'இந்திய அரசியலில் இது மகத்தான மாற்றத்தைத் தரும் தருணம்': ராகுலின் நடைபயணத்திற்கு சோனியா வாழ்த்து

'இந்திய அரசியலில் இது மகத்தான மாற்றத்தைத் தரும் தருணம்': ராகுலின் நடைபயணத்திற்கு சோனியா வாழ்த்து

கன்னியாகுமரியில் இருந்து இந்திய ஒற்றுமை நடைபயணத்தை இன்று தொடங்கினார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு கதரால் ஆன தேசியக்கொடியைக் கொடுத்து ராகுல் காந்தியின் பயணத்தை தொடங்கி வைத்தார். ராகுல் அங்கிருந்து 600 மீட்டர் தூரத்திற்கு நடந்து பொதுக்கூட்ட மேடைக்கு வந்தார்.

இந்த பொதுக்கூட்ட மேடையில் முதலாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கப்பட்டது. அதன் பின்பு, வந்தேமாதரம் பாடலும் ஒலித்தது. இரண்டிற்கும் பொதுக்கூட்ட மேடையில் இருந்தோரும், மேடையின் முன்னாள் இருந்தோரும் எழுந்து நின்று மரியாதை செய்தனர். தொடர்ந்து ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணத்திற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள நடைபயண பாடலின் தமிழ் வடிவம் ஒலிக்கப்பட்டது. இதில் தேச ஒற்றுமை பிரதானமாக ஒலித்தது.

தொடர்ந்து சோனியா காந்தி அனுப்பிய வாழ்த்துச் செய்தி வாசிக்கப்பட்டது. அதை தமிழில் ஜோதிமணி மொழிபெயர்த்தார். அதில் ‘இந்திய அரசியலில் இது மகத்தான மாற்றத்தைத் தரும் தருணம்’ என நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டுள்ளார் சோனியா காந்தி. மேலும் தான் மருத்துவ சிகிச்சையில் இருப்பதால் நேரில் வந்து கலந்துகொள்ள முடியவில்லை எனவும் அதில் சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார்.தமிழ்த்தாய் வாழ்த்தோடு தொடங்கிய கூட்டம், தாயிடம் இருந்து வாழ்த்துச் செய்தி என ராகுலின் கூட்டம் உணர்வுப்பூர்வமாக தொடங்கியிருப்பதாக காங்கிரஸ் தொண்டர்கள் நெகிழ்ந்தனர்.

தொடர்ந்து பேசிய காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி, “புரட்சிகர சிந்தனையுடைய எளிமையான மனிதர் ராகுல். அவர் நினைத்திருந்தால் பத்து ஆண்டுகளுக்கு முன்பே பிரதமர் ஆகியிருக்கலாம். ஆனால் அதை அவர் செய்யவில்லை. ஒன்றை பெறுவதை விட விட்டுக்கொடுப்பதில் இருக்கும் மகிழ்ச்சியை அவரிடம் பார்க்கலாம். நான் நாட்டில் வாழும் மக்களை இந்தியராகவே பார்ப்பேன். மொழி, இனத்தின் பெயரால் பார்க்க மாட்டேன் என்றார் காந்தி. ஆனால் அப்போதே ஆர்.எஸ்.எஸ் இதை எதிர்த்தார்கள். இந்த பிரிவு தான் சமூகத்தின் ஆணிவேர் என்று ஆர்.எஸ்.எஸ் சொன்னார்கள். அதற்கு அவர்கள் சனாதன தர்மம் என பெயர் இட்டார்கள். ஆனால் காந்தி அவர்களைவிட ராமரை அதிகம் கும்பிடுபவன் நான். அவர்கள் அனைவரும் இந்தியர்கள் என்றார். அன்று மகாத்மா காந்தி சொன்னதைத்தான் இன்று ராகுல் காந்தி திரும்பிச் செய்கிறார். காந்தியடிகள் அன்று தண்டி யாத்திரையை தொடங்கினார். அதேவழியில் ராகுலும் நல்ல நோக்கத்திற்கு இந்த யாத்திரையை தொடங்கியுள்ளார்.”என்றார். தொடர்ந்து செல்வப்பெருந்தகை பேசினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in