தமிழக பாஜகவினர் தொடர்ச்சியாக திருவள்ளுவருக்கு மதம் சாயம் பூசி ஒரு சாராருக்கே அவர் சொந்தம் என்பது போல உருவாக்க முயல்கிறார்கள் என திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்புகளும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
அந்த குற்றச்சாட்டிற்கு வலுச் சேர்க்கும் விதமாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில், காவி நிற உடையணிந்து இருக்கும் திருவள்ளுவர் புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து கூறியுள்ளார். இது திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
அண்ணாமலை தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில், ``சிறப்புமிக்க இந்த திருவள்ளுவர் தினத்தில், வாழ்வியலை மையமாக வைத்து, மக்களுக்குத் தேவையானது, தேவையற்றதை தெளிவாகச் சொல்லும் உலகப் பொதுமறையாம் திருக்குறளைத் தந்த தெய்வப் புலவர் திருவள்ளுவரைப் போற்றுவோம். கொண்டாடி மகிழ்வோம். அனைவருக்கும் இனிய திருவள்ளுவர் தின நல்வாழ்த்துகள்'' என குறிப்பிட்டுள்ளார்