திருப்பத்தூர் நகர பாஜக நிர்வாகி வெட்டிக்கொலை: காரில் கடத்திச் சென்ற கும்பல் குறித்து தீவிர விசாரணை

கலிகண்ணன்.
கலிகண்ணன்.

திருப்பத்தூரில் பாஜக நகர துணைத்தலைவர் கடத்தி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் அடுத்த கலைஞர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி மகன் கலிகண்ணன் (45). இவர் திருப்பத்தூர் நகர பாஜக துணைத்தலைவராக பொறுப்பு வகித்து வந்தார். இவர் திருப்பத்தூர் செட்டித்தெருவில் வாட்டர் கேன் விநியோகம் செய்யும் கடை வைத்திருந்தார்.

நே்ற்று இரவு இவர் கடையில் இருந்துள்ளார். அப்போது அங்கு காரில் வந்த ஒரு கும்பல் கலிகண்ணனை கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள வேப்பாலம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கிரஷர் நிறுவனம் அருகே ஆள் நடமாட்டமில்லாத பகுதியில் இன்று ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.

இதன் பேரில், ஊத்தங்கரை டிஎஸ்பி அமல அட்வின், காவல் ஆய்வாளர் பார்த்திபன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்த்த போது, கொலை செய்யப்பட்டுக் கிடந்தது திருப்பத்தூர் நகர பாஜக துணை தலைவர் கலிகண்ணன் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி சரோஜ்குமார் தாகூர், நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.

இந்த கொலை சம்பவம் குறித்து, ஊத்தங்கரை போலீஸார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், கலிகண்ணனை மர்மநபர்கள் வெட்டிக் கொன்று, சடலத்தை வேப்பாலம்பட்டி பகுதியில் போட்டு சென்றது தெரியவந்தது. இதனை அடுத்து, கலிகண்ணன் எதற்காக கொலை செய்யப்பட்டார், அவரை கொன்றவர்கள் யார் என்பது குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். பாஜக நிர்வாகி கடத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in