`ஓபிஎஸ்ஸை தூண்டிவிட்டு திமுக குளிர்காயப்பார்க்கிறது’- ஜெயக்குமார்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்`ஓபிஎஸ்ஸை தூண்டிவிட்டு திமுக குளிர்காயப்பார்க்கிறது’- ஜெயக்குமார்

’’ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டமசோதா தொடர்பாக ஓபிஎஸ்ஸை பேச அனுமதித்தது ஜனநாயக மரபுகளை மீறிய செயல். இது மிகவும் வேதனைக்குரிய விஷயம்’’ என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘’சட்டப்பேரவையில் இயற்றப்படும் எந்தவிதமான சட்ட மசோதாவாக இருந்தாலும் அந்த மசோதா மீது கட்சிக்கு ஒருவர் மட்டுமே பேச அனுமதிக்க வேண்டும். ஆனால் ஓபிஎஸ்ஸை மரபுகளையும், மாண்புகளையும் மீறி சபாநாயகர் பேச அனுமதித்தது வேதனைக்குரிய விஷயம்.

சட்டப்பேரவையை பொறுத்தவரை பெரும்பான்மையின் அடிப்படையில் தான் முடிவெடுக்க வேண்டும். ஓபிஎஸ் உட்பட நான்கு பேரும் கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ளனர். அப்படியிருக்கையில் எந்த அடிப்படையில் சபாநாயகர் அவரை பேச அனுமதித்தார் என்பது தெரியவில்லை. அவரை அனுமதித்தன் மூலம் ஜனநாயக மரபுகளை மாண்புகளை சீர்குலைத்துள்ளதாகத் தான் எடுத்துக் கொள்ள முடியும்.

ஓபிஎஸ் பேசும் வரும் வரை ஈபிஎஸ் அமைதியாகத்தான் இருந்தார். அவர் அதிமுக சார்பாக வரவேற்கிறேன் என்று கூறும் போதுதான் எதிர்ப்பு தெரிவித்தோம். ஓபிஎஸ் அந்த வார்த்தையை தவிர்த்து இருக்கலாம் அல்லது சபாநாயகர் அந்த வார்த்தையை நீக்குவதாக அறிவித்திருந்தால் இந்த மோதல் ஏற்பட்டு இருக்காது.

அதிமுக என்பது ஈபிஎஸ் தலைமையில் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. 62 சட்டமன்ற உறுப்பினர்களும் அவரது தலைமையின் கீழ்தான் ஒற்றுமையாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஓபிஎஸ்ஸை தூண்டிவிட்டு திமுக குளிர்காயப்பார்க்கிறது. ஏற்கெனவே ஓபிஎஸ்ஸின் செயல்பாடுகள் திமுகவின் ‘பி’ டீம் போலத்தான் உள்ளதாக பொதுமக்களே குற்றம்சாட்டுகிறார்கள். அதிமுகவை சிறுமைப்படுத்த முதலமைச்சர் மற்றும் பேரவைத்தலைவரால் முடியாது. அதிமுக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என தேய்ந்த ரெக்கார்டு போன்று சசிகலா சொல்லிக்கொண்டே இருக்கட்டும். அதிமுகவிற்கும் அவருக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்றே தொண்டர்களும் பொதுமக்களும் நினைக்கிறார்கள்’’ என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in