வருமான வரித்துறையினர் ஒரு பைசா கூட எடுக்கவில்லை; அமைச்சர் எ.வ.வேலு

எ. வ. வேலு
எ. வ. வேலு

``தேர்தல் வருகிறது என்பதற்காக வருமான வரித்துறையை ஏவிவிட்டு பாஜக அச்சுறுத்த நினைக்கிறது. அதற்கெல்லாம் பயப்படும் இயக்கம் திமுக கிடையாது'' என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

கடந்த ஐந்து நாட்களாக திருவண்ணாமலையில் உள்ள பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வீடு, அவரது கல்லூரி, அவரது மகன் கம்பன் வீடு, அவர்களோடு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

திருவண்ணாமலை அருணை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் மட்டும் 20 கார்களில் 200க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் இரண்டு டெம்போ வாகனங்களில் மத்திய ரிசர்வ் படை போலீஸ் பாதுகாப்புடன் 5 நாட்களாக சோதனை நடத்தினர். வருமானவரித்துறை சோதனை முடிவில், பறிமுதல் செய்ததாக கூறப்படும் பணத்தை வங்கியில் செலுத்துவதற்காக சீலிடப்பட்ட 2 சூட்கேஸ்களில் திருவண்ணாமலை அண்ணா சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி தலைமை அலுவலகத்துக்கு வருமான வரித்துறையினர் கொண்டு சென்றனர்.

இந்நிலையில் திருவண்ணாமலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எ.வ.வேலு, ’’ரெய்டு என்ற பெயரில் எனது ஓட்டுநரை வருமான வரித்துறையினர் அச்சுறுத்தியுள்ளனர். சோதனையில் பிடிபட்ட பணம் எனது குடும்பத்தினருக்கு சொந்தமானது அல்ல. என் வீட்டிலோ, என் மனைவி வீட்டிலோ, என் மகன் வீட்டிலோ  ஒரு பைசா கூட எடுக்கவில்லை.

அனைவருமே வருமானவரியை சரியாக கட்டி வருகிறோம். ஆனால், அனைவரிடமுமே வருமானவரித் துறையினர் கேள்விகளால் துளைத்தெடுத்து, மன உளைச்சலை ஏற்படுத்தி இருக்கின்றனர். இறுதியாக நான் தங்கியிருந்த கல்லூரிக்கே வந்து, சல்லடைப் போட்டு ஆய்வு நடத்தினர். என்னை தொடர்புப்படுத்தி விழுப்புரம், கோயம்புத்தூர், வந்தவாசி உட்பட திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள பல பகுதிகளிலும் சோதனை நடத்தியிருக்கின்றனர். எல்லோருமே பயந்துபோயிருக்கின்றனர்.

வருமானவரித்துறை அதிகாரிகள் மீது எனக்கு கோபம் இல்லை. அவர்கள் அம்புதான். எய்தவர்கள் எங்கேயோ இருக்கின்றனர். இந்த சோதனை தொடர்பாக வெளியாகியுள்ள கற்பனை கதைகளுக்கும் பதில் சொல்ல வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறேன். நான் வெளிநாட்டில் இருந்து வரவில்லை. இந்த மண்ணுக்குச் சொந்தக்காரன். நான் அடிப்படையில், விவசாயி வீட்டுப் பிள்ளை. இது, அனைவருக்குமே தெரியும்.

வருமானவரித் துறையை ஏமாற்றுபவன் நான் அல்ல. என்னிடம் மக்கள் மனு அளிக்க வருவது தவறா? என்னுடன் தொடர்புப்படுத்தி அவர்கள் அனைவரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வருவது நியாயமா? பாஜகவில் தொழில் அதிபர்களே இல்லையா... அங்கெல்லாம் வருமானவரித் துறை போகிறதா? திமுக மீது மட்டும் வருமானவரித் துறையினர் ரெய்டுக்கு வருவது ஏன்? இந்த ரெய்டுக்கெல்லாம் நாங்களோ, திமுகவோ, முதலமைச்சரோ பயப்படப் போவதில்லை. தேர்தல் வருகிறது என்பதற்காக அனைவரையும் இவர்கள் அச்சுறுத்த நினைக்கிறார்கள்’’ என்றார்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in