பாஜகவின் திட்டம் இதுதான்: அமைச்சர் கீதா ஜீவன் சொல்லும் தகவல்

பாஜகவின் திட்டம் இதுதான்: அமைச்சர் கீதா ஜீவன் சொல்லும் தகவல்

"வட இந்தியாவில் உள்ள மக்கள் தமிழகத்தை வெறுக்க கூடிய, பதற்றமான சூழ்நிலையை உருவாக்க கூடிய அளவில் முயற்சி எடுத்தனர். அதனை முதல்வர் முறியடித்துள்ளார்" என்று அமைச்சர் கீதா ஜீவன் கூறினார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கிருஷ்ணன் கோயில் திடலில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக சமூக நலன், மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்துக்கொண்டு பேசுகையில், "மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி வழியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொள்கை பிடிப்போடு ஆட்சி நடத்தி வருகிறார். நான் திராவிடன் என்று சொல்லி துணிச்சலோடு ஆட்சி புரிந்து வருகிறார். திராவிடன் என்று சொல்ல சொல்ல நம்மை நோக்கி குற்றச்சாட்டு மற்றும் கோபக்கணைகளைக்கொண்டு வறுத்தெடுக்கின்றனர். பல்வேறு வகையில் நம்மை செயல்படவிடாமல் முடக்கி வைக்க பார்க்கிறார்கள். எதையும் கண்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சவில்லை.

நான் திராவிடன், திராவிட மாடல் ஆட்சி நடத்தி வருகிறார். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும். பெண் சமுதாயம் முன்னேறினால் தான் தமிழ் சமுதாயம் முன்னேறும். மகளிர் உயர்வு மாநில உயர்வு என்ற உன்னத நோக்கோடு முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். தேர்தல் வாக்குறுதிகளில் 80 சதவீதத்திற்கு மேலாக நிறைவேற்றப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியினர் உப்புக்கு சப்பாக குற்றச்சாட்டுகளை கூறி பேசி வருகின்றனர். மேற்கு மண்டலம் எங்க மண்டலம் என்று அதிமுக எடப்பாடி பழனிசாமி கூறிவந்தார். ஆனால் ஈரோட்டில் அதிக வாக்கு வித்தியாசத்தில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. இது திமுக ஆட்சிக்கு மக்கள் அளித்த பரிசு.

கோவில்பட்டியில் எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை எரித்தனர். இது தான் கூட்டணி தர்மமா? அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டத்திற்கு உள்ளே சென்ற போது முன்னாள் அமைச்சர்கள் ஆவேசமாக பேசினர். ஆனால் கூட்டம் முடிந்து வெளியே வந்த போது அதிமுக- பாஜக கூட்டணி தொடர்கிறது என்று சொல்லிவிட்டு போகின்றனர். இவர்கள் குடுமி எல்லாம் ஒன்றிய அரசின் பிடியில் இருக்கிறதை கண்டு பயப்படுகின்றனர். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுகவின் கொள்கையை விட்டு போச்சு. ஜெயலலிதா இருந்த போது தமிழ்நாட்டு உரிமைக்காக போராடினார். எடப்பாடி பழனிசாமி வைத்திருப்பது அடிமை கட்சி. அதிமுகவில் ஆட்சியில் நடந்த உரிமைகளை மீட்க முதல்வர் எவ்வளவு சிரமப்படுகிறார் என்பதை நாம் அறிவோம். ஆளுநரிடம் எது கொடுத்தாலும் மேலே அனுப்பவே மாட்டார். பரிந்துரை பண்ண வேண்டியது அவருடைய வேலை. போஸ்ட்மேன் வேலை போன்று பரிந்துரை செய்ய வேண்டியது அவருடைய வேலை. ஆனால் ஆளுநர் பரிந்துரை செய்வது கிடையாது. ஆளுநர் முதலமைச்சர் போல முடிவு எடுக்கிறார்.

இருந்தபோதிலும் நாம் சளைத்தவர்கள் அல்ல. சோர்ந்து போகாமல் நம்முடைய முதல்வர் நான் இப்படித்தான் ஆட்சி புரிவேன் என்று ஆட்சி புரிந்து வருகிறார். தமிழகத்தில் எல்லோருக்கும் வாய்ப்பு தர வேண்டும், கல்வி, பொருளாதார வளர்ச்சி என்பதில் நடை போட்டு வருகிறோம். ஒரே ஒரு விஷயம் மட்டும் பாஜக பற்றி கூறுகிறேன். பாஜக வாய் பேசினால் அத்தனையுமே பொய் தான். பொய்யை அடித்துப் பேசுகின்றனர். அது உண்மையாக மாறிவிடும் என்று நினைத்து, இங்குள்ள தலைவர் உரக்க பேசுகிறார். குழப்பத்தை உருவாக்க தயாராக இருக்கிறார்கள். அதற்கான காரணத்தை தேடி வருகின்றனர். சாதி, மத ரீதியாக குழப்பத்தை ஏற்படுத்துவதா? எந்த பிரச்சினையை கையில் எடுக்கலாம் என்று பாஜக திட்டம் போட்டு வடமாநில தொழிலாளர்கள் இங்கிருந்து அடித்து விரட்டப்படுகிறார்கள் என்று ஒரு பெரிய குற்றச்சாட்டை வைத்தனர்.

காவல்துறை மூலமாக தமிழக முதல்வர் சரியான நடவடிக்கை எடுத்தார். அந்த வீடியோ போலியானது என்பது நிரூபிக்கப்பட்டது. இப்போது அண்ணாமலை முகத்தை எங்கு கொண்டு வைக்கப் போகிறார் என்று தெரியவில்லை. வட இந்தியாவில் உள்ள மக்கள் தமிழகத்தை வெறுக்க கூடிய, பதற்றமான சூழ்நிலையை உருவாக்க கூடிய அளவில் முயற்சி எடுத்தனர். அதனை முதல்வர் முறியடித்துள்ளார். பாஜக முயற்சிக்கு நம்முடைய செயல் வீரர்கள் கவனமாக இருக்க வேண்டும். என்ன முயற்சி எடுத்தாலும் அதற்கு ஏற்றார் போல் நாம் பதிலடி கொடுக்க வேண்டும். நமது இலக்கு நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு 40" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in