`அமைச்சர் கார் மீது காலணி வீசியது ஜனநாயகம் மீது நடத்தப்பட்ட தாக்குதல்’- பாஜகவினருக்கு முன்ஜாமீன் வழங்க அரசு எதிர்ப்பு

`அமைச்சர் கார் மீது காலணி வீசியது ஜனநாயகம் மீது நடத்தப்பட்ட தாக்குதல்’- பாஜகவினருக்கு முன்ஜாமீன் வழங்க அரசு எதிர்ப்பு

‘தமிழக நிதியமைச்சர் கார் மீது காலணி வீசிய சம்பவம் ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்’ என உயர் நீதிமன்றத்தில் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

மதுரை விமான நிலையத்தில் தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் காலணி வீசினர். இந்த வழக்கில் பாஜக மகளிரணியை சேர்ந்த 3 பெண்கள் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பலரை போலீஸார் தேடி வருகின்றனர். இந்நிலையில் மதுரையைச் சேர்ந்த பாஜகவினர் மணிகண்டன், கோகுல் அஜித், வேங்கைமாறன் ஆகியோர் உயர் நீதிமன்ற கிளையில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தனர்.

அதில், காஷ்மீர் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த மதுரை உசிலம்பட்டி ராணுவ வீரர் லெட்சுமணன் உடல் மதுரை விமான நிலையத்துக்கு ஆகஸ்ட் 13-ல் கொண்டு வரப்பட்டது. ராணுவ வீரர் உடலுக்கு அஞ்சலி செலுத்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வந்திருந்தார். அவரை வரவேற்க நாங்கள் விமானம் நிலையம் சென்றோம். அப்போது நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசப்பட்டது. இது தொடர்பாக பாஜகவினர் பலர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் எங்களையும் போலீஸார் தேடி வருகின்றனர். அமைச்சர் கார் மீது காலணி வீசிய சம்பவத்துக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பாஜக மாவட்ட துணைத் தலைவர் ஜெயவேல், மாணிக்கம், நடராஜன், சுதாநாகுலு ஆகியோர் உடனடியாக ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். இதனால் எங்களுக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்" எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி ஜி.இளங்கோவன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், மனுதாரர்கள் மீது பல வழக்குகள் உள்ளன. மனுதாரர்கள் தேசியக்கொடி பொருத்தியிருந்த அரசு வாகனத்தையும், அரசின் பிரதிநிதியையும் காலணி வீசி அவமானப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவத்தால் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. தீவிரவாத தாக்குதலில் உயிர் தியாகம் செய்த ராணுவ வீரரின் உடலுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வில் மனுதாரர்கள் நடந்து கொண்ட விதம் சட்டவிரோதமானது மட்டும் அல்ல, ஜனநாயகத்துக்கு எதிரான தாக்குதலாகும். மனுதாரர்களை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியதுள்ளது. இதனால் முன்ஜாமீன் வழங்கக்கூடாது" என்றார்.

மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், விமான நிலைய சம்பவம் திட்டமிட்டு நிறைவேற்றப்பட்டது இல்லை. எதிர்பாராவிதமாக நடந்த சம்பவம் என்றனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி முன்ஜாமீன் மனுக்கள் மீதான தீர்ப்பை வரும் 24-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in