மதிமுகவை வாரிசுக்கான கட்சியாக மாற்றிய வைகோவிடம் தான் உள்நோக்கம் உள்ளது!

- திகு திகுக்கும் திருப்பூர் துரைசாமி
வைகோவுடன் திருப்பூர் துரைசாமி
வைகோவுடன் திருப்பூர் துரைசாமி

தமிழக அரசியலில் தடம் தெரியாமல் இருந்த மதிமுக என்ற கட்சியை தமிழக மக்களை பரபரப்பாக பேச வைத்திருக்கிறார் அக்கட்சியின் அவைத்தலைவராக இருந்த திருப்பூர் துரைசாமி. அண்ணா காலத்திலிருந்தே அரசியலில் இருந்துவரும் அவர் அண்மைக்காலமாக மதிமுகவில் புறக்கணிக்கப்பட்டும், ஒதுங்கியும் இருந்து வந்தார். இந்நிலையில் திடீரென்று வைகோவுக்கு அவர் எழுதிய கடிதத்தால் பரபரப்பு தொற்றி, அவராகவே அரசியலில் இருந்து ஒதுங்கும் நிலைக்கு ஆளானார்.  

அவரது இந்த திடீர் அவதாரம், வைகோ மீதான கோபம், அரசியல் துறவறம் ஆகியவை குறித்து அவரிடம் பேசினோம். 

உங்களது இந்தக் கோபம், கடிதம்,  விலகல் முடிவுகளுக்கு என்ன காரணம்?

கடந்த இரண்டு ஆண்டுகளாக மதிமுகவில் நடைபெறும் சம்பவங்களால் வெட்கப்படவும் வேதனைப்படவும் வேண்டியுள்ளது. கட்சியின் செல்வாக்கு முற்றிலும் சரிந்த நிலையில், மக்களவைத் தேர்தலில் மதிமுகவுக்கு எத்தனை இடங்கள் ஒதுக்குவார்கள் என்று தெரியாத நிலையில் விருதுநகர் மாவட்ட கழகம் சார்பில் விருதுநகர் மக்களவைத் தொகுதியில் இவர்தான் போட்டியிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள். அவரே இங்கும் போட்டியிட வேண்டுமென திருச்சி, திண்டுக்கல் மாவட்டங்களிலும் தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள். 

கட்சியின் விதிகளின்படி கிளைக்கு நூறு உறுப்பினர்கள் இருந்தால் தேர்தல் நடத்தித் தான் கிளை நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட வேண்டும். ஆனால், கட்சியின் நிர்வாகமோ போலி ஆதார் அட்டை, விவரங்களை வைத்து பினாமியாக கிளை தேர்தல் நடத்தி, நிர்வாகிகளை தேர்வு செய்து, உறுப்பினர்கள் அதிகமாகிவிட்டதாக கணக்கு காண்பிக்கின்றனர். இந்த நியாயத்தைப் பேசினால் அதற்கு விளக்கம் கொடுக்காமல் எங்கள் மீது குழப்பவாதி என பழி போடுகிறார்கள். 

ஈரோடு மற்றும் திருப்பூர் வார்டுகளில் போலியான பெயர்களில் உறுப்பினர்களைப் பதிவு செய்து, உள்கட்சி தேர்தல்களை நடத்தி முடித்துள்ளார்கள். கொங்கு மண்டலத்திலேயே மதிமுகவின் நிலை இதுவென்றால் வேறு மாவட்டங்களைப் பற்றிச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. 

எந்தக் குடும்ப அரசியலுக்கு எதிராக அன்றைக்குத் தொண்டர்களை தூண்டினாரோ, இன்று அதற்கு முற்றிலும் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுப்பதும்,  மகனை ஆதரித்து அரவணைப்பதுமான வைகோவின் சந்தர்ப்பவாத அரசியல் பொது வெளியில் மதிமுகவை பார்த்து மக்கள் எள்ளி நகையாடும்படி வைத்துவிட்டது.  தியாகத்துக்காகவும், லட்சியத்துக்காகவும் துவங்கப்பட்ட இயக்கம் மதிமுக. ஆனால், அதன் நோக்கத்தை மறந்துவிட்டு, மறைத்துவிட்டு வாரிசு அரசியலை ஊக்குவிப்பதை எப்படி ஏற்க முடியும்? 

கட்சி முறைப்படியாக,  ஜனநாயக ரீதியாக,  சட்ட திட்டங்களின்படி செயல்படவில்லை. ஜனநாயக முறைப்படி கட்சி நடப்பதாக காட்டிக் கொள்கிறார்களே தவிர, கட்சியில் கொஞ்சம் கூட ஜனநாயகம் இல்லை. மதிமுக என்ற இயக்கத்துக்கு  எதிர்காலம் என்பதே இல்லாமல் போய்விட்டது.  அதில் ஜனநாயகம் இல்லை.  அதை சுட்டிக்காட்டி கடிதம் எழுதினாலும், நேரடியாக பேசினாலும் எந்த பயனும் இல்லை. அதனால்தான் இந்த முடிவுக்கு வர நேர்ந்துள்ளது.

மகன் துரையுடன் வைகோ
மகன் துரையுடன் வைகோ

வைகோவுக்கு நீங்கள் எழுதிய கடிதம் எந்த சூழ்நிலையில் எழுதப்பட்டது? 

கட்சியில் இருக்கக்கூடிய இளைஞர்களின் எதிர்காலம் கருதித்தான் அந்தக் கடிதத்தை எழுதினேன். அவருடைய உணர்ச்சிகரமான உரையைக் கேட்டு கட்சிக்கு வந்த இளைஞர்கள் பலர் தங்கள் வாழ்க்கையை தொலைத்து விட்டிருக்கிறார்கள்.  இனியும் அவர்கள் அப்படி இருக்கக் கூடாது என்பதால் தான் கட்சியை திமுகவுடன் இணைத்து விட வேண்டும் என்று கூறினேன். 

உங்களுடைய கடிதத்தை வைகோ நிராகரிப்பதாக கூறியுள்ளாரே? 

என்னுடைய கடிதங்களுக்கு வைகோவால் பதிலளிக்க முடியவில்லை. அதன் காரணமாகவே கடிதத்தை நிராகரிப்பதாகவும் உதாசீனப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

தொழிற்சங்க சொத்துகள் குறித்து உங்கள் மீது குற்றம் சாட்டப்படுகிறதே? 

தொழிற்சங்கத்தினுடைய அனைத்து சொத்துகளும் தொழிற்சங்கத்தின் செயலாளர் மற்றும் பொருளாளர் பெயரில்தான் உள்ளது. எப்பவும் யாருமே தன்னுடைய தனிப்பட்ட பெயரில் அதை நிர்வகித்துக்கொள்ள முடியாது. நிதிச் செலவினங்களை பொருளாளர் மட்டும்தான் செய்ய முடியும். என் பெயரில் எந்தச் சங்கமும் இல்லை. என்னால் எந்தச் சொத்தையும் அபகரிக்க முடியாது. ஆனால், மதிமுக என்ற கட்சியின் பொருளாளர் கட்சியின் காசோலைகளில் கையெழுத்திட முடியாது. கட்சியின் வரவு செலவு, கையிருப்பு, சொத்து மதிப்பு எல்லாமே வைகோவுக்குத்தான் தெரியும். 

கட்சிக்காக தாயகம் கட்டிடத்தை வாங்கிய வைகோ, அதை தன் பெயருக்கு எழுதிக்கொண்டார்.  அதேபோல கட்சியின் அனைத்து நிதி பரிவர்த்தனைகளையும் அவரே கையெழுத்துப்போட்டு செய்து கொள்கிறார். கண்ணப்பன் பொருளாளராக இருந்தபோது செக் புத்தகத்தில் கையெழுத்திடும்  உரிமை இருந்தது.  ஆனால், அதற்கு பிறகு வந்த மாசிலாமணி, கணேசமூர்த்தி ஆகியோர் செக் புத்தகத்தை கண்ணால்கூட பார்த்ததில்லை.

கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாகவே எதிலும் கண்டுகொள்ளாமலும், அவை தலைவராக செயல்படாமலும் இருந்துவிட்டு இப்போது நீங்கள் திடீரென்று பிரச்சினையை கிளப்பிருப்பதற்கு என்ன காரணம்? 

கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நான் இதையெல்லாம் வலியுறுத்திப் பேசியிருக்கிறேன். அதற்குப் பிறகு ஜூன் மாதத்தில் நடந்த கூட்டத்திலும் இது குறித்துப் பேசியிருக்கிறேன். அதன்பிறகு எந்தக் கூட்டமும் நடக்கவில்லை. அதனால்  தொடர்ந்து பொதுச் செயலாளருக்குக்  கடிதங்கள் எழுதி கட்சி விவகாரம் குறித்து பேசிக்கொண்டு தான் இருந்தேன். அதையெல்லாம் அவர் கண்டுகொள்ளவில்லை. 

இதையெல்லாம் நீங்கள் வைகோவிடமே  தனிப்பட்ட முறையில் பேசியிருக்கலாமே?  அதை விடுத்து கூட்டத்திலும் கடிதம் வாயிலாகவும் விமர்சிப்பது சரிதானா? 

நேரடியாகவும் பலமுறை கூறிவிட்டேன். தவறுகள் குறித்து சுட்டிக்காட்டி விட்டேன்.  அவர்கள் கேட்பதாக இல்லை; திருந்துவதாக இல்லை. வேறு என்ன செய்வது? 

தலைமை நிலையச் செயலாளராக துரை வைகோ நியமிக்கப்பட்டதுதான் உங்களுடைய வருத்தத்திற்கு காரணமா? 

2021-லேயே வைகோவிடம் சொல்லிவிட்டேன். வாரிசு அரசியலை எதிர்த்துக் கட்சியை ஆரம்பித்துவிட்டு, மகனுக்குப் பதவி கொடுத்தால் கெட்ட பெயர் வரும் என்று சொன்னேன்; கேட்கவில்லை. பிறகு அதைப்பற்றி வருத்தப்பட என்ன இருக்கிறது.  அதெல்லாம் ஒன்றும் கிடையாது. கட்சி ஜனநாயக ரீதியாக செயல்படவில்லை, அமைப்பு ரீதியாக சரியாக இல்லை என்பது தான் என்னுடைய வருத்தம். 

அதற்காக, கட்சியை திமுகவில் இணைத்துவிட வேண்டும் என்று நீங்கள் சொல்லி இருப்பதெல்லாம் கொஞ்சம் ஓவர் டோஸ் இல்லையா? 

கட்சியில் இப்போது கணேசமூர்த்தி எம்பி ஆக இருக்கிறார்.  அவர் எந்த கட்சி எம்பியாக இருக்கிறார்?  நான்கு எம்எல்ஏ-க்கள் இருக்கிறார்கள்.  அவர்கள் எந்தக் கட்சியின் எம்எல்ஏ-க்களாக இருக்கிறார்கள்?  திமுக எம்எல்ஏ-க்களாகத்தானே இருக்கிறார்கள். அதனால்தான் திமுகவில் கொண்டு போய் இணைத்துவிடச் சொல்கிறேன். அது மட்டுமில்லாமல் திமுகவை தவிர உருப்படியான அரசியல் கட்சி என்று தற்போது வேறெதுவும் இல்லை. 

நீங்கள் ஏதோ உள்நோக்கத்தோடு தான் இப்படி பேசுகிறீர்கள்... செயல்படுகிறீர்கள் என்று சொல்கிறார்களே? 

கழகத்தில் ஜனநாயகத்தை வலியுறுத்தும் எனக்கு எந்த உள்நோக்கமும் இல்லை. தியாக இயக்கம் எனப் பெயரெடுத்த மதிமுகவை வாரிசுக்கான கட்சியாக மாற்றிய வைகோவிடம்தான் உள்நோக்கம் உள்ளது என்பது கடைசித் தொண்டனுக்கும் தெரியும்.

அதுமட்டுமில்லாமல் எனக்கு என்ன உள்நோக்கம் இருக்கப்போகிறது?  இனிமேல் நான் கட்சியில் நின்று எம்எல்ஏ ஆக போகிறேனா? அல்லது எம்பியாகப் போகிறேனா?  எதுவும் எனக்குத் தேவையில்லை. கட்சி அடிப்படை ரீதியாக வலுவாக இருக்க வேண்டும்,  ஜனநாயக ரீதியில் செயல்பட வேண்டும் என்பதற்காகத்தான் இதையெல்லாம் பேசுகிறேன்.  

ஆதரவாளர்களுடன் திருப்பூர் துரைசாமி
ஆதரவாளர்களுடன் திருப்பூர் துரைசாமி

மதிமுகவுக்கு எதிர்காலம் இல்லை என்கிறீர்கள்... அப்படியென்றால் வைகோ, துரை வைகோ எதிர்காலம்? 

அப்படி எதுவும் இருப்பதாக தெரியவில்லை. 

கட்சியில் இருந்து உங்களை நீக்க வேண்டும் என்ற கருத்து எழுந்தது குறித்து..?

மதிமுக என்ற ஒன்றே தற்போது இல்லை. பிறகு எப்படி தீர்மானம் நிறைவேற்ற முடியும்.  போலி உறுப்பினர்களைக் கொண்டு தீர்மானம் நிறைவேற்றுவது செல்லாது. ஆனாலும் அவர்களுக்கு அந்த வேலையை வைக்க நான் விரும்பவில்லை. நானே ஒதுங்கிக் கொண்டுவிட்டேன். 

திருப்பூர் துரைசாமி
திருப்பூர் துரைசாமி

அடுத்து என்ன செய்யப் போகிறீர்கள்? 

பெரியார், அண்ணா ஆகியோரின் கொள்கை வழியில் செயல்பட போகிறேன்.  அதற்கு தீவிர அரசியலில் இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை.  ஏதோ ஒரு கட்சி சார்ந்து இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. ஆனால், நிச்சயம் பொதுவாழ்வில் இருப்பேன்! 

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in