குஜராத்தில் மும்முனைப் போட்டி: முதற்கட்ட தேர்தலில் 56.88 சதவீத வாக்குகள் பதிவு

குஜராத்தில் மும்முனைப் போட்டி: முதற்கட்ட தேர்தலில் 56.88 சதவீத வாக்குகள் பதிவு

குஜராத் சட்டப்பேரவைக்கான முதற்கட்ட தேர்தலில் 56.88 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

குஜராத் சட்டப்பேரவைக்கு முதல்கட்டமாக 89 தொகுதிகளில் காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. தெற்கு குஜராத் மற்றும் கட்ச்-சவுராஷ்டிரா பகுதிகளை உள்ளடக்கிய, 19 மாவட்டங்களுக்கு உட்பட்ட 89 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவு தொடங்கியதிலிருந்தே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

இன்றைய தேர்தலில் 2 கோடியே 39 லட்சத்து 76 ஆயிரத்து 670 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். இதில் ஒரு கோடியே 24 லட்சத்து 33 ஆயிரத்து 362 பேர் ஆண்கள். ஒரு கோடியே 15 லட்சத்து 42 ஆயிரத்து 811 பேர் பெண்கள். 497 பேர் மூன்றாம் பாலினத்தவர். வாக்காளர்கள் அனைவரும் எளிதில் வாக்களிப்பதற்கு வசதியாக 25,430 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இன்று தேர்தல் நடைபெற்ற 89 தொகுதிகளில், பழங்குடியினருக்கு 14, பட்டியல் சமூகத்தினருக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன. மொத்தம் 788 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். இவர்களில் 70 பேர் பெண்கள். 339 பேர் சுயேச்சை வேட்பாளர்கள்.

குஜராத்தில் தொடர்ந்து 6 முறை வெற்றி பெற்று ஆட்சி நடத்தி வரும் பாஜக, 7-வது முறையும் வெற்றி பெறுவோம் என்று நம்புகிறது. இதுவரை நடந்த தேர்தல்களில் பாஜக, காங்கிரஸுக்கு இடையே இருமுனைப் போட்டி நிலவியது. இந்த நிலையில், அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி இந்த முறை தீவிரமாகக் களமிறங்கி உள்ளதால், மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in