திருமுருகன் காந்தி, வன்னியரசு மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு: காரணம் இதுதான்?

திருமுருகன் காந்தி, வன்னியரசு மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு: காரணம் இதுதான்?

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டத்தை நடத்த முயன்ற மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, விசிக துணை பொதுச் செயலாளர்கள் வன்னியரசு, ஆம் ஆத்மி கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் வசீகரன் உள்ளிட்டோர் மீது 3 பிரிவுகளில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மே 17 இயக்கம் சார்பில் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் நேற்று முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கான நினைவேந்தல் கூட்டத்தை நடத்த காவல் துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து பெசன்ட் நகர் பஸ் டிப்போ அருகில் இருந்து தடையை மீறி நினைவேந்தல் கூட்டத்தை நடத்துவதற்காக மே 17 இயக்கம், விசிக உள்ளிட்ட பல அமைப்பினர் ஒன்று கூடினர்.

தாரை தப்பட்டை உடன் கோஷமிட்டுக் கொண்டு பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை நோக்கி ஊர்வலமாக செல்ல முற்பட்டவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். பெசன்ட் நகர் பஸ் டிப்போ ரவுண்டானா அருகே வைத்து அனைவரையும் போலீஸார் கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட அனைவரையும், அடையாறு கஸ்தூரிபாய் நகரிலுள்ள சமுதாய நலக் கூடத்தில் தங்க வைத்து பிறகு விடுவித்தனர்.

இதையடுத்து சாஸ்திரிநகர் போலீஸார் அனுமதியின்றி கூட்டம் நடத்த முயன்றதாக மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சியைச் சேர்ந்த குடந்தை அரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச் செயலாளர்கள் வன்னியரசு, ரஜினிகாந்த், தந்தை பெரியார் திராவிடர் கழக மாவட்ட தலைவர் குமரன், திராவிடர் விடுதலைக் கழக செயலாளர் தவசி குமரன், ஆம் ஆத்மி கட்சியின் தென்சென்னை மாவட்ட இணை செயலாளர் தினேஷ், தமிழ்நாடு மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் கே.எம்.செரீப், ஆம் ஆத்மி கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் வசீகரன் உள்ளிட்டோர் மீது சாஸ்திரி நகர் போலீஸார் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in