`காதலர்களுக்கு அச்சுறுத்தலா? எங்கள் அலுவலகத்துக்கு வாருங்கள்'

மார்க்சிஸ்ட் கே.பாலகிருஷ்ணன் அழைப்பு
`காதலர்களுக்கு அச்சுறுத்தலா? எங்கள் அலுவலகத்துக்கு வாருங்கள்'
மதுரையில் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய கே.பாலகிருஷ்ணன்படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23-வது மாநில மாநாடு மதுரையில் வருகிற 30, 31 மற்றும் ஏப்ரல் 1-ம் தேதிகளில் நடைபெறுகிறது. மாநாட்டின் ஒரு பகுதியாக இன்று பகத் சிங் நினைவு தினத்தையொட்டி மதுரை மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான இடங்களில் கட்சிக்கொடியேற்றும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தீக்கதிர் அலுவலகத்தில் நடந்த கொடியேற்று நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பின்னர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

"தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கட்சி எதிர்காலத்தில் பயணிக்க வேண்டிய திசை, அரசியல் நிலைபாடு, மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளை முன்னெடுப்பது, கலை- இலக்கியப் பண்பாட்டுத் தளத்தில் கட்சியின் பங்களிப்பு, மதவாத பாஜகவை வீழ்த்துவது ஆகியவை குறித்து மதுரையில் நடைபெறவுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு விவாதிக்க உள்ளது. குறிப்பாக பாஜக கல்வி நிலையங்களைக் காவி மயமாக்குவது, இந்துத்துவா கொள்கைகளைப் புகுத்துவது, கார்ப்பரேட் நிறுவனங்களை விற்பது, கல்வியை முழுமையாக ஒன்றியப் பட்டியலுக்கு மாற்றுவது போன்ற விஷயங்களில் கற்பனைக்கே எட்டாத அளவிற்கு ஆபத்தான பாதையில் பயணம் செய்கிறது. இதைத் தடுத்து நிறுத்தி முறியடிக்க வேண்டியது அவசியம்.

கோயில் விழாக்களில் பங்கேற்போம்

சிறு சிறு பிரச்சினைகளைக் கூட பாஜக அரசியலாக்கி மதச்சாயம், காவிச்சாயம் பூசிவருகிறது. தஞ்சாவூர் மாவட்டம், மிக்கேல்பட்டிணத்தில் 162 ஆண்டுகளாக செயல்பட்டுவரும் கிறிஸ்தவப் பள்ளியில் ஒரு மாணவி தற்கொலை செய்துகொண்டதை மதச்சாயம் பூசி அரசியலாக்கியது. இவ்வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று நீதிமன்றங்களையும் நிர்ப்பந்தம் செய்கிறது. இந்தச் சம்பவத்திற்குக் காரணம் மதமாற்றமே என்று இல்லாத பூதத்தைக் காட்டுகிறது.

கோயில் திருவிழாக்கள் நடந்தால் அங்கும் காவிக்கொடியை கட்டி அரசியல் நடத்துகிறது. திருவிழா கொண்டாடும் மக்களுக்கும் காவிக் கொடிக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. மக்கள் மத நம்பிக்கையின் அடிப்படையில் திருவிழாக்களில் பங்கேற்கின்றனர். அதே நேரத்தில் சகோதர- சகோதரிகளாக -நண்பர்களாக மதச்சார்பின்மையோடு உறவைப் பேணுகிறார்கள். முன்பு தமிழகத்தில் மதவெறி ஆபத்து இல்லை. கோயிலில் காவிக்கொடியைக் கட்டி மதவெறி அரசியலுக்கு வித்திடும் பாஜக-ஆர்எஸ்எஸ் முயற்சியை முறியடிக்க கோயில் திருவிழாக்களின் போது மதச்சார்பின்மையை வலியுறுத்துவதோடு, கலை -பண்பாட்டுத்தளத்தில் நின்று கோயில் திருவிழாக்களில் நாங்களும் பங்கேற்பது குறித்து பரிசீலிப்போம்.

மதுரையில் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய கே.பாலகிருஷ்ணன். அருகில் மாநிலச்செயற்குழு உறுப்பினர்கள் எம்.என்.எஸ் வெங்கட்டராமன், மதுக்கூர் இராமலிங்கம்,  சு.வெங்கடேசன் எம்பி
மதுரையில் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய கே.பாலகிருஷ்ணன். அருகில் மாநிலச்செயற்குழு உறுப்பினர்கள் எம்.என்.எஸ் வெங்கட்டராமன், மதுக்கூர் இராமலிங்கம், சு.வெங்கடேசன் எம்பி படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

விவசாயம், சிறு-குறுதொழில் நிறுவனங்கள் பாஜக ஆட்சியில் முடக்கப்பட்டுவிட்டது. பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். இதற்குக் காரணம் சிறு-குறு தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான மூலப் பொருட்கள் அதானி-அம்பானி போன்ற கார்ப்பரேட்டுகளின் கையில் உள்ளது.

மொத்தமாக கொள்முதல் செய்யும் டீசல் விலையை லிட்டருக்கு ரூ.25 உயர்த்தியிருக்கிறது ஒன்றிய அரசு. இதனால் பொதுப்போக்குவரத்து பாதிக்கப்படும். அரசுப் போக்குவரத்து நிறுவனங்களுக்கு கிட்டத்தட்ட ரூ.1,400 கோடி வரை இழப்பு ஏற்படும். மொத்த கொள்முதல் டீசல் விலை உயர்வை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும். ஐந்து மாநிலத் தேர்தல் முடிந்தவுடன் எரிவாயு விலை ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. சில்லறை விற்பனை பெட்ரோல், டீசல் விலையும் இப்போது தினந்தோறும் உயர்த்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. சர்வதேச சந்தையைவிட ரஷ்யாவில் கச்சா எண்ணெய் விலை குறைவாக உள்ளது. எனவே ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்கிறோம் என ஒன்றிய அரசு கூறுகிறது. குறைவான விலைக்கு கச்சா எண்ணெய் கிடைக்கும்போது டீசல் விலையை லிட்டருக்கு ரூ.25 உயர்த்த வேண்டிய அவசியம் ஏன் வருகிறது? பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைதான்.

மாநிலத் தேர்தல்கள் முடியும் வரை அமைதியாக இருப்பதையும், தேர்தல் முடிந்தவுடன் பொதுத்துறை நிறுவனங்களை விற்பது, விலைவாசியை உயர்த்துவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதையும் ஒன்றிய பாஜக அரசு வாடிக்கையாகக் கொண்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டதாக எட்டுப் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் சிறுவர்களும் உள்ளனர் என்பது அதிர்ச்சியளிப்பதாய் உள்ளது. பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்கு போதைப் பழக்கம் ஒரு காரணமாக உள்ளது. போதைப்பொருட்களை ஒழிக்க தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே நேரத்தில் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையையும் படிப்படியாகக் குறைக்க வேண்டும்.

விருதுநகர் மாவட்டத்தில் காதலர்கள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். காதலிப்பவர்கள் தற்கொலை முடிவுக்கு செல்லக்கூடாது. பிரச்சினை எழுந்தால் மாவட்ட நிர்வாகத்தையோ, காவல்துறையையோ அணுகி நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும். இதற்கும் தயக்கம் இருந்தால் காதலர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்களுக்கு வரலாம். எங்கள் கட்சி அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கும்''.

இவ்வாறு அவர் கூறினார்.

``கோயில் திருவிழாக்களில் பங்கேற்போம் என்கிறீர்கள். இது இந்துக்களின் வாக்குகளை கவர்வதற்காகவா?”என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்குப் பதிலளித்த கே.பாலகிருஷ்ணன், ”மதம், சாதியைச் சொல்லி பாஜக அரசியல் செய்கிறது. காவிக்கொடியை ஏற்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் பொறுத்தவரை தேர்தலின் போது இவர் இந்த மதத்துக்காரர், இந்த சாதிக்காரர் என்றெல்லாம் முன்னிலைப்படுத்தி வாக்கு கேட்பதில்லை. மக்களை தொழிலாளிகள், விவசாயிகள், உழைப்பாளி மக்களாகத்தான் நாங்கள் பார்க்கிறோம். கோயில் திருவிழாக்களில் காவிக்கொடியை பறக்கவிடுவார்கள். சாதி, மதத்தின் பெயரால் மக்களைப் பிரிப்பார்கள். நாங்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களா? இல்லாதவர்களா? என்பது பிரச்சினையல்ல. மக்கள் ஒற்றுமை தான் அவசியம். உதாரணத்திற்கு சிதம்பரத்தில் உள்ள தில்லை நடராஜர் கோயில் விழாவில் பட்டம் கட்டுவது முஸ்லிம்கள் தான். கோயில் திருவிழாக்களை இந்துக்களும் -முஸ்லிம்களும் இணைந்தே கொண்டாடுகின்றனர். இவர்களைப் பிரிக்கும் வேலையைத் தான் காவிக்கொடியின் மூலம் பாஜக செய்ய முயற்சிக்கிறது. இதைத் தடுத்து ஒற்றுமை காப்பது தான் எங்கள் பணி. அதற்காகவே கலை பண்பாட்டுத் தளத்தில் கூடுதல் கவனம் செலுத்துவோம்” என்றார்.

பேட்டியின்போது மாநிலச்செயற்குழு உறுப்பினர்கள் எம்.என்.எஸ் வெங்கட்டராமன், மதுக்கூர் இராமலிங்கம், மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், மாநிலக்குழு உறுப்பினர் சி.ராமகிருஷ்ணன், மாநகர் மாவட்டச் செயலாளர் இரா.விஜயராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in