பேனா நினைவுச்சின்னம் வைக்க இது தான் காரணம்: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சொன்ன ரகசியம்

அமைச்சர் ஜெயக்குமார்
அமைச்சர் ஜெயக்குமார்ஈரோடு இடைத்தேர்தலில் முன் வைத்த காலை, பின் வைக்க மாட்டோம் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட்டாலும் நாங்கள் முன் வைத்த காலை, பின் வைக்க மாட்டோம் என்றும், ஓபிஎஸ் ஒரு மண் குதிரை அவர் கரை சேரமாட்டார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக முறைக்கேடுகளில் ஈடுபடுவதாக கூறி சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவிடம் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகார் அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், ‘’ஆளுங்கட்சியான திமுக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பல்வேறு முறைக்கேடுகளில் ஈடுபட்டு வருகிறது. அதற்கான ஆதாரங்களுடன் தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளோம். அவர் நிச்சயம் நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம்.

ஈரோடு கிழக்குத் தொகுதியில் வாக்காளர் பட்டியல் அடிப்படையில் ஆய்வு செய்ததில் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் பேர் வரை ஆட்களே இல்லாத நிலை உள்ளது. போலியான வாக்காளர் அட்டைத் தயாரிக்கப்பட்டு முறைக்கேட்டில் திமுக ஈடுபட உள்ளது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஜனநாயக படுகொலையை திமுக நிகழ்த்தி வருகிறது என்பதை தலைமை தேர்தல் அதிகாரியிடம் ஆவணங்களுடன் சுட்டிக்காட்டியுள்ளோம். எந்த நிலையிலும் அதிமுக இரட்டை இலை சின்னம் முடக்கப்படாது. முடக்குவாதம் உள்ளவர்களுக்கு தான் அந்த எண்ணம் எல்லாம் வரும். வழக்கு நிலுவையில் உள்ள போது அது குறித்து பேசுவது சரியாக இருக்காது.

ஓபிஎஸ் போட்டி என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும். அது ஒரு மண் குதிரை. அது கரைச் சேராது. அதனால் அவரைக் குறித்து பேசத் தேவையில்லை. ஈரோடு தேர்தல் பணிக்குழு அலுவலகத்தில் டைப்பிங் தவறாக குறிப்பிடப்பட்டது. அது உடனடியாக சரி செய்யப்பட்டுவிட்டது. எங்கள் கட்சி விவகாரங்களில் பாஜக தலையிட்டது கிடையாது. அவர்கள் தலையிடவும் மாட்டார்கள். கூட்டணிக்கு அதிமுகத்தான் தலைமை. கூட்டணித் தர்மத்தோடு செயல்படுகிறோம்.

கடலில் பேனா நினைவுச்சின்னம் வைப்பதால் மீனவர்கள் பாதிக்கப்படுவார்கள், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும். வார இறுதி நாட்களில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் நினைவிடத்திற்கு100% பொதுமக்கள் வருகிறார்கள். ஆனால் கருணாநிதி நினைவிடத்திற்கு 20% மக்கள்தான் வருகிறார்கள். அதனை முதலமைச்சர் ஸ்டாலினால் ஜீரணிக்க முடியவில்லை. அதனால் பேனா நினைவுச் சின்னத்தை வைத்து மக்களை ஈர்க்க நினைக்கிறார்.

எழுதாத பேனாவை அண்ணா அறிவாலயத்தில் வைக்கலாம். கருத்துக்கேட்பு கூட்டம் திமுகவின் பொதுக்குழு கூட்டம் போல முழுக்க முழுக்க சமூக விரோதிகள் கூடி யாரையும் பேசவிடாமல் செய்தார்கள். சம்பந்தம் இல்லாதவர்கள் பேசினார்கள். மீனவர்களை பாதிக்கப்படக்கூடிய இந்த திட்டத்தை அதிமுக கடுமையாக எதிர்க்கும். பாஜக போட்டியிட்டாலும் நாங்கள் முன்வைத்த காலை பின் வைக்க மாட்டோம்’’ என தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in