பல முதலாளிகள், பல சமையல்காரர்கள்... நடக்கப் போவது இதுதான்: அதிமுகவின் நிலை குறித்து பூங்குன்றன் கணிப்பு!

பூங்குன்றன்
பூங்குன்றன்

``எல்லோரும் முதலாளி ஆகிவிட்டார்கள். எங்களை ஒன்றும் செய்ய முடியாது என்று எல்லோரும் நினைக்கத் தொடங்கி இருக்கிறார்கள் என்பதுதான் இந்த கட்சி தேய்ந்து போவதற்கு முக்கிய காரணம்'' என தன் முகநூலில் வேதனையோடு பதிவிட்டுள்ளார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் உதவியாளராக இருந்த பூங்குன்றன்.

இதுகுறித்து பூங்குன்ற தன் முகநூலில் பதிவிட்டுள்ள பதிவில், “நான் கூட கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு கழக பொன்விழா ஆண்டை சிறப்பாக கொண்டாடுவோம் வாருங்கள் என்று அழைத்துவிட்டேன். காரணம் பொன்விழாவை யாருமே இதுவரை கொண்டாடவில்லை என்று நினைத்தது தான். இந்த ஆண்டு பொன்விழா ஆண்டு அல்ல அடுத்த ஆண்டு என்று தவறுதலாக கணித்துவிட்டேன். பிறகுதான் தெரிந்தது நம் தலைவர்கள் பொன்விழா ஆண்டு என்று அறிக்கை விட்டதோடு சரி இப்பொழுது நிறைவு விழாவை கொண்டாட அறிக்கை விட்டிருக்கிறார்கள். 

என்ன செய்வது? கழகம் பிளவுபட்டிருக்கிறது. ஒருத்தர் தான் பொன்விழா நடத்த வேண்டுமா என்ன? பிரிந்து இருப்பவர்கள் எல்லாம் தனித்தனியாக ஒரு பொன்விழா ஆண்டை கொண்டாடி இருக்கலாமே! மிகவும் சிறப்பாக இருந்திருக்குமல்லவா! கட்சிக்காக பாடுபட்ட தொண்டர்களுக்கு பண முடிப்பை கொடுத்திருக்கலாம், தொண்டர்களை உற்சாகப்படுத்தி இருக்கலாம், ஒரு பெரும் எழுச்சியை உண்டாக்கி இருக்கலாம்.  இப்படி எல்லாம் செய்யவில்லையே ஏன் என்று கேட்கத்தான் தோன்றுகிறது. ஆனால் நாம் பேசுவது அவர்கள் காதில் விழவாப் போகிறது. இல்லை நாம் சொல்வதைக் கேட்டு உடனே பொன்விழா ஆண்டை சிறப்பாக நடத்தி விடப் போகிறார்களா? தயவுசெய்து பொன்விழா ஆண்டில் உழைத்த தொண்டர்களுக்கு உதவுங்கள். நா வறண்டு பேசிய தலைமை கழகப் பேச்சாளர்களுக்கு பணம் முடிப்பை வழங்குங்கள். பிரிந்தவர்கள் எல்லாம் தனித்தனியாக கொடுத்தால் பலருக்கு உதவிகள் போய் சேருமே!

பொன்விழா ஆண்டை கொண்டாடாத தலைவர்களை வைத்து இந்த கட்சி என்ன சாதிக்கப் போகிறது? நான் சொன்னால் என்னை வசை பாடுவார்கள். எல்லாம் தெரிந்தவர்கள் அவர்கள். சுயநலம் சுற்றி சுற்றி வரும் போது பொதுநலம் எங்கே பிறக்கும். ஒரு கடைக்கு ஒரு முதலாளி இருந்தால் அந்த கடை நன்றாக இருக்கும். பல முதலாளிகள் தோன்றிவிட்டால் அந்த கடை எப்படி நன்றாக இருக்க முடியும். இந்த கடை இல்லாவிட்டால் இன்னொரு கடை இருக்கிறது என்று நினைக்கும் போது என்னதான் செய்ய முடியும். ஒரு சமையலை பல சமையல்காரர்கள் செய்தால் என்ன நடக்குமோ? அதுதான் நடக்கப் போகிறது. சுதாரித்துக் கொள்ளுங்கள். எல்லோரும் முதலாளி ஆகிவிட்டார்கள். எங்களை ஒன்றும் செய்ய முடியாது என்று எல்லோரும் நினைக்கத் தொடங்கி இருக்கிறார்கள் என்பதுதான் இந்த கட்சி தேய்ந்து போவதற்கு முக்கிய காரணம். 

புரட்சித் தலைவரும், புரட்சித்தலைவியும் இந்த பொன்விழா ஆண்டில் இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்பதை நினைத்துப் பார்க்கும்போது மகிழ்ச்சி பீறிடுகிறது. அம்மா நடத்திய வெள்ளி விழா ஆண்டை மறக்கமுடியுமா தொண்டர்களே!  இதய தெய்வங்களே! இனியாவது கழகத்தை காப்பாற்றுங்கள். ஒற்றுமை ஏற்பட வழி செய்யுங்கள்” என்று அதிமுகவின் பல அணிகளுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in