தேர்தல் அரசிலைவிட்டு ஏன் ஒதுங்கினேன்? - எச்.ராஜா பேட்டி

எச்.ராஜா
எச்.ராஜா

தமிழக பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவர் எச்.ராஜா.  அதிரடிக் கருத்துகளை பேசி தமிழக அரசியலை அவ்வப்போது தகிக்க வைப்பவர். 2019 மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட ராஜா, காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்திடம் தோற்றுப் போனார். இதற்கு முன்பும் ராஜா இங்கு போட்டியிட்டவர் என்பதால் 2024 தேர்தலிலும் அவர் சிவகங்கையில் களமிறங்குவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதைப் பொய்யாக்கி, தேர்தல் அரசியலிலிருந்து  விலகுவதாக அதிரடியாக அறிவித்திருக்கிறார் ராஜா. இதுகுறித்து அவரிடம் பேசினோம். இனி அவரது பேட்டி... 

தேர்தல் அரசியலில் இருந்து ஒதுங்குவதாக நீங்கள் அறிவிக்கக் காரணம் என்ன?

மற்றவர்களுக்கு வழிவிட்டு, அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் விதமாக தேர்தல் அரசியலிலிருந்து ஒதுங்குவதாக அறிவித்துள்ளேன். ஆனால், இந்துக்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் முதல் ஆளாக முன் நிற்பேன். நிச்சயமாக கட்சி பணி செய்வேன். தேர்தலில் பாஜக சார்பில் நிற்கக்கூடியவர்களுக்காக பிரச்சாரம் செய்து அவர்களை வெற்றிப் பெறச்செய்வேன்.

சிவகங்கையில் பாஜக வளர்ச்சி அடைந்துள்ளதாக கூறி வரும் நிலையில், உங்களுடைய இந்த விலகல் அறிவிப்பு  பின்னடைவாக இருக்காதா..?

நிச்சயமாக இருக்காது. சிவகங்கை தொகுதியில் பாஜக வளர்ச்சி அடைந்துள்ளது என்பது உண்மை. அந்தத் தொகுதியில் பாஜகதான் நிற்கும்; நிற்க வேண்டும் அதுதான் எனது விருப்பமும் கூட.  யார் நின்றாலும் இருக்கக்கூடிய 428 பஞ்சாயத்துகளிலும் நான் வாக்குச் சேகரித்து அந்த வேட்பாளரை வெற்றி பெறச் செய்வேன். இதில் எனக்கு எந்தவிதமான பின்னடைவும் கிடையாது. தொடர்ந்து நான் தான் நின்று வருகிறேன் அடுத்தவர்களுக்கு அந்த வாய்ப்பை அளிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த முடிவு.

தேர்தல் அரசியலில் வெற்றி பெறமுடியாது என்ற பயத்தின் காரணமாகவே இந்த முடிவை எடுத்துள்ளதாக விமர்சனங்கள் வருகிறதே..?

நெவர்! எந்த முட்டாள் சொன்னான்? நான் ஏன் பயப்பட வேண்டும். 1989-லேயே காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டவன். அப்போது தமிழக பாஜகவால் 22 வேட்பாளர்கள் மட்டுமே நிறுத்த முடிந்தது. அதில் காரைக்குடி தொகுதி வேட்பாளர் நான். அதன் பிறகு 2001-ல் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றவன் நான். அதனால் தேர்தலைக் கண்டு பயப்படுபவன் நான் அல்ல. 

இவர்கள் அனைவரும் பின்னணி தெரியாமல் பேசுகிறார்கள். 1989-ல் நின்றவர்கள் பிற்காலத்தில் சட்டமன்ற உறுப்பினர்களாகி உள்ளோம். எச்.ராஜா, சி.வேலாயுதம், எம்.ஆர்.காந்தி நாங்கள் மூவரும் அன்றில் இருந்தே தேர்தலில் நின்று வருகிறோம்.  இந்த வரலாறுகள் எல்லாம் தெரியாத முட்டாள்கள் பேசுவதை பொருட்படுத்த வேண்டாம். ராஜாவைப் பற்றி விமர்சனம் வைத்தால், அதுகூட விலைபோகும் செய்தியாகும் என்பதற்காக பேசி அப்படிப் வருகிறார்கள்.

ஆளுநர் உள்ளிட்ட எந்த பொறுப்பும் கிடைக்கவில்லை என்ற அதிருப்தியும் இதற்குக் காரணமா?

இந்து ஆதரவாளன், பாஜககாரன் என்ற அந்தப் பொறுப்பு எனக்குப் போதும். பல பொறுப்புகளை கடந்து வந்தவன் நான். நான் நினைத்தால் எந்த பொறுப்பையும் கேட்டுப்பெற முடியும் அதற்கான தகுதியும் திறமையும் என்னிடம் உள்ளது. இது அதிருப்தியில் எடுத்த முடிவெல்லாம் இல்லை. முன்பே கூறியதுதான் புதியவர்களுக்கு வழிவிட வேண்டும் என்பதால் இந்த முடிவு.

பிரதமர் வருகைக்கு எதிராகக் காங்கிரஸ் முன்னெடுத்துள்ள  கருப்புக்கொடி போராட்டத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?

காங்கிரஸின் இத்தகைய போக்கு வன்மையாக கண்டிக்கத்தக்கது. ராகுல் காந்தி தண்டிக்கப்பட்டதற்கு ராகுல் காந்தியே தான் காரணம். ஒரு சமுதாயம் குறித்துப் பேசினார், அதனால் பாதிக்கப்பட்ட அந்த சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு நபர் போட்ட வழக்கு. பாஜகவோ, குஜராத் அரசோ, மத்திய அரசோ வழக்குப் போடவில்லை. 

அப்புறம் எப்படி இவர்கள் பிரதமர் மோடியைக் குற்றம் சொல்ல முடியும்? நீதிமன்றத்தில் கேட்கிறார்கள், “நீங்கள் மன்னிப்புக் கேட்கிறீர்களா நாங்கள் விட்டு விடுகிறோம்” என்று. அதற்கும்  விதாண்டவாதமாக, “நாங்கள் காந்தி, சாவர்க்கர் அல்ல” என கூறுகிறார். நான் கேட்கிறேன் இவர்கள் நேரு குடும்பம் தானே அப்புறம் எப்படி காந்தியாக முடியும். ராகுல்காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர்  மோசக்காரர்கள். அதனால் தான் இந்த கருப்புக் கொடி நாடகம்.

ஸ்டெர்லைட் விவகாரம் குறித்து ஆளுநர் பேசியுள்ள கருத்து சரியா..?

ஸ்டெர்லைட் விவகாரத்தில் அந்த போராட்டம் நடக்கும் போதே நான் சொன்னேன். 40 சதவீதம் காப்பர் உற்பத்தி செய்யும் ஆலையை மூட சொல்வதற்கு ைஅர்பன் நக்சல், சீனா ஆதரவாளர்கள் தான் காரணம் என்று. 100 நாட்கள் போராட்டம் நடத்துகிறார்களே இவர்களுக்கு நிதி எங்கிருந்து வந்ததது? சாப்பிடுகிறார்களா இல்லையா? இத்தனை பேர் சாப்பிடுவதற்கு யார் உதவி செய்கிறார்கள்? என்பதனை இந்த போராட்டத்தை ஒருங்கிணைத்தவர்கள் சொல்லட்டுமே பார்க்கலாம். அதெல்லாம் அவர்களால் முடியாது.

ஆளுநரைப் பொறுத்தவரை அவர் தகவல்களையும், தரவுகளையும் கையில் வைத்துக் கொண்டுதான்  பேசியிருக்கிறார். அநாவசியமாக ஆளுநரைச் சீண்டினால் பெரியமனுசங்க எல்லோரும் உள்ளே போக வேண்டியிருக்கும். இதனை எச்சரிக்கையாகக் கூட எடுத்துக் கொள்ளலாம்.

திமுக முன்னெடுக்கும் சமூக நீதி கூட்டமைப்பு குறித்து உங்கள் கருத்து?

முதலில் சமூக நீதியை எல்லா மட்டங்களிலும் செயல்படுத்தியவர் பிரதமர் மோடி. பாஜக ஆட்சியில் தான் இஸ்லாமியர்,  பட்டியலினத்தவர், பழங்குடியினர் நாட்டின் உயர்ந்த பதவியான குடியரசுத்தலைவர் பதவிக்கு வர முடிந்தது. திமுகவின் சமூக நிதி நாடகம் எப்படி இருக்கிறது என்றால் ’மூன்றாம் பிறை’ படத்தில் கமல்ஹாசன் நினைவு  போன  ஸ்ரீதேவிக்கு  ஞாபகப்படுத்துவதற்கு ஒரு நாடகம் போடுவார் அந்த மாதிரி தான். மக்கள் மறந்து விடக் கூடாது என்பதற்காக ஸ்டாலின் மற்றும் அவரது கூட்டாளிகள் குரங்கு வேஷம் போட்டு குட்டிக் கர்ணம் போட்டும் நடனமாடியும் மக்களுக்கு நினைவுபடுத்தும் வேலையில் ஈடுபட்டுள்ளார்கள். மக்கள் இவர்களை மறந்துவிட்டார்கள் அதனால், என்ன குட்டிக் கர்ணம் அடித்தாலும் நம்பமாட்டார்கள்.

நிலக்கரி சுரங்கள் குறித்து உங்களுடைய நிலைப்பாடு?

விவசாயிகளை பாதிக்கும் திட்டங்களை செயல்படுத்தக் கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அதனை மத்திய அரசிடம் கொண்டு சென்றுள்ளோம். திட்டத்தைத் தடுத்து நிறுத்த வேண்டுமெனில் நாங்கள் தான் செய்ய முடியும். ஸ்டாலினால் மசோதாவை மட்டும்தான் இயற்ற முடியும். விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றும் இடத்தில் நாங்கள் உள்ளோம் அந்த மனமும் எங்களுக்கு உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in