சமூக விரோதிகளால் அதிமுக தலைமையகத்திற்கு ஆபத்து: பாதுகாப்பு கேட்டு ஜெயக்குமார் மனு

சமூக விரோதிகளால் அதிமுக தலைமையகத்திற்கு ஆபத்து: பாதுகாப்பு கேட்டு ஜெயக்குமார் மனு

அதிமுக தலைமையகத்திற்கு சமூக விரோதிகளால் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், "அதிமுக தலைமை கழகத்தில் சமூக விரோதிகள் சிலர் அத்துமீறி நுழைய இருப்பதாக நம்ப தகுந்த தகவல்கள் வந்ததை அடுத்து தலைமை கழகத்திற்கு பாதுகாப்பு வழங்கக்கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளோம். காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர்" என்றார்.

திங்கட்கிழமை குறிப்பிட்டது போல் பொதுக்குழு நடைபெறுமா? என்ற கேள்விக்கு பதில் அளித்த ஜெயக்குமார், பொதுக்குழு கூட்டம் தொடர்பான தீர்ப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் 100% நியாயமான நல்ல தீர்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். மற்ற விவரங்களை வெளியில் சொல்ல முடியாது. பொதுக்குழு கூட்டத்திற்கு உறுப்பினர்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. வரவேண்டியவர்கள் சென்னைக்கு வர தொடங்கி விட்டனர். ஓபிஎஸ் மகன் நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் தமிழக முதல்வரை சந்தித்து கடிதம் கொடுத்து பேட்டி அளித்ததன் மூலம் அவர் திமுகவுக்கு ஆதரவு என்பது வெளிப்படையாக தெரிய வந்துள்ளது.

சசிகலாவே ஓபிஎஸ்சுக்கும் திமுகவிற்கும் தொடர்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். அதிமுகவில் இருந்து கொண்டு ஓபிஎஸ் மகன் தமிழக முதல்வரை பாராட்டி அறிக்கை வெளியிட்டிருப்பது சரியா?. ஓபிஎஸ் மகன் முதல்வர் ஸ்டாலினை பாராட்டி ஐஸ் வைக்கிறார். இதன் மூலம் ஓபிஎஸ் தரப்பு திமுக ஆதரவாக செயல்படுவது வெட்ட வெளிச்சமாகியுள்ளது என்றார்.

முன்னாள் அமைச்சர் முனுசாமியின் மகன் கிருஷ்ணகிரியில் பெட்ரோல் பங்க் வைப்பதற்கு திமுக அமைச்சர் காந்தி உதவி செய்தது குறித்த கேள்விக்கு பதில் அளிக்க திணறிய ஜெயக்குமார், முதல்வர் மு.க ஸ்டாலின் கட்டுப்பாட்டின் கீழ் லஞ்ச ஒழிப்புத்துறை செயல்படுவதாகவும், அவரது ஏவுதலின் பேரில் பழிவாங்கும் நடவடிக்கையாக முன்னாள் அதிமுக அமைச்சர்கள் வீட்டில் சோதனை நடைபெறுவதாகவும், ஆனால் வருமான வரித்துறையினர் முன்னாள் அமைச்சர்களின் வீட்டில் சோதனை நடத்தவில்லை எனவும் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in