‘டிசம்பர் மாதத்துக்கு பிறகு மேற்கு வங்கத்தில் மம்தாவின் ஆட்சி இருக்காது’ - அனல் கிளப்பும் பாஜக தலைவர்

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

மேற்கு வங்கத்தில் டிசம்பர் மாதத்துக்குள் திரிணமூல் காங்கிரஸ் அரசு வெளியேறிவிடும் என்று பாஜக தலைவர் சுவெந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்திடம் பேசிய சுவெந்து அதிகாரி, “ சில மாதங்கள் பொறுத்திருங்கள், எனது வார்த்தைகளைக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். இந்த ஆண்டு டிசம்பருக்குள், மேற்கு வங்கத்தில் திரிணமூல் ஆட்சி இருக்காது. 2024 ல் சட்டமன்றத் தேர்தலும் நாடாளுமன்றத் தேர்தலும் ஒரே நேரத்தில் மேற்கு வங்கத்தில் நடைபெறும் ” என்று கூறியுள்ளார்

ஊழல் மற்றும் சட்டம் ஒழுங்கு நிலைமை சீர்குலைந்த காரணத்தால் ஜார்கண்ட், ராஜஸ்தான், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் மகாராஷ்டிராவை போன்ற சூழல் ஏற்படும் என்று சுவெந்து அதிகாரி தொடர்ந்து கூறி வருகிறார்.

மேற்கு வங்கத்தில் 294 உறுப்பினர்களை கொண்ட சட்டசபையில் மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸுக்கு 215 எம்எல்ஏக்கள் உள்ளனர். மறுபுறம், பிஜேபிக்கு 71 உறுப்பினர்கள் உள்ளனர். 2021 சட்டமன்ற தேர்தலில் முதலில் பாஜக 77 இடங்களை வென்றது, ஆனால் பிறகு 6 எம்எல்ஏக்கள் பாஜகவிலிருந்து விலகி திரிணமூல் காங்கிரஸில் இணைந்தனர். அதன்பின்னர் நடந்த உள்ளாட்சித் தேர்தல்கள், மக்களவை மற்றும் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களிலும் பாஜக படுதோல்வியை சந்தித்து வருகிறது.

சமீபத்தில், மேற்குவங்க அமைச்சராக இருந்த பார்த்தா சாட்டர்ஜியின் உதவியாளர் அர்பிதா முகர்ஜியின் வீட்டில் இருந்து அமலாக்கத்துறை அதிகளவில் பணத்தை கைப்பற்றியது. இதனால் பார்த்தா சாட்டர்ஜி கைது செய்யப்பட்டார். எனவே மம்தா பானர்ஜி கடுமையான நெருக்கடியில் சிக்கியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in