டாஸ்மாக் பார்களில் கலெக்‌ஷன் ஏஜெண்டுகள் மூலம் பல ஆயிரம் கோடி வசூல்: பாஜக குற்றச்சாட்டு

பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநிலத் தலைவர் சி.டி.ஆர் நிர்மல்குமார்.
பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநிலத் தலைவர் சி.டி.ஆர் நிர்மல்குமார்.

திமுக அமைச்சர்களின் ஊழல் தொடர்பான முழு ஆதாரங்களைத் திரட்டி லஞ்ச ஒழிப்புத்துறை, சிபிஐ, அமலாக்கத்துறையினரிடம் புகார் அளித்துள்ளதாக பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநிலத் தலைவர் சி.டி.ஆர் நிர்மல்குமார் தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திரமோடியின் தமிழக வருகை தள்ளிப் போனதற்கு பாதுகாப்பு குறைபாடே காரணம் என்ற வகையில் சர்ச்சைக்குரிய வகையில் பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநிலத் தலைவர் சி.டி.ஆர் நிர்மல்குமார் ட்விட்டரில் பதிவிட்டார். இது தொடர்பாக மொகிந்தர் அமர்நாத் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் சி.டி.ஆர் நிர்மல்குமார் மீது மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீஸார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினர்.

இந்நிலையில் வழக்கு விசாரணைக்காக சி.டி.ஆர் நிர்மல்குமார், விசாரணை அதிகாரி திவ்யாகுமாரி முன்னிலையில் இன்று ஆஜரானார். அவரிடம் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த விசாரணைக்குப் பின் நிர்மல் குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், " நான் பதிவிட்ட விவரத்தில் மாற்றுக் கருத்தில்லை. பாஜக தலைமை அலுவலகம் மற்றும் பிரதமர் அலுவலகத்தில் உரிய காரணத்தைக் கேட்டுத் தகவலைப் பெற்ற பின்னர் தமிழக பாஜக மாநிலத் தலைவரின் அறிவுறுத்தலின் படியே அந்தப் பதிவை ட்விட்டரில் பதிவிட்டேன்.

அதற்கு உண்டான ஆதாரங்களை விசாரணை அதிகாரியிடம் சமர்பித்துள்ளேன். விசாரணையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு உரிய முறையில் பதிலளித்தேன். இனி விசாரணைக்கு அழைத்தாலும் ஆஜராகவும் தயாராக இருக்கிறேன்.

அதுமட்டுமல்லாமல் என் மீது போடப்பட்ட வழக்கு முற்றிலும் அரசியல் உள்நோக்கம் கொண்டது. இனி எத்தனை வழக்குகள் போட்டாலும் அனைத்தையும் சமாளிக்க நாங்கள் தயாராக உள்ளோம்" என்று தெரிவித்தார்.

மேலும் தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 5 ஆயிரம் டாஸ்மாக் பார்களில் கரூர் கம்பெனி என்ற பெயரில் 22 கலெக்‌ஷன் ஏஜெண்டுகளை வைத்து பணம் வசூலிக்கப்படுவதாகவும், இதன் மூலம் ஆண்டுதோறும் டாஸ்மாக் துறையில் 16 ஆயிரம் கோடி முதல் 20 ஆயிரம் கோடி வரை வேறுயாருக்கோ செல்கிறது. இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத்துறை இயக்குனர் கந்தசாமியை சந்தித்து முழு ஆதாரங்களுடன் துறை அமைச்சரான செந்தில் பாலாஜி மீது புகார் அளித்துள்ளேன்.

மேலும் ஜல் சக்தி திட்டத்திற்காக தமிழகத்திற்கு 16 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், திட்டத்தில் பல்வேறு முறைகேடுகளை அமைச்சர் கே.என் நேரு செய்துள்ளார். அவர் 22 கமிஷன் பாய்ண்ட் வைத்து பணம் வசூலிப்பதற்கு உண்டான ஆதாரங்கள் திரட்டப்பட்டுள்ளன. இது தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறைக்கு உரிய முறையில் புகார் அனுப்பியுள்ளளோம்.

திமுக அரசு தொடரும் வழக்குகளால் எங்கள் வேகத்தைக் குறைக்க முடியாது. எங்கள் செயல்பாடுகள் அடுத்தகட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டே இருக்கும். திமுக அமைச்சர்கள் செய்து வரும் ஊழல்கள் குறித்து முறையாக புகார் அளிப்பதுடன் நீதிமன்றம் மூலம் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்" என்று தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in