
மேற்கு வங்க ஆசிரியர் பணி நியமன ஊழல் வழக்கில் திரிணமூல் காங்கிரஸ் இளைஞர் பிரிவு நிர்வாகி குண்டல் கோஷை, இரண்டு நாட்கள் தொடர் விசாரணைக்குப் பின்னர் அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.
ஹூக்லியைச் சேர்ந்த குண்டல் கோஷ் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் பிரிவு நிர்வாகியாக உள்ளார். ஆசிரியர் பணி நியமன முறைகேடு வழக்கில் அவரிடம் நடத்தப்பட்ட 2 நாள் விசாரணைக்குப் பின்னர், நேற்று அவரது 2 குடியிருப்புகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அதனைத் தொடர்ந்து அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
சிபிஐ அறிக்கையின்படி, 2014 மற்றும் 2021 க்கு இடையில் மேற்கு வங்கம் முழுவதும் அரசு நடத்தும் பள்ளிகளில் ஆசிரியர்களையும், ஊழியர்களையும் பணியமர்த்துவதற்காக திரிணமூல் தலைவர்கள் ரூ.100 கோடிக்கு மேல் திரட்டியதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் தனியார் நடத்தும் கல்லூரிகள் மற்றும் நிறுவனங்களின் சங்கத்தின் தலைவராக இருந்த தபஸ் மொண்டல், சிபிஐ விசாரணையின் போது குண்டல் கோஷ் வேலை தேடுபவர்களிடமிருந்து பணம் பெற்றதாக குற்றம் சாட்டியிருந்தார்.
கடந்த ஆண்டு, முன்னாள் மாநில கல்வி அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி, 9 முதல் 12ம் வகுப்புகளுக்கான ஆசிரியர் ஆட்சேர்ப்பு முறைகேட்டில் கைது செய்யப்பட்டார். அதன்பின்னர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திரிணமூல் எம்எல்ஏ மாணிக் பட்டாச்சார்யா ஆசிரியர் பணிநியமன முறைகேடு வழக்கில் கைதானார். தற்போது 3 வது நபராக குண்டல் கோஷ் இந்த வழக்கில் கைதாகியுள்ளதால் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடும் அதிர்ச்சியில் உள்ளார்.