
திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரியில், ஆயுத பூஜைக்கு மதம் சார்ந்த படம் சிலையைப் பயன்படுத்தக் கூடாது என சுற்றறிக்கை வெளியான நிலையில் அது உண்மையானது அல்ல என கல்லூரி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
ஆயுதபூஜை தினத்தன்று சாமி படங்கள், சிலை வைப்பது தொடர்பாக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் அனுப்பியதாக சுற்றறிக்கை ஒன்று சமீபத்தில் வெளியானது. அதில், எதிர்வரும் ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை கொண்டாடும் நிகழ்வில் எந்த மதத்தையும் சேர்ந்த சாமி படங்களோ, சிலைகளோ பயன்படுத்தக்கூடாது என அறிவுறுத்தப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் அலுவலகங்கள் மற்றும் மருத்துவமனை வார்டு பிரிவுகளில் ஏதேனும் சாமி படம், சிலைகள் இருப்பின், எதிர்கால பிரச்சினைகளைத் தவிர்க்கும் பொருட்டு உடனடியாக அகற்றி விட அறிவுறுத்தப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த சுற்றறிக்கையில் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வரின் கையெழுத்தும் இருந்ததால் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பாஜக நிர்வாகி நாராயணன் திருப்பதி கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இது குறித்து விளக்கம் அளித்துள்ள கல்லூரி நிர்வாகம், மருத்துவக் கல்லூரி சார்பில் எந்த சுற்றறிக்கையும் அனுப்பவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தவறான செய்தி சமூக வலைதளங்களில் பரப்பப்படுகிறது எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.