`நீங்கள் பேசுவதை நீங்களே ரசித்துக் கொள்ளுங்கள் அண்ணாமலை'- நகைச்சுவையுடன் திருநாவுக்கரசர் கிண்டல்

`நீங்கள் பேசுவதை நீங்களே ரசித்துக் கொள்ளுங்கள் அண்ணாமலை'- நகைச்சுவையுடன் திருநாவுக்கரசர் கிண்டல்
திருநாவுக்கரசர்

“"பா.ஜ.க தலைவர் அண்ணாமலையைக் கேட்டுக்கொண்டு தமிழகத்தில் ஆட்சி நடத்த முடியாது. அண்ணாமலை பேசுவதை அவரே ரசித்துக் கொள்ள வேண்டியது தான்" என்று நகைச்சுவையுடன் கிண்டல் செய்துள்ளார் திருநாவுக்கரசர்.

திருச்சியில் கடந்த 8 ஆண்டுகளாக ரயில்வே சந்திப்பு மேம்பாலப் பணி முழுமையடையாமல் கிடப்பிலிருந்து வந்தது. இந்தப் பாலப் பணிக்குப் பாதுகாப்புத் துறைக்குச் சொந்தமான நிலம் ஒதுக்குவதில் பிரச்சினை இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பாதுகாப்புத் துறைக்குச் சொந்தமான 66 செண்ட் இடத்தை மத்திய அரசு பாலப் பணிக்காக ஒதுக்கியது. இதையடுத்து மேம்பாலப் பணிகள் மீண்டும் விறுவிறுப்படைந்துள்ளன. அந்தப்பணிகளைத் திருச்சி தொகுதி மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த திருநாவுக்கரசர், “கடந்த 8 ஆண்டுகளாக மேம்பாலப் பணி நிறைவடையாமல் இருந்தது. இது குறித்து மக்களவையில் நான் பேசியிருக்கிறேன். மத்திய அமைச்சர்களையும் சந்தித்துப் பேசினேன். பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு தற்போது அந்த பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. இன்னும் சில மாதங்களில் பணிகள் நிறைவடையும் என அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். இந்தியாவில் இன்னும் 30 ஆண்டுகளுக்கு பாஜகவின் ஆதிக்கம் இருக்கும் என்று பிரசாந்த் கிஷோர் சொல்கிறார். அவர் ஒன்றும் மந்திரவாதி இல்லை. அவர் காங்கிரஸில் இணையாமல் இருப்பதே அவருக்கும் நல்லது, கட்சிக்கும் நல்லது. 2024-ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெறும். எந்த ஒரு அரசும் நிலையாகத் தொடர்ந்து இருந்ததில்லை. இலங்கை மக்களால் ராஜபக்ச விரட்டப்பட்ட நிலையை நாம் பார்க்கிறோம். பா.ஜ.க தலைவர் அண்ணாமலையைக் கேட்டுக்கொண்டு தமிழகத்தில் ஆட்சி நடத்த முடியாது. மக்களுக்கு என்ன தேவை என்பதை அரசாங்கம் முடிவெடுக்கும். அண்ணாமலை எடுக்கும் முடிவை மக்கள் ஏற்க மாட்டார்கள். அண்ணாமலை பேசுவதை அவரே ரசித்துக் கொள்ள வேண்டியது தான்” என்றார்.

Related Stories

No stories found.