இப்படி யாரும் வாக்குக் கேட்டதே இல்லை; திருமாவைப் புகழும் மதுரை மக்கள்!

இப்படி யாரும் வாக்குக் கேட்டதே இல்லை; திருமாவைப் புகழும் மதுரை மக்கள்!
திருமாவளவன் பிரச்சாரம்

“மதுரைக்கு எத்தனையோ தலைவர்கள் ஓட்டுக்கேட்டு வந்திருக்கிறார்கள். தொல்.திருமாவளவனைப் போல் யாரும் வேட்பாளரைப் பற்றிய எல்லா விவரங்களையும் சொல்லி, வாக்குக்கேட்டதில்லை” என்று புகழ்கிறார்கள் மதுரை மக்கள். அப்படி என்ன செய்தார் திருமா?

மதுரை மாநகராட்சியில் மொத்தமுள்ள 100 வார்டுகளில் 30 (மதிச்சியம்), 71 (மாடக்குளம்) ஆகிய 2 வார்டுகள் மட்டுமே விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்தன. அந்த வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக தொல்.திருமாவளவன் இன்று மதுரை வந்தார். எளிமையான ஆடையுடன் சாதாரண டாடா ஏஸ் சரக்கு வாகனத்தில் நின்றபடி பிரச்சாரம் செய்தவர், கைகுலுக்க வந்த யாரையும் தடுக்காமல், அவர்களின் பொன்னாடையை ஏற்றுக்கொண்டு, அவர்கள் குழந்தையை கையில் ஏந்தி, முத்தம் கொடுத்து, தமிழ்ப் பெயரிட்டு அந்தத் தெருவாசிகளில் ஒருவரைப் போலவே நடந்துகொண்டார் திருமா.

71-வது வார்டில் வீதி வீதியாக வேனில் சென்று வாக்கு கேட்ட அவர், 3 இடங்களில் வேனில் நின்றபடியே பேசினார். அப்போது அவர் பேசும்போது, “திமுக தலைவர் அண்ணன் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் நல்வாழ்த்துகளோடும், காங்கிரஸ் பேரியக்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, தமிழ்ப்புலிகள், தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆகிய கூட்டணி கட்சித் தலைவர்களின் ஆதரவு மற்றும் வாழ்த்தோடும் இந்த 21-வது வார்டில் போட்டியிடும் நமது வேட்பாளர் இன்குலாப் என்கிற முனியாண்டி அவர்களுக்கு, தென்னை மரம் சின்னத்தில் வாக்களித்து அவர்களை மாமன்றத்துக்கு அனுப்பிவைக்க வேண்டும் என்று மெத்தப் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். அவர் வெற்றிபெற்று தொண்டு செய்வதற்காக வாய்ப்பு கேட்டு வரவில்லை. தொண்டு செய்துதான் இந்தத் தேர்தல் களத்துக்கே வந்திருக்கிறார்.

அண்ணன் மலைச்சாமி காலத்தில் இருந்து, சுமார் 30 ஆண்டுகளாக பொதுவாழ்வில் இருப்பவர் முனியாண்டி. அண்ணன் மலைச்சாமியின் கைகளைப் பிடித்துக்கொண்டு அரசியலுக்கு வந்தவர். களத்தில் நின்றவர். இன்று நம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தெற்கு மாவட்டச் செயலாளராக பொறுப்பேற்று பணியாற்றி வருகிறார். என்னை வேட்பாளராக நிறுத்துங்கள் என்று வாய்ப்புக் கேட்டு அவர் தொந்தரவு செய்யவும் இல்லை, அழுத்தம் கொடுக்கவும் இல்லை. இன்னும் சொல்லப் போனால் இந்த வார்டையே நாம் கேட்கவில்லை.

திருமாவளவனுடன் நாகை திருவள்ளுவனும் ஒரே வாகனத்தில் நின்றபடி, இன்குலாப் என்ற முனியாண்டிக்கு வாக்கு சேகரித்தார்.
திருமாவளவனுடன் நாகை திருவள்ளுவனும் ஒரே வாகனத்தில் நின்றபடி, இன்குலாப் என்ற முனியாண்டிக்கு வாக்கு சேகரித்தார்.

மதுரை மாநகரில் மொத்தம் 4 வார்டுகளையாவது நாம் எதிர்பார்த்தோம். அதில் மதிச்சியம் தொகுதி மட்டும்தான் முதலில் உறுதியானது. உடனே, நான் திமுக மாநகர் மாவட்ட செயலாளர் தளபதியை தொடர்புகொண்டு, நாங்கள் அவனியாபுரம், மாப்பாளையம் வார்டுகளையும் எதிர்பார்க்கிறோம் என்று சொன்னேன். அவனியாபுரத்தில் அண்ணன் மலைச்சாமியின் அண்ணன் மகன் எழிலை நிறுத்தத் திட்டமிட்டிருந்தோம். ஆனால், அந்த வார்டை கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கிவிட்டோம் என்றும், அந்த வேட்பாளரை எங்களால் திரும்பப்பெற முடியாது. மாப்பாளையம் திமுக வேட்பாளரும் திரும்பப்பெற மாட்டார். ஆனால், மாடக்குளம் வேட்பாளர் தம்பி நாம் சொன்னால் கேட்டுக்கொள்வார். அங்குள்ள திமுக வேட்பாளரை வேண்டுமென்றால் திரும்பப் பெற்றுக்கொண்டு, விடுதலை சிறுத்தைகளுக்குத் தருகிறோம் என்றார். அப்படி கிடைத்த வார்டுதான் இது.

இந்த வார்டில் இன்குலாப் என்ற முனியாண்டி வாய்ப்பே கேட்கவில்லை. ஆனால், இந்த வார்டில் நம் கட்சி சார்பில் யாரை நிறுத்தலாம் என்று கேட்டபோது, எல்லோரும் சொன்ன பெயர் இன்குலாப் என்ற முனியாண்டி. பதவிக்காக முண்டியடித்துக்கொண்டு வந்தவர் அல்ல முனியாண்டி. என்னை வேட்பாளராக அறிவித்தால்தான் நான் கட்சியில் இருப்பேன், இல்லை என்றால் வேறு முடிவு எடுக்க வேண்டியதிருக்கும் என்று மிரட்டியவரும் அல்ல அவர். பெரியார், அம்பேத்கர் கொள்கைக்காக நம் கட்சியில் இருக்கும் கொள்கையாளர் அவர். பதவி ஆசை இல்லாதவர். அரசுப் பணியை இழந்து பொதுவாழ்க்கைக்கு வந்தவர் அவர். மதுரையில் ரயில் மறியல் போராட்டம் நடந்தபோது, நம் இயக்கத்தைச் சேர்ந்த ஆற்றலரசு, சக்திவேல் போன்றோரை எங்கள் கண்முன்னாலேயே காட்டு மிராண்டித்தனமாக போலீஸார் போட்டு அடித்தபோது, காவலர் ஒருவர் சீருடையுடன் ஓடிவந்து அவர்களைத் தடுத்து நிறுத்தினார். அந்தப் போலீஸ்காரர்களுடன் சண்டை போட்டார். அதனால் சஸ்பெண்டும் செய்யப்பட்டார். அவர்தான் இன்குலாப் என்ற முனியாண்டி.

அப்போதும் சுயமரியாதையோடு, எனக்கு அரசுப் பணி தேவையில்லை அம்பேத்கர் பணி போதும் என்று கட்சிக்கு வந்தவர். இந்தக் காலத்தில் யார் அரசுப் பணியை, அதுவும் அதிகாரமிக்க போலீஸ் பணியைவிட்டுவிட்டு பொதுவாழ்க்கைக்கு வருவார்கள்? போலீஸ் வேலையை விட்டுவிட்டு அப்பளம் உருட்டி வாழ்க்கை நடத்தியவர். இங்கே பேசிய மார்க்சிஸ்ட் கட்சியினர் சொன்னார்கள், இந்த மாடக்குளம் பகுதி மதுரை மாநகராட்சியாக மாறி, பல பத்தாண்டுகள் ஆகியும்கூட இன்னமும் கிராமமாகவே இருக்கிறது. எந்த வளர்ச்சியும் இல்லை முன்னேற்றமும் இல்லை என்று. நம் வேட்பாளர் வழக்கறிஞருக்கும் படித்துள்ளார். இந்தப் பிரச்சினைகளை எல்லாம் மாமன்றத்தில் எடுத்துரைத்து, எல்லாவற்றையும் சரி செய்ய தொண்டுள்ளம் கொண்ட முனியாண்டி உழைப்பார். இந்தப் பிரச்சினைகள் எல்லாம் நிவர்த்தி செய்யப்படும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இந்த வார்டை நமக்கு விட்டுக்கொடுத்த திமுக வேட்பாளர் பெயரும் முனியாண்டிதான். இந்தத் தம்பி தான் அவர் (தோளில் கை போட்டு அறிமுகப்படுத்தினார் திருமா). மார்க்சிஸ்ட் கட்சியினரும் நமக்காக கடுமையாக உழைக்கக் காத்திருக்கிறார்கள். எனவே, நமது வேட்பாளருக்கு தென்னை மரம் சின்னத்தில் வாக்களித்து அவரை வெற்றிபெறச் செய்யுங்கள் என்று கேட்டுக்கொள்வதுடன், மதுரை மாநகராட்சியை திமுக தலைமையிலான கூட்டணி கைப்பற்றிட வாக்களியுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

இதைத் தொடர்ந்து 30-வது வார்டு (மதிச்சியம்) பகுதிக்குப் பிரச்சாரத்துக்குச் சென்ற திருமா, அங்கும் வீதி வீதியாக வாக்கு வேட்டையாடினார். அங்கே 4 இடங்களில் அவர் பேசினார். அப்போது, “இந்த 30-வது வட்டத்தில் உங்களுக்கெல்லாம் நன்கு அறிமுகமான, போராட்டக் களத்தில் ஆண்களோடு ஆண்களாய் 25 ஆண்டுகளாக நின்று போராடிக்கொண்டிருக்கிற ஒரு போராளியான மோகனா அவர்கள் நிற்கிறார். அவர் நம் கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலாளர் பாண்டியம்மாள் அவர்களின் உடன்பிறந்த தங்கை. அவர் உங்களுக்கு நன்கு அறிமுகமானவர்தான். அவர் வெற்றிபெற்றால் இந்தப் பகுதி பிரச்சினைகள் மாமன்றத்தில் உங்கள் சார்பில் பேசப்படும், கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். நம்பிக்கையோடு உங்கள் வாசல் தேடி வந்திருக்கிறேன். இதே வார்டில் போட்டியிட நமது கட்சியின் ராசுக்குட்டி, போஸ், கண்ணாயிரம் ஆகியோரும் வாய்ப்பு கேட்டார்கள். இருந்தாலும் கட்சியின் முன்களப் பணியாளராக இருந்தவர் என்ற முறையில் இந்த முறை மோகனாவுக்கு வாய்ப்பு கொடுக்கலாமா என்று நான் கேட்டபோது, உடனே அதைப் பெருந்தன்மையுடன் அவர்கள் ஏற்றுக்கொண்டனர். எப்படியும் மோகனாவை வெற்றிபெற வைப்போம் என்றும் சொன்னார்கள். அவர்களுக்கு எனது நன்றி. வாக்காளர்கள் ஒரு ஓட்டு கூட சிந்தாமல் சிதறாமல் தென்னை மரம் சின்னத்திலே முத்திரையிட வேண்டும். தமிழ்நாடு முழுக்க இப்படி நின்றுகொண்டே பிரச்சாரம் செய்கிறேன். இன்னும் நிறைய இடத்தில் பேசச் சொல்கிறீர்கள். அடுத்து நான் திருச்சி செல்ல வேண்டும் என்பதால், விடை பெறுகிறேன். மறக்காமல் தென்னை மரம் சின்னத்துக்கு வாக்களியுங்கள்” என்றார்.

அந்த வார்டில் அவர் பேசி முடிப்பதற்குள், பக்கத்தில் 28-வது வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் உமாவுக்கும் ஓட்டு கேட்குமாறு வேட்பாளரும், அங்குள்ள விசிகவினரும் திருமாவை வற்புறுத்தினார்கள். நம்ம கட்சி வார்டுக்கு முக்கியத்துவம் கொடுங்கள் என்று இன்னொரு பக்கம் விசிகவினரும் வற்புறுத்தினார்கள். பிறகு திமுக வேட்பாளருக்காகவும் பிரச்சாரம் செய்தார் திருமா.

அப்போது அவர் பேசும்போது, “இந்த வட்டத்தில் நமது கூட்டணி கட்சி சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் அன்புசகோதரி உமா அவர்களுக்கு, ஒரு வாக்கு கூட வீணாகாமல் அனைவரும் வாக்களித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும். முன்னாள் அமைச்சர் அண்ணன் பொன் முத்துராமலிங்கம் அவர்கள் என்னைத் தொடர்புகொண்டு, தம்பி உங்கள் பலத்தை கொண்டுபோய் பந்தல்குடியில் காட்ட வேண்டும், எங்கள் வேட்பாளர் உமாவுக்கு ஆதரவாகவும் வாக்கு கேளுங்கள் என்று அன்புடன் கேட்டுக்கொண்டார். அதன்படி இங்கே வந்து வாக்கு கேட்கிறேன். எப்படி நாம் போட்டியிடும் வார்டுகளில் நமது வெற்றிக்காக திமுகவினர் வாக்களிக்கிறார்களோ, அதேபோல இங்கே கூட்டணி கட்சியான உதயசூரியன் வெற்றிபெற நாமும் ஒரு வாக்கை கூட வீணாக்காமல் ஒட்டுமொத்தமாக வாக்களிக்க வேண்டும்” என்றார்.

திருமா பிரச்சாரம் செய்த 3 வார்டுகளைச் சேர்ந்த மக்களும், “இதுவரையில் எங்கள் வார்டுக்கு எத்தனையோ தலைவர்கள் வந்திருக்கிறார்கள். ஆனால், ஒரு கட்சியின் தலைவர் தெருத்தெருவாக வந்து ஓட்டு கேட்டதுடன், வேட்பாளரைப் பற்றி முழுமையாக மக்களுக்கு அறிமுகப்படுத்தி, வார்டு பிரச்சினைகளையும் எடுத்துக்கூறி ஓட்டுக்கேட்டது திருமாதான்” என்றார்கள்.

Related Stories

No stories found.