`நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த இதுதான் ஒரே வழி'- அடித்துச் சொல்லும் துரை வைகோ

`நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த இதுதான் ஒரே வழி'- அடித்துச் சொல்லும் துரை வைகோ

"நாடாளுமன்ற தேர்தலில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மதவாத சக்திகளை எதிர்க்கின்ற அனைத்து சக்திகளும் ஓராணியாக நின்றால் கண்டிப்பாக பாஜகவை வீழ்த்த முடியும்" என்று மதிமுக தலைமைக்கழக செயலாளர் துரை வைகோ கூறினார்.

கும்பகோணத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக தலைமைக்கழக செயலாளர் துரை வைகோ, "நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் இருக்கிறது. மதச்சார்பற்ற கட்சிகளின் கூட்டணி வலுவாக இருக்கிறது. மதவாத சக்திகளை எதிர்க்கும் யாராக இருந்தாலும் வந்து சேர்ந்தால் எங்கள் கூட்டணி வலுப்பெறும். தற்போது உள்ள கூட்டணியில் எந்த மாற்றமும் இருக்காது. மதிமுகவை பொருத்தமட்டில் எத்தனை தொகுதி என்பது தலைமை முடிவெடுக்கும். கூட்டணி தொடர்பாக முதல்வர் தளபதி முடிவு எடுப்பார்.

வடமாநிலங்களைப் பொருத்தவரை அதுவும் குறிப்பாக சில மாநிலங்களை பொருத்தவரை கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் குறிப்பாக, பிஹாரில் பாஜக வாங்கிய வாக்கு 24 சதவிகிதம் தான். அங்கு நான்கு அணிகளாக போட்டியிட்டதால்தான் பாஜக வெற்றி பெறுவதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. இன்று நடந்த முடிந்த குஜராத் தேர்தலிலும் அதை பார்க்கலாம். ஆம் ஆத்மி கட்சி வாக்குகளை பிரித்ததால்தான் இன்று மறுபடியும் பாஜக வரும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. அதனால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மதவாத சக்திகளை எதிர்க்கின்ற அனைத்து சக்திகளும் ஓராணியாக நின்றால் கண்டிப்பாக பாஜகவை வீழ்த்த முடியும். அந்த நம்பிக்கை இருக்கிறது. மூன்றாவது அணி நான்காவது அணி என்று நின்றால் அது பாஜகவுக்கு ஒரு வாய்ப்பை உருவாக்கி விடும் என்பது என்னுடைய கருத்து.

அண்ணல் அம்பேத்கர் இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கியவர். ஜாதி, மதத்திற்கு எல்லாம் அப்பாற்பட்டவர். இன்றைக்கு திருவள்ளுவரை விட்டு வைக்கவில்லை. அண்ணல் அம்பேத்கரை விட்டு வைக்கவில்லை. இந்த மதவாத சக்திகளை பொருத்தவரைக்கும் மக்கள் மத்தியில் மதத்தின் பெயரால் வேறுபாடுகளை உருவாக்கி, அதன் மூலம் தங்கள் வாக்கு வங்கிகளை நிரப்பி கொண்டு இருக்கும் வேலையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதில் வேதனை என்னவென்றால், தமிழக ஆளுநர் இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபட்டு இருப்பது தான். எங்கு போனாலும் ஒரு குறிப்பிட்ட மதம் சார்பாகவும் மனுதர்மம் பற்றியும் அவர் பேசிக் கொண்டிருக்கிறார். தமிழக அரசால் நிறைவேற்றப்பட்ட 20க்கும் மேற்பட்ட மசோதாக்கள் நிறைவேற்றாமல் இன்றுவரை இருக்கிறார். சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவும் காலாவதிஆகிவிட்டது. தமிழ்நாட்டு மக்களுக்கு செயல்படக்கூடிய ஒரு ஆளுநராக இல்லாமல் அவரே மதவாத சக்திகளுக்கு துணை போவதாக தான் என்னுடைய கருத்து" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in