ஆறு முறை சந்தித்துப் பேசியும் அப்படியே இருக்கு எங்கள் கோரிக்கை!

திமுக அரசுக்கு எதிராக அரசு ஊழியர்கள் கொந்தளிப்பது ஏன்?
ஆறு முறை சந்தித்துப் பேசியும் அப்படியே இருக்கு எங்கள் கோரிக்கை!

திமுக ஆட்சி எப்போதுமே அரசு ஊழியர்களுக்கு பொற்கால ஆட்சி எனப் பேச்சு உண்டு. ஆனால், அண்மைக்காலமாக ஜாக்டோ - ஜியோ அமைப்பினரும், அரசு ஊழியர் சங்கத்தினரும் திமுக அரசுக்கு எதிராக அடுக்கடுக்கான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள். போராட்ட அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறார்கள். பழைய பென்ஷன் திட்டம் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளைக்கூட திமுக நிறைவேற்றவில்லை என அதிருப்திக் குரல் கேட்கிறது.

இப்படியான சூழலில், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் துணைப் பொதுச்செயலாளர் என்.வெங்கடேசனிடம் காமதேனுவுக்காகப் பேசினோம்.

வெங்கடேசன்
வெங்கடேசன்

அரசு ஊழியர்களை போராட்ட களத்தில் பார்க்கமுடிகிறது. அரசிடம் நீங்கள் வலியுறுத்தும் முக்கிய கோரிக்கைகள் பற்றிச் சொல்லலாமா?

பழைய பென்ஷன் திட்டம் தான் முக்கியமான கோரிக்கை. 2003 ஏப்ரல் முதல் தேதிக்குப் பின்னால் அரசுப் பணியில் சேர்ந்த அனைவருக்கும் புதிய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தி உள்ளனர். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் எனக் கேட்கிறோம். சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம ஊழியர்கள், ஊர்ப்புற நூலகர்கள் போன்ற சிறப்புக் காலமுறை ஊதியம், தொகுப்பூதியம் என இருப்பவர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கிடக் கேட்கிறோம்.

ஒப்பந்தப் பணியில் இருப்போரை நிரந்தரப் பணியாளர்களாக மாற்றச் சொல்கிறோம். இதில், கல்லூரி ஆசிரியர்கள் வரைக்கும் வருவார்கள். சாலைப் பணியாளர்கள் கோரிக்கையும் நீண்டகாலமாக கிடப்பில் உள்ளது. சில ஆசிரியர்களுக்கு சம்பளத்தில் முரண்பாடு இருக்கிறது. அதைச் சரிசெய்யக் கோருகிறோம்.

ஒன்றிய அரசு அறிவிக்கும்போதெல்லாம் மாநில அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு இருந்து வந்தது. மத்திய அரசு, வழக்கமாக ஜனவரி 1 முதல், ஜூலை 1 முதல் என இருமுறை அகவிலைப்படியை உயர்த்தி அறிவிக்கும். கரோனா காலத்தில் மத்திய - மாநில அரசுகள் மூன்று அகவிலைப்படியை நிறுத்தின. மத்திய அரசு மீண்டும் அகவிலைப்படி உயர்வை அமல்படுத்தி 6 மாதங்கள் கழித்தே தமிழக அரசு அமல்படுத்தியது. இதனால் ஒரு அரியரும் போய்விட்டது. அதேபோல் வருடத்தில் 15 நாள்கள் பணிக்கொடை விடுப்பு உண்டு. அதை சரண்டர் செய்தால் பணம் கிடைக்கும். கரோனா காலத்தில் இருந்தே அதையும் நிறுத்திவிட்டனர். இப்படி நிறைய கோரிக்கைகள் இருக்கிறது.

திமுக அரசு எப்போதுமே அரசு ஊழியர்களுக்கு அனுசரணையாகவே இருக்கும். இப்போது உங்களின் கோரிக்கைகளை ஏற்கமுடியாமல் இருப்பதற்கு நிதி நெருக்கடியும் காரணமாக இருக்குமா?

நிதி நிலைமையை சீராக்க மாற்று வழிகளை உருவாக்க முடியும். மாநில பட்ஜெட் உரையிலேயே, ‘ஊதியம் மற்றும் ஓய்வூதியத்துக்காக அரசு அதிகமான நிதியை ஒதுக்க வேண்டியுள்ளது. அதேசமயம் காலிப் பணியிடங்களும் அதிகமாக உள்ளது. அதனால் புதிய பணியிடம், பயிற்சி தொடர்பாக மாற்றம் கொண்டுவர ஒருகமிட்டி உருவாக்கி அதன் அறிக்கையைப்பெற்று பணியிடங்கள் நிரப்புவது குறித்து முடிவுசெய்வோம்’ என வாசிப்பார்கள். அரசுக்கு, அரசு ஊழியர்களின் சம்பளமும், ஓய்வூதியமும் தான் பிரச்சினையாகவும், கவலையாகவும் தெரிகிறது. புதிய பொருளாதாரக் கொள்கையால் அனைத்து மாநிலங்களிலும் ஏற்பட்டிருக்கும் சிக்கல் இது.

தமிழகத்தில் திமுக ஆட்சியில் தான் பெரும்பாலான சம்பள கமிஷன்கள் வந்திருக்கிறது. 1989 திமுக ஆட்சியில் தான் தமிழக அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வந்தது. 1996 மற்றும் 2006-ல் சம்பள கமிஷன்கள் அமைத்ததும் திமுக ஆட்சிதான். ஆனால் 2016 அதிமுக ஆட்சியில், சம்பள கமிஷனே அமைக்காத காலம் ஆகிப்போனது.

அரசு நினைத்தால் பழைய பென்ஷன் திட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த முடியும். ஓய்வூதிய நிதி ஒழங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்தில் (பி.எஃப்.ஆர்.டி.ஏ) கையெழுத்திட்ட மாநிலங்கள் தான் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த முடியாது. தமிழகம் இன்னமும் அதில் கையெழுத்திடவில்லை.

தமிழகம், மேற்கு வங்கத்தைத் தவிர மற்ற மாநிலங்கள் அனைத்தும் இதில் கையெழுத்திட்டுவிட்டன. மேற்கு வங்கம் பழைய பென்ஷன் திட்டத்தையே அமலில் வைத்திருக்கிறது. தமிழக அரசு புதிய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்துவதாகச் சொல்லிவிட்டு, பி.எஃப்.ஆர்.டி.ஏ-விலும் கையெழுத்திடாமல் ரெண்டும் கெட்டான் நிலையில் இருக்கிறது.

தலைமைச் செயலகம்
தலைமைச் செயலகம்

அப்படியானால் இதில் ரொம்பவும் சிக்கல் இருக்கும்போல் தெரிகிறதே?

புதிய பென்ஷன் திட்டத்தின் விதிகளின்படி, பணியாளரிடம் இருந்து பென்ஷன் பங்களிப்புத் தொகையாக பத்து சதவீதம் ஊதியத்தில் பிடித்தம் செய்கிறார்கள். கடந்த நிதியாண்டு கணக்குப்படி 6 லட்சத்து 2,327 பேர் புதிய பென்ஷன் திட்டத்தின் கீழ் உள்ளனர். இதுவரை 50,264 கோடியே 72 லட்சம் ரூபாய் பணியாளர் மற்றும் பணிவழங்குபவர் நிதியாக புதிய பென்ஷன் திட்டத்தில் சேர்ந்துள்ளது. அதன்பின்பு 29,965 பேர் பணி ஓய்வு பெற்றும், இறந்தும் போயிருக்கின்றனர். அதில் 24 ஆயிரத்து 719 பேருக்கு இறுதி செட்டில்மென்ட் வழங்கியுள்ளனர்.

பணியாளர் பங்களிப்புத் தொகை, பணி வழங்கியவர் (அரசு) பங்களிப்புத் தொகை, இரண்டின் வட்டி என மொத்தமாகச் சேர்த்து இந்தக் தொகையை வழங்கியுள்ளனர். இதற்கு மேல் நாங்கள் எதுவும் கோர உரிமையில்லை என சுயவிருப்பக் கடிதமும் பெறப்படுகிறது. இப்படிச் செய்வது பென்ஷன் திட்டத்தின் நோக்கத்தையே இது சிதைத்துவிடும் அல்லவா? பென்ஷன் என்பது குறைவான தொகையாக இருந்தாலும் மாதம்தோறும் வழங்குவதுதானே?

புதிய பென்ஷன் திட்டம் அமலில் உள்ள மற்ற மாநிலங்களில் இதுதானே நடைமுறையில் உள்ளது?

மற்ற மாநிலங்களில் பணிக்கொடை உண்டு. தமிழகத்தில் அதுவும் இல்லை. 1972 பணிக்கொடைச் சட்டப்படி, எந்த ஒரு நபருக்கும் பணிக்கொடையை நிறுத்தமுடியாது. அதை நிறுத்தியதே விதிகளுக்கு முரணானது. மற்ற மாநிலங்களில் ஊழியர்களிடம் பிடித்தம் செய்த தொகையை வேறுவகைகளில் முதலீடு செய்து குறைவான அளவிற்கேனும் பென்ஷன் கொடுக்கின்றனர். இங்கு அதுவும் இல்லை.

ஓய்வுபெற்ற 24,719 பேருக்கு செட்டில் செய்தவகையில் நபர் ஒருவருக்கு சராசரியாக 5 லட்சம் வரை கொடுத்துள்ளனர். கேட்டால் 1,863 கோடியே, 32 லட்சம் வழங்கியிருப்பதாக மலைப்பாக சொல்கின்றனர். இதில் மாதாந்திர குறைந்தபட்ச பென்ஷனும் இல்லை. ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், ஜார்கண்ட், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் மீண்டும் பழைய பென்ஷன் திட்டத்திற்கு போக வேண்டும் என வலியுறுத்தினர். அப்போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “பி.எஃப்.ஆர்.டி.ஏ-வில் சேர மட்டுமே முடியும். வெளியேற முடியாது எனச் சொன்னார். அதையே தமிழக நிதி அமைச்சர் சட்டமன்றத்திலும் பேசுகிறார். பி.எஃப்.ஆர்.டி.ஏ திட்டத்தில் தமிழகம் சேராத போது இதைப் பற்றி நாம் பேசவேண்டியதே இல்லை என்பது எங்களது கருத்து.

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

புதிய பென்ஷன் திட்டத்தில் வேறு என்ன சிக்கல்கள் இருக்கின்றன?

அண்மையில் கரோனா பாதித்து சர்வேயர் ஒருவர் இறந்துபோனார். அவர் புதிய பென்ஷன் திட்டத்தில் இருந்தவர். ஆனால், கரோனாவில் இறந்ததற்கான சான்றிதழ் பெற தவறியதால் அரசின் கோவிட் நிவாரணமும் அவரது குடும்பத்துக்குக் கிடைக்கவில்லை. அவரின் இரண்டு பிள்ளைகளுமே மைனர்கள். மனைவியும் படிக்கவில்லை. அதனால் கருணை அடிப்படையிலான வாரிசு வேலையை யாருக்கும் கொடுக்கமுடியாத சூழல்.

இப்படியான சூழலில் அந்தக் குடும்பத்துக்கு மாத பென்ஷன் கிடைத்தால் தானே வசதியாக இருக்கும். அதைவிட்டுவிட்டு புதிய பென்ஷன் திட்டத்தில் 5 லட்சம் ரூபாய் மட்டுமே கிடைத்தால் அதை வங்கியில் டெபாசிட் செய்தால் மாதம் 2,500 ரூபாய் தான் வட்டி கிடைக்கும். இதைவைத்து அந்தக் குடும்பம் என்ன செய்யமுடியும்?

முதல்வரிடம் இதையெல்லாம் நேரில் சந்தித்து விளக்கினீர்களா?

முதல்வரை இதுவரை 6 முறை சந்தித்துப் பேசியுள்ளோம். தமிழக அரசு ஊழியர் சங்கம் நடத்திய மாநில மாநாட்டிற்கும் முதல்வர் வந்திருந்தார். ஜாக்டோ - ஜியோ மாநாட்டிற்கும் முதல்வர் வந்தார். அனைத்து இடங்களிலும், “படிப்படியாக உங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்” என்று முதல்வர் சொன்னார். அதற்கு மேல் எதுவும் நடக்கவில்லை.

எதிர்கட்சியாக இருக்கும் போது எங்களின் போராட்டக் களத்துக்கே வந்து பேசியவர் இப்போதைய முதல்வர். திமுகவின் தேர்தல் அறிக்கையிலும் பழைய பென்ஷன் திட்டம் அமல் என்ற வாக்குறுதியைத் தந்தார். அதை வெறும் வார்த்தையாக மட்டும் சொல்லவில்லை. “கனிமவளங்களை எடுத்துப் பயன்படுத்துவதில் அரசுக்கு வரவேண்டிய வருவாய் சரியாக வருவதில்லை. அதை முறைப்படுத்தி அந்த வருவாய் மூலம் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்துவோம்” என்று சொன்னார். ஆனாலும் எங்களது கோரிக்கை இன்னும் கோரிக்கையாகவே இருக்கிறது.

அரசு திட்டமிட்டு சட்டப்பாதுகாப்பற்ற அரசு ஊழியர்களை உருவாக்குகிறது. புதிய தாராளமயக் கொள்கையின் வடிவம் இது! ஆனால், இது அனைத்துமே மத்திய அரசு திணிப்பதுதான். மத்திய அரசு நிதியைத் தர அரசுப்பணியில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியரைக் கோருக்கிறது. நிதியை அவர்கள் கொடுக்கிறார்கள். மாநிலம் நிறைவேற்றும் இடத்தில் இருக்கிறது. அவர்கள் நிதியைக் கொடுக்கும்போதே இதையெல்லாம் அறிவுறுத்து கிறார்கள். ஆனால், அதையெல்லாம் மாநில அரசு செய்துதான் ஆகவேண்டும் என்று கட்டாயம் இல்லை. நான் நிரந்தரப் பணியாளர் வைத்துத்தான் இந்தப்பணியைச் செய்வேன் என தமிழக அரசு உறுதியாக நிற்கவேண்டும். முதல்வர் அதைச் செய்ய வேண்டும் என விரும்புகிறோம்; செய்வார் என நம்புகிறோம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in