10% இடஒதுக்கீட்டை அமல்படுத்தக்கூடாது; புதுச்சேரி தலைமைச் செயலகம் முற்றுகை: நூற்றுக்கணக்கானோர் கைது!

10% இடஒதுக்கீட்டை அமல்படுத்தக்கூடாது; புதுச்சேரி தலைமைச் செயலகம் முற்றுகை: நூற்றுக்கணக்கானோர் கைது!

முற்பட்ட வகுப்பினரில் பொருளாதார ரீதியில் நலிவடைந்தோருக்கான 10% இட ஒதுக்கீட்டை புதுச்சேரியில் அமல்படுத்த கூடாது என்பதை வலியுறுத்தி புதுச்சேரி தலைமைச் செயலகம் முற்றுகை போராட்டம் இன்று நடைபெற்றது.

மத்திய அரசு கொண்டு வந்த முற்பட்ட வகுப்பினரில் பொருளாதார ரீதியில் நலிவடைந்தோருக்கு 10% இட ஒதுக்கீடு செல்லும் என அண்மையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து இருந்தது. இதனையடுத்து பாஜக ஆளும் மாநிலங்களில் இந்த இட ஒதுக்கீடு  உடனடியாக நடைமுறைப் படுத்தப்படும்  என்று அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த நிலையில் புதுச்சேரியிலும்  இந்த 10% இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படலாம் என செய்திகள் வெளியானது.

இதனையடுத்து புதுச்சேரியில் 10 சதவீத  ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த கூடாது என வலியுறுத்தி  மதச்சார்பற்ற கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளின் சார்பில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும்  போராட்டம்  இன்று நடைபெற்றது. திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளும்,  மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளும் ஒன்றிணைந்து இந்த முற்றுகை போராட்டத்தை நடத்தின.

ராஜா தியேட்டர் அருகில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு தலைமைச் செயலகத்தை முற்றுகையிட  சென்றனர். முற்பட்ட வகுப்பினரில் பொருளாதார ரீதியில் நலிவடைந்த பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை புதுச்சேரியில் அமலாக்க கூடாது. பி -பிரிவு அரசிதழ் பதிவு பெறாத அலுவலர் பதவிகளுக்கு புதுச்சேரியில் நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீட்டை தொடர வேண்டும். அரசு பணி தேர்வு குறிப்பாணைகளில் உள்ள  குளறுபடிகளை தீர்த்திட வேண்டும்,  புதுச்சேரிக்கு  தனி தேர்வாணையம் அமைத்திட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி  முழக்கங்களை எழுப்பியபடியும்,  பதாகைகளை எடுத்தும் சென்றனர். தலைமைச் செயலகம் நோக்கி சென்றவர்களை புதுச்சேரி போலீஸார் இடைமறித்து கைது செய்தார்கள். திமுக மாநில செயலாளர் சிவா, காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்ட அனைத்து கட்சிகளின்  முக்கிய தலைவர்களும் தொண்டர்களும்  நூற்றுக் கணக்கானவர்கள்  கைது செய்யப்பட்டனர். 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in