
ஊட்டி ராஜ் பவனில் தங்கியுள்ள தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கண்டித்து ராஜ்பவனை முற்றுகையிட முயன்றவர்களை குண்டுகட்டாக தூக்கிச்சென்று கைது செய்தது போலீஸ்.
தமிழ்நாட்டில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும், தமிழ்நாடு ஆளுநர் ரவிக்குமான மோதல் கொதிநிலையில் இருந்து வருகிறது. மார்க்ஸ் குறித்து ஆளுநர் தவறாக பேசியதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனிப்பட்ட முறையில் ஆளுநர் மீது கோபத்தில் இருந்து வருகிறது. ஆளுநரை எதிர்த்து அவர் எங்கு சென்றாலும் போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சி ஏற்கெனவே அறிவித்திருந்தது.
இந்தநிலையில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆன்லைன் சூதாட்டம் தடை சட்டம் கடந்த ஆண்டு அக்டோபர் 19-ம் தேதி நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த தடைச் சட்ட மசோதாவிற்கு உடனடியாக ஒப்புதல் வழங்காத ஆளுநர், சில விளக்கங்கள் கேட்டு நவம்பர் 24-ம் தேதி அரசுக்கு கடிதம் அனுப்பினார். அரசு சார்பில் 24 மணி நேரத்தில் உரிய விளக்கம் அளிக்கப்பட்டது.
அதன்பின் சட்ட அமைச்சர் ரகுபதி மற்றும் அதிகாரிகள் ஆளுநரை சந்தித்து உடனடியாக ஒப்புதல் அளிக்குமாறு வலியுறுத்தினர். இந்த நிலையில் கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக ஆன்லைன் ரம்மி தடை மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் இருந்த ஆளுநர், இம்மசோதாவை மீண்டும் அரசுக்கே திருப்பி அனுப்பியுள்ளார்.
இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, உதகை ராஜ்பவன் மாளிகையில் தங்கியுள்ள நிலையில் ஆன்லைன் ரம்மியை தடை செய்யும் மசோதாவை அரசுக்கு திருப்பி அனுப்பியதை கண்டித்தும், போட்டி அரசாங்கம் நடத்தும் ஆளுநர், திரும்பிப் போக வலியுறுத்தியும் ஊட்டி ராஜ்பவன் மாளிகை இன்று காலை முற்றுகையிடப்பட்டது.
ஆளுநருக்கு எதிரான கருப்புக்கொடி கண்டன இயக்கத்திற்கு சிபிஎம்., சிபிஐ., மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவை அழைப்பு விடுத்திருந்தது.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போராட்டத்தை தடுக்கும் விதமாக ராஜ்பவன் மற்றும் தாவரவியல் பூங்கா வளாகத்தில் காவல்துறையினர் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. கட்சிகளின் இந்த ஆர்ப்பாட்ட அறிவிப்பால் குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பே ஆளுநர் கேரள மாநிலம் வயநாடு புறப்பட்டு சென்றார். அவர் சென்ற நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர், மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆளுநரை கண்டித்து கோஷங்கள் எழுப்பியவாறு தாவரவியல் பூங்கா வாயிலுக்கு வந்தனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் 16 பேரை போலீஸார் குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று கைது செய்தனர். இதனால் பூங்கா பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.