எஸ்.எஸ். தென்னரசுக்கு இவ்வளவு தான் திமுகவினரின் மரியாதை!

எஸ்.எஸ். தென்னரசுக்கு இவ்வளவு தான் திமுகவினரின் மரியாதை!
எஸ்.எஸ்.தென்னரசு நினைவிடத்துக்கு கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையில் ஊர்வலம்...

முன்னாள் முதல்வர் கருணாநிதியால் ‘சிறைப்பறவை’ என்று செல்லமாக அழைக்கப்பட்டவர் சிறுகதை மன்னன் எஸ்.எஸ்.தென்னரசு. அவரது 31-வது நினைவு தினம் இன்று!

தேர்ந்த இலக்கிய வாதியான தென்னரசு, 1989-ல் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதி திமுக எம்எல்ஏ-வாக இருந்தார். அந்த சமயத்தில் திமுக மாவட்டச் செயலாளராக இருந்த தா.கிருட்டிணனுக்கும் தென்னரசுவுக்கும் அரசியல் ரீதியாக போட்டி இருந்ததால் தென்னரசுக்கு 1989 திமுக ஆட்சியில் அமைச்சர் பதவி கிடைக்காமல் போனது. இருந்தபோதும், தென்னரசு மீது அளவுகடந்த பாசம் வைத்திருந்தார் கருணாநிதி, அதன் அடையாளமாகத்தான் 2007-ல், தென்னரசு எழுதிய நூல்களை நாட்டுடமை ஆக்கினார் கருணாநிதி. இதற்கிடையில் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 30 வருடங்களுக்கு தென்னரசு இயற்கை எய்தினார்.

தென்னரசுவின் உடல் திருப்பத்தூர் அருகே தானிப்பட்டியில் உள்ள அவரது சொந்த தோப்பில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அதிலிருந்து ஆண்டு தோறும் அவரது நினைவு நாளான ஏப்ரல் 13-ம் தேதி மாவட்ட அளவில் உள்ள திமுகவினர் தென்னரசுவின் நினைவிடத்துக்கு ஊர்வலமாக வந்து அஞ்சலி செலுத்திச் செல்வார்கள்.

தென்னரசுக்கு பின்னால் 1996-ல் திருப்பத்தூர் திமுக எம்எல்ஏ-வாக வெற்றிபெற்ற இராம.சிவராமன் காலத்தில் தென்னரசுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் திரளான திமுகவினர் கலந்துகொள்வார்கள். சிவராமன் திடீர் மறைவுக்குப் பிறகு தென்னரசு நினைவுநாள் அஞ்சலி நிகழ்ச்சிக்கு திமுகவினரை ஒருங்கிணைக்க சரியான ஆட்கள் இல்லாமல் போனதால் தானிப்பட்டிக்கு வரும் திமுகவினரின் எண்ணிக்கை படிப்படியாக குறைய ஆரம்பித்தது. எனினும் யார் வந்தாலும் வராவிட்டாலும் ஆண்டு தோறும் தென்னரசு குடும்பத்தினர் மட்டும் தவறாமல் அவரது நினைவிடத்துக்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

இன்று தென்னரசுவின் 31-வது நினைவு தினம். இன்று காலையில், மாவட்ட அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையில் சிவகங்கை மாவட்ட திமுகவினர் சுமார் 50 பேர் ஊர்வலமாக வந்து தென்னரசு நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திச் சென்றார்கள். இவ்வளவு தான் கருணாநிதியால் கொண்டாடப்பட்ட அவரது அணுக்கத் தோழர் தென்னரசுக்கு ஆளும் திமுகவினர் வைத்திருக்கும் மரியாதை!

Related Stories

No stories found.