நேருவை நம்பியவர்கள் என்ன ஆனார்கள்? - 3

அடையாளத்தைத் தொலைத்த அன்பில் பெரியசாமி!
நேருவுடன் அன்பில் பெரியசாமி...
நேருவுடன் அன்பில் பெரியசாமி...

அன்பில் தர்மலிங்கத்தின் பெயரைத் தவிர்த்துவிட்டு திமுகவின் வரலாறை எழுதிவிடமுடியாது. தமிழ்நாட்டின் மையமான திருச்சியில் அன்பில் தர்மலிங்கமும் தஞ்சையில் மன்னை நாராயணசாமியும், திமுகவை உருவாக்கி, வளர்த்தெடுத்து, ஆட்சிக்கட்டிலில் அமர்த்தவும் காரணமாக இருந்தனர். அப்போது காங்கிரஸ் வலுவாக இருந்த மத்திய மண்டலத்தில் கட்சியை வளர்ப்பதும், காப்பாற்றுவதும் மிகவும் சவாலான காரியமாக இருந்தது. ஆனால், கள்ளர் சமூகத்தைச் சேர்ந்த இவர்கள் இருவரும் அந்தச் சவால்களை எல்லாம் எதிர்க்கொண்டு திமுகவை நிலைநிறுத்தினர்.

அன்பில் பெரியசாமி
அன்பில் பெரியசாமி

1956-ல் திருச்சி மாநாட்டுக்கு ’அன்பில் அழைக்கிறார்’ என்று தலைப்பிட்டுத்தான் அண்ணா தனது தம்பிகளை அழைத்தார். மாவட்டச் செயலாளராக இருந்த அன்பிலாருக்கு சொல்லாமல் ஒருமுறை திருச்சிக்கு வந்த அண்ணாவிடமே ஆவேசம் காட்டியவர் அன்பிலார். ஒரு மாவட்டத்துக்கு எப்படி ஆட்சியர் முக்கியமோ அதேபோல கட்சிக்கு மாவட்டச் செயலாளர் முக்கியம் என்ற அன்பிலாரின் தர்க்கத்தை அடுத்தே, திமுகவில் மாவட்டச் செயலாளர்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கப் பெற்றது. கல்லக்குடி போராட்டத்தில் கருணாநிதியின் பக்கத்தில் இருந்தவர் அன்பிலார். தனது கடைசிமூச்சுவரை கருணாநிதி மீது மாறாத அன்புடனே இருந்தவர்.

அன்பிலாருடனான நட்புக்கு மரியாதை செய்யும் விதமாக அவர் உயிருடன் இருக்கும்போதே அவரது மூத்தமகன் அன்பில் பொய்யாமொழிக்கு 1989 சட்டப்பேரவைத் தேர்தலில் ‘திருச்சி 2’ தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்தார் கருணாநிதி. அந்தத் தேர்தலில் வெற்றிபெற்ற பொய்யாமொழி, அடுத்த தேர்தலில் தோல்வியைத் தழுவினார். ஆனாலும் 1996-ல் மீண்டும் அவருக்கு அதே தொகுதியில் வாய்ப்பளித்தார் கருணாநிதி. இந்தத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு பொய்யாமொழியும் மு.க.ஸ்டாலினும் நெருங்கிய நண்பர்களாக வலம்வந்தனர். இருவரும் கட்சிக்கு அப்பாற்பட்ட குடும்ப நண்பர்களாகவும் பழகினர். ஒருகட்டத்தில் திருச்சி மாவட்டச் செயலாளர் பதவியும், அமைச்சர் பதவியும் பொய்யாமொழிக்கு கிடைக்கும் என்ற நிலையும் உருவானது. ஆனால், துரதிருஷ்டவசமாக 1999-ல் பொய்யாமொழி மறைந்தார்.

இதையடுத்து, அன்பிலாரின் தொகுதியில் அவரது குடும்பத்தைச் சேர்ந்தவ ஒருவருக்கே மீண்டும் வாய்ப்பளிக்க கருணாநிதி முடிவுசெய்தார். பொய்யாமொழியின் மகன் மகேஷுக்கு அப்போது வயது குறைவு. அதனால் இடைத்தேர்தலில் பொய்யாமொழியின் சகோதரர் அன்பில் பெரியசாமிக்கு போட்டியிடும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. அவரும் வெற்றிபெற்று சட்டப்பேரவை உறுப்பினரானார்.

அன்பிலாருக்குரிய அத்தனை குணங்களும் பெரியசாமியிடமும் இருந்தன. அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பாங்கு கொண்டவர். யார் வந்து எந்த பிரச்சினையை சொன்னாலும் அதை தீர்த்துவைக்க தன்னாலான அனைத்து முயற்சிகளையும் செய்வார். அதனால் அடுத்துவந்த 2001 பொதுத்தேர்தலிலும் வென்றார். திருச்சி சங்கம் ஹோட்டல் அருகிலுள்ள இவரது அலுவலகம் எப்போதும் கட்சிக்காரர்களால் நிரம்பி வழியும். கட்சிக்காரர்களை பெயர் சொல்லி அழைக்குமளவுக்கு தொண்டனுக்கும் தொண்டனாய் இருந்தார் பெரியசாமி. இதுவே கட்சியினர் மத்தியில் அவருக்கான செல்வாக்கை கூட்டியது. அப்படி செல்வாக்கு பெற்ற பெரியசாமியை தனக்கும் நெருக்கமானவராக ஆக்கிக்கொண்டார் கே.என்.நேரு. எங்கே சென்றாலும் தன்னுடன் பெரியசாமியையும் அழைத்துச் சென்றார்.

அன்பில் பெரியசாமி
அன்பில் பெரியசாமி

மாவட்டச் செயலாளராக இருந்த நேருவை பெரியசாமி பெரிதாக மதித்தார். நேருவும் அவரை அரவணைத்துக்கொண்டார். அந்த அரவணைப்பானது அவர் எந்த நிலையிலும் தன்னை மிஞ்சிவிடக் கூடாது என்ற இறுக்கமான அணைப்பாக மாறியது. நேருவின் மேடைகளில் பெரியசாமிக்கும் இடம் உண்டு. நேருவின் நிகழ்ச்சிகளில் பெரியசாமி நிச்சயம் இருப்பார். தனக்கு இத்தனை முக்கியத்துவம் தரப்பட்டதால் நமக்காக நேரு இருக்கிறார் என்று நம்பினார் பெரியசாமி. ஆனால், 2006 தேர்தலில் அதேதொகுதிக்கு மீண்டும் பெரியசாமி சீட் கேட்டபோதுதான் அந்த நம்பிக்கைக்கு குந்தகம் வந்தது.

அந்தத் தேர்தலில் தனது லால்குடி தொகுதியை விட்டுவிட்டு திருச்சியில் போட்டியிட முடிவு செய்தார் நேரு. அதனால் மாவட்டச் செயலாளர் என்ற உரிமையில் ‘திருச்சி 2’ தொகுதியை தலைமையின் பூரண ஆசியுடன் தனக்காக ஒதுக்கிக் கொண்டார். அதனால் தனது குடும்பத்துக்கே விசுவாசமாக இருந்த தொகுதி மக்களை விட்டு பெரியசாமி ‘திருச்சி 1’ தொகுதிக்கு இடம்பெயர வேண்டியிருந்தது. அங்கும் மக்கள் அவரை அன்புடன் தேர்ந்தெடுத்தனர். ‘திருச்சி 2’ ல் நேருவும் வென்றார். இப்போது நேருவுக்கு புதிய சிக்கல் வந்தது.

நேருவின் அருகிலேயே இருக்கும் அன்பில் பெரியசாமி...
நேருவின் அருகிலேயே இருக்கும் அன்பில் பெரியசாமி...

அன்பிலாரின் மேல் இருந்த அபிமானத்தால் கருணாநிதி நிச்சயம் பெரியசாமிக்கு அமைச்சர் பதவி அளிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதைக் கெடுக்கவும் ஒரு சூழ்ச்சி நடந்தது. 2 கோடி ரூபாய் பணம் பெரியசாமிக்கு கொடுக்கப்பட்டதாகவும், சூது தெரியாத பெரியசாமி அதனை பெற்றுக்கொண்டதாகவும் அப்போது பேச்சுக் கிளம்பியது. இதைவைத்து, அமைச்சராகப் போவதாகச் சொல்லி இப்போதே வசூல் வேட்டையில் ஈடுகிறார் என்று ஒரு செய்தியை கருணாநிதியின் காது வரைக்கும் கொண்டு போனது ஒரு கோஷ்டி. இதனால் அன்பில் பெரியசாமிக்கு அமைச்சராகும் வாய்ப்பு தட்டிப் போனது. நேருவே மீண்டும் அமைச்சரானார்.

இந்தச் சம்பவத்துக்குப் பின்னால், பெரியசாமியை வளரவிடாமல் முடக்க பலமுனைகளிலும் வேலைகள் நடந்தன. அவரது கவனத்தை கட்சி நடவடிக்கைகளில் இருந்து வேறுபக்கம் திசை திருப்பும் வேலையை சிலர் திட்டமிட்டே செய்தார்கள். இதிலுள்ள சூதை உணராமல், பொழுதுபோக்கு கேளிக்கைகளில் காலம் கழிக்க ஆரம்பித்தார் பெரியசாமி. இதனால் கட்சித் தொண்டர்களிடம் தனக்கிருந்த பிணைப்பை கொஞ்சம் கொஞ்சமாக தவறவிட்டார் பெரியசாமி. எந்த நேரமும் நேருவின் கூடவே இருந்ததால் கட்சியிலுள்ள பிறரிடம் அவரால் நெருங்கவே முடியவில்லை. தனக்கான தனிப்பட்ட செல்வாக்கை அவரால் வளர்த்துக் கொள்ளவும் முடியவில்லை. ஒருகட்டத்தில், நேருவின் நிழலிலேயே அடைக்கலமாகி அதுவே போதும் என திருப்திப்பட்டுக் கொண்டார். அந்த ஆலமரம் பெரியசாமி என்ற செடியை வளரவிடவே இல்லை.

ஸ்டாலின், டி.ஆர்.பாலு, நேருவுடன் அன்பில் பெரியசாமி...
ஸ்டாலின், டி.ஆர்.பாலு, நேருவுடன் அன்பில் பெரியசாமி...

2011 தேர்தலில் ‘திருச்சி கிழக்கு’ என்று பெயர்மாறிய அதே தொகுதியில் திரும்பவும் பெரியசாமிக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. ஆனால், இந்த முறை பெரியசாமியால் கரைசேர முடியவில்லை. 2016 தேர்தலில், திருவெறும்பூரில் மகேஷ் பொய்யாமொழிக்கு சீட் கொடுக்கப்படுவதை காரணம்காட்டி பெரியசாமியின் திருச்சி கிழக்கு தொகுதியை காங்கிரஸுக்கு தாரை வார்த்தார் நேரு. அதோடு பெரியசாமியின் அரசியல் வாழ்க்கை அஸ்தமித்தது. 2021ல், மீண்டும் சீட் கேட்டார் பெரியசாமி. இம்முறை இந்தத் தொகுதியைத் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத் தலைவர் இனிகோ இருதயராஜுக்கு தரவைத்தார் நேரு. செய்வதறியாது திகைத்த பெரியசாமி, வீடு, அலுவலகம் என சிறு வட்டத்துக்குள் முடங்கிப் போனார்.

முன்னாள் எம்எல்ஏ-வான பெரியசாமி, அந்த கெத்தெல்லாம் காட்டாமல் தற்போது மாநகராட்சி தேர்தலில் தனது வார்டில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட சீட் கேட்டு விண்ணப்பித்தார். அவரை அழைத்துப்பேசிய அமைச்சர் நேரு, “இதெல்லாம் உனக்கு வேண்டாம், பிறகு பார்த்துக்கொள்ளலாம்” எனச் சொல்லி பின்வாங்க வைத்ததாகச் சொல்கிறார்கள்.

கவுன்சிலராக வெற்றிபெற்றால் திருச்சி மேயராகிவிடலாம் என்று பெரியசாமி எதிர்பார்த்தார். இதுக்குத்தான் அவர் வருகிறார் என்று தெரிந்ததும் தந்திரமாக அதற்கு அணை போட்டுவிட்டார் நேரு என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள்.

அன்பிலார் குடும்பத்தின் இன்னொரு அரசியல் வாரிசான அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி ஸ்டாலின் குடும்பத்துடன் நாளுக்கு நாள் நெருக்கமாகிவருவதை மிரட்சியுடன் பார்க்கும் நேரு, அந்தக் குடும்பத்திலிருந்து வரும் இன்னொருவரை திருச்சிக்கு மேயராக்கி அழகுபார்க்கத் தயாரில்லை என்கிறார்கள்.

1957-ல் கருணாநிதியை குளித்தலை தொகுதியில் கொண்டு வந்து நிறுத்தி, அவரது அரசியல் வெற்றிகளுக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தவர் அன்பில் தர்மலிங்கம். அந்தக் குடும்பத்தின் அரசியல் வாரிசான அன்பில் பெரியசாமி கவுன்சிலர் சீட்டுக்கு கையேந்தி தோற்றுப் போயிருக்கிறார். நேரு நினைத்திருந்தால் பெரியசாமியை கவுன்சிலராக்கி மேயராக்கி இருக்க முடியாதா?

முந்தைய அத்தியாயத்தை வாசிக்க:

நேருவுடன் அன்பில் பெரியசாமி...
நேருவை நம்பியவர்கள் என்ன ஆனார்கள்? - 2
நேருவுடன் அன்பில் பெரியசாமி...
நேருவை நம்பியவர்கள் என்ன ஆனார்கள்? - 2

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in