ஆஸ்கர் ‘அறை’யை வைத்து ‘அச்சே தின்’ குறித்து கிண்டல்!

பாஜகவை வாரும் திரிணமூல் காங்கிரஸ்
ஆஸ்கர் ‘அறை’யை வைத்து ‘அச்சே தின்’ குறித்து கிண்டல்!

இன்று ஏப்ரல் 1-ம் தேதி என்பதால் நண்பர்களுக்குள் முட்டாள் தினத்தை முன்னிட்டு கிண்டல் செய்துகொள்வது பலருக்கு வழக்கமாக இருக்கலாம். எனினும், கிண்டல் செய்வது தனிநபர்களுக்கு மட்டுமே சொந்தமா என்ன? அரசியல் கட்சிகளுக்கும் அது ஆயுதம்தானே!

அந்த வகையில், பல ஆண்டுகளாக பாஜக முன்னெடுத்துவரும் ‘அச்சே தின்’ (நல்ல நாட்கள்) முழக்கத்தை, வில் ஸ்மித் பாணியில் முகத்திலடித்தாற்போல் கிண்டல் செய்திருக்கிறது திரிணமூல் காங்கிரஸ் கட்சி. பாஜக ஆட்சியில் எந்நாளும் நன்னாளாக இருக்கும் எனும் நம்பிக்கையை மக்களிடம் விதைப்பதற்காக ‘அச்சே தின்’ எனும் முழக்கத்தை மோடி தொடங்கி பல பாஜக தலைவர்கள் முன்னெடுக்கிறார்கள்.

இந்நிலையில், ஆஸ்கர் விருது விழாவில், தன் மனைவி ஜேடா ஸ்மித்தின் தலைமுடி உதிர்வு பிரச்சினையை உணராமல் கிண்டலாகப் பேசிய நடிகர் கிறிஸ் ராக்கின் கன்னத்தில் அறைந்தார் நடிகர் வில் ஸ்மித். கடந்த சில நாட்களாகப் பேசுபொருளாகியிருக்கும் அந்தச் சம்பவத்தை வைத்து அதிரடி மீம்ஸை ட்விட்டரில் வெளியிட்டிருக்கிறது திரிணமூல் காங்கிரஸ் கட்சி. அதில், அறை வாங்கும் கிறிஸ் ராக்கின் மீது ‘அச்சே தின்’ எனும் வார்த்தைகளும், அடி கொடுத்த வில் ஸ்மித்தின் மீது ’ஏப்ரல் ஃபூல் முட்டாள்கள் தினம்’ எனும் வார்த்தைகளும் எழுதப்பட்டிருக்கின்றன.

5 மாநிலத் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டர் விலை கடுமையாக உயர்ந்திருக்கும் நிலையில், மோடி அரசை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்துவருகின்றன. அதை முன்வைத்து இப்படி கிண்டல் செய்திருக்கிறது திரிணமூல் காங்கிரஸ்.

பாஜகவின் கொள்கை முடிவுகள் மக்களுக்கு எதிராக அமைகின்றன எனக் கூறி கொல்கத்தாவின் கோல்பார்க் பகுதியில், மார்ச் 30-ல் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் பேரணி நடத்தினர். அதில் கலந்துகொண்ட அக்கட்சியினர் பலர் காலி சிலிண்டர்களையும், பெட்ரோல் கேன்களையும் கொண்டுவந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in