ஆம் ஆத்மி மீது இறுகும் பிடி: மணீஷ் சிசோடியா மீதான குற்றச்சாட்டுகள் என்ன?

ஆம் ஆத்மி மீது இறுகும் பிடி: மணீஷ் சிசோடியா மீதான குற்றச்சாட்டுகள் என்ன?

புதிய கலால் கொள்கையில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் வீடு உட்பட 21 இடங்களில் மத்திய புலனாய்வு சிபிஐ சோதனை நடத்தி வருகிறது.

டெல்லி கலால் வரிக் கொள்கையில் முறைகேடுகள் நடந்ததாக இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மணீஷ் சிசோடியா வீடு மட்டுமின்றி

முன்னாள் கலால் ஆணையர் அரவ கோபி கிருஷ்ணா, ஐஏஎஸ் அதிகாரி ஆகியோரின் வீடுகளிலும் சிபிஐ சோதனை நடத்துகிறது.

குற்றச்சாட்டு என்ன?

கடந்த ஆண்டு நவம்பரில் டெல்லியில் புதிய கலால் வரிக் கொள்கையானது அறிமுகப்படுத்தப்பட்டது. இக்கொள்கை மூலமாக மதுபான விற்பனையை தனியாரிடம் ஒப்படைத்ததுடன், அரசு நடத்தும் அனைத்து மதுபானக் கடைகளையும் மூடியது. மேலும் தனியார்கள் மதுக்கடைகளை திறக்க லைசென்ஸ்களையும் அரசு வழங்கியது.

புதிய கலால் கொள்கைகளுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் ஜூலை 30 அன்று, மணீஷ் சிசோடியா இக்கொள்கைகளை திரும்பப் பெறுவதாக அறிவித்தார். மேலும், ஆகஸ்ட் 1 முதல் டெல்லியில் அரசாங்க விற்பனை நிலையங்கள் மட்டுமே மதுபானங்களை விற்கும் எனவும் அறிவித்தார்.

இந்த நிலையில்தான் ஆம் ஆத்மி அரசாங்கத்தால் வாபஸ் பெறப்பட்ட புதிய கலால் வரிக் கொள்கையில் நடந்த முறைகேடுகள் மற்றும் விதிமீறல்கள் குறித்து சிபிஐ விசாரிக்க டெல்லி லெப்டினன்ட் கவர்னர் வி.கே. சக்சேனா அழைப்பு விடுத்திருந்தார்.

டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் வசம்தான் கலால் துறை உள்ளது. புதிய கலால் கொள்கையால் தனியாருக்கு லாபநோக்கில் லைசென்ஸ்களை வழங்கியதால் அரசுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. தகுதியற்ற நபர்களுக்கு சில்லறை விற்பனை நிலையங்கள் வழங்கப்பட்டன. இதன் மூலமாக அதிகளவில் கமிஷன் பெறப்பட்டது என்ற மூன்று குற்றச்சாட்டுகளை சிபிஐ விசாரித்து வருகிறது. இதற்காகத்தான் இன்று டெல்லியில் 21 இடங்களில் ரெய்டு நடத்தப்படுகிறது.

ஏற்கெனவே ஹவாலா பரிவர்த்தனை குற்றச்சாட்டில் டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவரான சிசோடியாவின் வீட்டிலும் சோதனை நடத்தப்படுவதால் அக்கட்சியினர் கலக்கத்தில் உள்ளனர்.

சிபிஐ சோதனை குறித்து ட்வீட் செய்துள்ள மணீஷ் சிசோடியா, "சிபிஐ இங்கே எனது இல்லத்தில் உள்ளது. நான் விசாரணை நிறுவனத்துக்கு ஒத்துழைப்பேன். அவர்கள் எனக்கு எதிராக எதையும் கண்டுபிடிக்க மாட்டார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், வெல்கம் சிபிஐ என்று முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் ட்வீட் செய்துள்ளார். இதில், “டெல்லியின் கல்வி மாதிரியைப் பாராட்டி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையின் முதல் பக்கத்தில் சிசோடியாவின் படம் அச்சிடப்பட்டுள்ளது. அதே நாளில் மத்திய அரசு சிபிஐயை அவரது வீட்டிற்கு அனுப்பியது" என்று தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in