியிருக்கிறது. அதிமுகவில் ஓபிஎஸ்- ஈபிஎஸ் இடையே வேட்பாளர்கள் போட்டியிடுவதில் இருந்த பிரச்சினை தற்போது முடிவுக்கு வந்துவிட்டதால் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடு வீடாக சென்று வாக்குகளை சேகரித்து வருகின்றனர். முன்னாள் அமைச்சர் உதயகுமார் டீக்கடையில் டீ போட்டு வாக்கு சேகரித்து வருகிறார். அதேபோல் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பரோட்டா கடையில் பரோட்டா அடித்து வாக்குகளை சேகரித்து வருகிறார். தொகுதியில் ஒவ்வொரு நாளும் விசித்திரமான முறையில் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தமிழக பாஜக அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில், திமுக கூட்டணி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அமர்ந்திருக்கும் நிலையில் குடுகுடுப்புக்காரர் ஒருவர், பரிசுத்தமானவரு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் என்று ஜக்கம்மா சொல்றா, ஜக்கம்மா சொல்றா என்றும் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் வந்ததுக்கு பிறகு கொள்ளை இல்லாத ஒரு நல்லாட்சி நடப்பதாக ஜக்கம்மா சொல்றா, ஜக்கம்மா சொல்றா என்றும் இந்தத் தொகுதியில் கை சின்னத்துக்கு வாக்களியுங்கள் என்று ஜக்கம்மா சொல்றா, ஜக்கம்மா சொல்றா என்றும் இந்த தொகுதியில் ஒவ்வொரு வீட்டிலும் எத்தனை பேர் இருக்கிறாங்க என்று சரியாக ஈ.பி.கே.எஸ்.இளங்கோவன் கணித்து வைத்திருக்கிறார் என்று ஜக்கம்மாக சொல்றா, சொல்றா என்றும் கூறுகிறார்.

அடுத்த வீடியோவில், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அருகில் குடுகுடுப்புக்காரர் நின்றபடி, தமிழக முதலமைச்சர் இல்லம் தேடி கல்வி கொடுத்து இருக்கிறார் என்று ஜக்கம்மா சொல்றா, ஜக்கம்மா சொல்றா என்றும் இந்த தொகுதியில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கை சின்னத்தில் ஜெயிப்பார் என்று ஜக்கம்மா சொல்றாஇ ஜக்கம்மா சொல்றா என்றும் மு.க.ஸ்டாலின் முதல்வராக வந்த பிறகு பெண்கள் எல்லாம் இலவசமாக பஸ்ல போறாங்க என்று ஜக்கம்மா சொல்றா, ஜக்கம்மா சொல்றா என்றும் அந்த குடுகுடுப்புக்காரர் கூறுகிறார்.

இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, திமுக தனது பிரச்சாரத்திற்கு ஜக்கம்மாவை பயன்படுத்தி வருகிறது என்றும் பெரியாரின் பேரன் ஜக்கம்மா மீது முழு நம்பிக்கை வைத்துள்ளார் என்றும் விமர்சனம் செய்து இருக்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in