திமுக தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படுமா?- பட்ஜெட்டை எதிர்நோக்கி இருக்கும் பகுதி நேர ஆசிரியர்கள் சங்கம்

பகுதி நேர ஆசிரியர்கள்
பகுதி நேர ஆசிரியர்கள்திமுக தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படுமா?- பட்ஜெட்டை எதிர்நோக்கி இருக்கும் பகுதி நேர ஆசிரியர்கள் சங்கம்

’’தேர்தலின் போது அளித்த வாக்குறுதியான பணி நிரந்தரம் என்ற ஒற்றை அறிவிப்பை வரும் பட்ஜெட்டில் தமிழக அரசு வெளியிட்டால் போதும்’’ என பகுதி நேர ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதி நிறைவேற்ற வலியுறுத்தி முதலமைச்சருக்கு ஒரு லட்சம் மனு அனுப்பும் போராட்டத்தை பகுதி ஆசிரியர்கள் சங்கம் முன்னெடுத்துள்ளது.

அரசுப் பள்ளிகளில் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள், உடற்கல்வி, ஓவியம், கணினி, தையல், இசை, தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல்திறன்கல்வி ஆகிய கல்வி இணைச்செயல்பாடு பாடங்களில் 12 ஆண்டாக தற்காலிக நிலையில் பணிபுரிகின்றனர்.

அதிமுக ஆட்சியில் 2012-ம் ஆண்டு 16 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் 5 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்டனர். 2014-ம் ஆண்டு 2 ஆயிரம் ரூபாய் சம்பளம் உயர்த்தப்பட்டது. 2017-ம் ஆண்டு எழுநூறு ரூபாய் சம்பளம் உயர்த்தப்பட்டது. 2021-ம் ஆண்டு 2300 ரூபாய் சம்பளம் கடைசியாக அதிமுக ஆட்சியின்போது உயர்த்தப்பட்டதால் 10 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியம் பெற்று வருகின்றனர்.

இதன் பின்னர் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சிக்கு வந்தது. கன்னியாகுமரி மேரிவஹிதா, தருமபுரி அமிர்தராஜ், மயிலாடுதுறை ஸ்டாலின் ஆகிய பகுதிநேர ஆசிரியர்களிடம் பணி நிரந்தரம் செய்வதாக ’உங்கள் தொகுதி ஸ்டாலின்’ கலந்துரையாடலின் போது திமுக தலைவர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார்.

திமுக தேர்தல் வாக்குறுதி 181-ல் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதாக அறிவித்தார். 'உங்கள் தொகுதி ஸ்டாலின்' வாக்குறுதி 100 நாளில் நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்கின்றனர் ஆசிரியர்கள்.

இது குறித்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் கூறுகையில், ‘’கோரிக்கை வைத்தால், அதை இந்த ஸ்டாலின் நிறைவேற்றுவேன் என பொதுமக்கள் நம்பிக்கை வைத்துள்ளார்கள், என்று முதல்வரே கூறி வருகிறார்.

மனுக்கள் வெறும் காகிதம் அல்ல. அதை அதிகாரிகள் நிறைவேற்ற வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டு உள்ளார். திமுக 181-வது தேர்தல் வாக்குறுதிபடி பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என முதல்வருக்கு நாங்கள் அனுப்பும் மனுக்களை ஏற்று பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இந்த பட்ஜெட்டிலாவது அந்த அறிவிப்பு வெளியாகுமா என எதிர்பார்த்து காத்திருக்கிறோம்’’ என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in