பொய் பேசி ஆட்சியைப் பிடித்தவர்கள் திமுகவினர் -எடப்பாடி குற்றச்சாட்டு

பொய் பேசி ஆட்சியைப் பிடித்தவர்கள் திமுகவினர் -எடப்பாடி குற்றச்சாட்டு
கும்பகோணம் பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமி

‘பொய்யாகப் பேசி ஆட்சியைப் பிடித்தவர்கள் திமுகவினர்’ என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டிப் பேசினார்.

நகர்மன்ற உள்ளாட்சி தேர்தலில் கும்பகோணம் மாநகராட்சியில் அதிமுக மற்றும் தமாகா சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, வாக்கு கேட்டு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று கும்பகோணத்தில் காந்தி பூங்கா அருகில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:

கும்பகோணம் மாநகராட்சியாக்கப்பட்டு நடைபெறும் முதல் தேர்தலில், அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று மேயராக பதவி ஏற்க வேண்டும்.

உள்ளாட்சித் தேர்தலில் முறைகேடு செய்து வெற்றிபெற வேண்டுமென திமுகவினர் திட்டம்போட்டு வருகின்றனர். அதை அதிமுகவினர் முறியடிக்க வேண்டும். தேர்தலை முறையாக சந்தித்து திமுக வெற்றி பெற்றது என்பது ஒருபோதும் கிடையாது. ஜனநாயக முறைப்படி நடைபெறும் தேர்தலில் யாருக்கு செல்வாக்கு இருக்கும் என்பதை மக்கள் உணர்ந்து வருகின்றனர்.

திமுக தேர்தலில் முறைகேடு செய்யும் என்று நீதிமன்றத்தில் எடுத்துரைத்து, திமுக தில்லுமுல்லு செய்யாமல் அதிமுக முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

தமிழகத்தை ஆளும் மு.க. ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளதை இதுவரை நிறைவேற்றி இருக்கிறாரா? ஆட்சிக்கு வந்தவுடன் இல்லத்தரசிகளுக்கு உரிமைத் தொகை வழங்கப்படும் என்று கூறியவர், தற்போது வீடு வீடாக மனு அளித்து வருகிறார். மாதந்தோறும் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.100 மானியம் மற்றும் கல்வி கடன் ரத்து என எதுவும் செய்யவில்லை.

இந்தியாவில் 25 மாநிலங்களில் பெட்ரோல் டீசல் விலை குறைத்துள்ளார்கள். ஆனால் தமிழகத்தில் ரூ.3 மட்டும் குறைத்தார்கள். தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மற்றும் தேசிய வங்கியில் 5 பவுனுக்கு குறைவாக வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்யவில்லை.

தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நகையை அடமானம் வைத்தவர்கள், அனைவருக்கும் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றார்கள். ஆனால் தற்போது தகுதியானவர்கள் மட்டும் என்கிறார்கள்.

தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில், நகை கடன் 48 லட்சம் பேரில் 13 லட்சம் பேர்தான் தகுதியானவர்கள் என்று கூறி வருகின்றனர். திமுகவுக்கு ஓட்டுப் போட்டவர்கள் நகையை மீட்க முடியாமல் திண்டாடுகிறார்கள். தற்போது வட்டி கட்டி வருகிறார்கள். அதிமுக பொய் பேசுகிறதா? திமுக பொய் பேசுகிறதா? பொய்யாக பேசி ஆட்சியைப் பிடித்தவர்கள்தான் திமுகவினர். பொய் பேசிய திமுகவுக்கு தக்க தண்டனை தர மக்கள் மறக்க மாட்டார்கள்.

கூட்டுறவு நகைக் கடன் பெற்றவர்களில் 35 லட்சம் பேர் வட்டி கட்டுவார்கள். அதை வைத்து 13 லட்சம் பேருக்கு மட்டும் நகையைக் கொடுப்பார்கள். இப்படி ஒரு விஞ்ஞான மூளை படைத்தவர்தான் மு.க. ஸ்டாலின். தமிழகத்தில் ஆட்சி செய்யும் திமுக அரசு சர்வாதிகார அரசாக மாறி வருகிறது” என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Related Stories

No stories found.