``தேவர் ஜெயந்தியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கோஷமிட்டது, செருப்பு வீசியது போன்ற சம்பவங்கள் நடந்திருக்கக் கூடாது'' என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவையொட்டி அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்திவிட்டு பசும்பொன் நினைவிடத்தை விட்டு வெளியேற முயற்சி செய்தார். அப்போது குளம் அருகே எடப்பாடி பழனிசாமி வாகனம் சென்றது.
அந்தநேரத்தில், அதிமுக ஆட்சியில் 10.5 சதவீத இட ஒதுக்கீடு அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ராமேஸ்வரத்தை சேர்ந்த முருகவேல் மற்றும் பொதிகுளத்தை சேர்ந்த ராஜீவ் காந்தி ஆகிய இருவரும் இபிஎஸ் சென்ற வாகனம் மீது செருப்பு மற்றும் கற்களை வீசினர்.
இந்த சம்பவம் அதிமுகவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், ‘’ நான் ஏற்கெனவே எனது சமூக வலைதளங்களின் மூலமாக அறிவுறுத்தி இருந்தேன். பசும்பொன் என்னும் புண்ணிய பூமிக்கு வருபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு தொந்தரவோ துயரத்தையோ கொடுக்கக்கூடாது என்பது எனது வேண்டுகோளாக உள்ளது என குறிப்பிட்டிருந்தேன். இப்படியான ஒரு சம்பவம் நடந்திருக்கக்கூடாது'' என்று கூறினார்.