`6 பேர் மீது சந்தேகம்; 4 பேர் உறுதியாகிவிட்டனர்'- அரசியல் கொலையில் கேரள போலீஸ் விறுவிறுப்பு

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் 3 பேர் கைது; பாப்புலர் பிரண்ட் நிர்வாகிகளுக்கு வலை
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகி சுபைர்
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகி சுபைர்

கேரளத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, ஆர்.எஸ்.எஸ் இடையே தொடர்ந்து மோதல் நடந்துவருகிறது. கடந்த 6 மாதங்களில் மட்டும் இருதரப்பிலும் சேர்த்து 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சுபைர் கொலைவழக்கில் ஆர்.எஸ்.எஸ் பிரமுகர்கள் மூவரைக் கைது செய்திருக்கும் காவல்துறையினர், எஸ்.எஸ்.எஸ் பிரமுகர் ஸ்ரீனிவாசன் கொலைவழக்கில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் நிர்வாகிகள் 6 பேரிடம் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

கேரளத்தின் பாலக்காடு மாவட்டத்தின் எலப்புள்ளி பகுதியைச் சேர்ந்த சுபைர் கடந்த 15-ம் தேதி பள்ளிவாசலில் தொழுகை முடித்துவிட்டு தனது தந்தை அபுபக்கருடன் பைக்கில் திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அவர் ஓட்டிச் சென்ற டூவீலர் மீது பின்னால் வந்த கார் ஒன்று மோதியது. மற்றொரு காரில் வந்த கும்பல் சுபைரை சரமாரியாக வெட்டியது. அக்கம்பக்கத்தினர் சுபைரை மீட்டு பாலக்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இந்த சம்பவம் நடந்த 24 மணிநேரத்திற்குள்ளேயே பாலக்காட்டைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் ஸ்ரீனிவாசன் மர்ம கும்பலால் கொல்லப்பட்டார்.

ஏற்கெனவே கடந்த நவம்பர் மாதம் சஞ்சித் என்ற ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் பாலக்காடு பகுதியில் கொலை செய்யப்பட்டார். இதில் 10 பேர் மீது காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அவர்கள் எஸ்.டி.பி.ஐ, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். அப்போதுதொடங்கி இந்த அரசியல் படுகொலைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்நிலையில்தான் சுபைர் கொலை வழக்கில் ஆர்.எஸ்.எஸ் பிரமுகர்கள் ஆறுமுகம், சரவணன், ரமேஷ் என மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்குப் பற்றியும், கைது நடவடிக்கைப் பற்றியும் பேசிய ஏ.டி.ஜி.பி விஜய் சாக்ரே, “கடந்த நவம்பர் மாதம் கொல்லப்பட்ட ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் சஞ்சித், தன் உயிருக்கு சுபைர் குறிவைத்துவிட்டதாக அவரது நெருங்கிய நண்பர் மனோஜிடம் சொல்லியிருக்கிறார். கூடவே தனக்கு ஏதாவது ஆனால் அதற்கு சுபைர் தான் காரணம் எனவும் அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார். சஞ்சித் கொலை செய்யப்பட்ட வழக்கில் சுபைரும் விசாரணை வளையத்தில் இருந்தார். மனோஜ் மூலம் இந்தத் தகவல் இப்போது கைதாகியிருக்கும் ரமேஷ், ஆறுமுகம், சரவணன் ஆகியோருக்குத் தெரிந்தது. ஏற்கெனவே ஒருமுறை இந்தக் கும்பல் சுபைரைக் கொலைசெய்யத் திட்டமிட்டிருந்தது. அப்போது அந்த வழியாக போலீஸ் ஜீப் வந்ததால் திட்டத்தை ஒத்திவைத்துள்ளனர். தொடர்ந்து இன்னொருநாளில் திட்டமிட்டு 15-ம் அதை அரங்கேற்றியுள்ளனர். கொலைக்கு சுபைரால் கொல்லப்பட்ட சஞ்சித்தின் காரையே பயன்படுத்தியுள்ளனர். அந்த காரில் போய், சுபைரின் டூவீலரின் பின்னால் முதலில் இடித்துவிட்டு அவரை திசை திருப்பி கொலை செய்துள்ளனர். கொலை செய்துவிட்டு இன்னொரு காரில் தப்பிச் சென்றுவிட்டனர். அந்த இன்னொரு காரை கைது செய்யப்பட்டிருக்கும் ரமேஷ் தான் வாடகைக்கு எடுத்திருக்கிறார். இந்தக்காரை கஞ்சிக்கோடு என்னும் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் விட்டுவிட்டு இறங்கிப் போகும் சிசிடிவி காட்சியின் அடிப்படையிலேயே ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தைச் சேர்ந்த இந்த மூவரையும் கைதுசெய்துள்ளோம்.

இதேபோல் ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் ஸ்ரீனிவாசன் கொலைவழக்கில் 6 பேரை சந்தேகிக்கின்றோம். அதில் 4 பேரை உறுதி செய்துவிட்டோம். மற்ற இருவருக்கும் உள்ள தொடர்பை உறுதிசெய்ய முயன்றுவருகிறோம். அவர்களும் விரைவிலேயே கைதுசெய்யப்படுவார்கள். ஸ்ரீனிவாசன் கொலை வழக்கில் தொடர்புடைய ஆறுபேருமே எஸ்.டி.பி.ஐ மற்றும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் ஆவார்கள்’’என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in