அண்ணாமலையின் காமெடி தமிழக மக்களிடம் எடுபடாது! - தொல்.திருமாவளவன் பேட்டி

தொல்.திருமாவளவன்
தொல்.திருமாவளவன்

தன்னுடைய தொடர் முயற்சியால் தமிழகம் தாண்டி இந்திய அளவிலும் கவனம் பெற்று வருகிறார் விசிக தலைவர் தொல்.திருமாவளவன். கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூருக்குச் சென்று அங்குள்ள மக்களைச் சந்தித்துத் திரும்பி இருக்கும் அவரிடம் மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடியின் நாடாளுமன்ற உரை, மக்களவைத் தேர்தல், சிறுபான்மையினர் குறித்த சீமான் பேச்சு உள்ளிட்டவை குறித்து கேட்டோம். சரளமாகப் பேசினார். இனி அவரது பேட்டி.

மணிப்பூரில் திருமாவளவன்
மணிப்பூரில் திருமாவளவன்

மணிப்பூர் சென்று வந்திருக்கிறீர்கள்... அங்குள்ள மக்களின் நிலை எப்படி உள்ளது?

அங்குள்ள மக்களின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. இந்த விவகாரத்தை மாநிலத்தை ஆளும் பாஜக அரசு மிகவும் மோசமாகக் கையாண்டுள்ளது என்பது தெரிய வருகிறது. நிவாரண முகாம்களில் மெய்த்தி மற்றும் குக்கி சமூகங்களைச் சார்ந்த இருதரப்பு மக்களையும் சந்தித்தோம். அந்த மக்கள் தங்களுக்கு நேர்ந்த அவலங்களைப் பற்றி மிகுந்த வேதனையோடு பகிர்ந்து கொண்டார்கள். இருதரப்பிலும் பாதிப்புகள் நேர்ந்து இருக்கின்றன.

இருதரப்பிலும் பெண்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இரு தரப்பினரும் சொன்னது இதுதான்; மணிப்பூர் மாநில அரசை மட்டுமல்ல, மத்திய அரசின் மீதான நம்பிக்கையை நாங்கள் இழந்து நிற்கிறோம். கடந்த 90 நாட்களாக எங்களுக்கு என்ன நேர்ந்திருக்கிறது என்பதை பற்றி பிரதமர் வாய் திறக்கவே இல்லை; கண்டிக்கவும் இல்லை. மாநில முதல்வர் எங்களை வந்து சந்திக்கவே இல்லை. எங்களுக்கு ஆறுதல் கூறவும் இல்லை. என்றுதான் குக்கி மற்றும் மெய்த்தி சமூகத்தைச் சார்ந்த மக்கள் தங்களுடைய வேதனைகளை பகிர்ந்து கொண்டார்கள்.

அங்கே 150- க்கும் மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள், ஏராளமான பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். இதெல்லாம் இந்த நாட்டிற்கு மிகப்பெரிய தலைக்குனிவை ஏற்படுத்தி இருக்கிறது என்பது தான் உண்மை.

அரசியல் ஆதாயத்துக்காக எதிர்கட்சிகள் மணிப்பூரை கையில் எடுத்துள்ளார்கள் என்கிறார்களே?

பாஜகவை தவிர இந்த மாதிரியான கேடுகெட்ட விமர்சனத்தை யாராலும் வைக்க முடியாது. அரசியலாகவே இருக்கட்டும்... பிரதமர் என்பவர் நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் தானே பிரதமர். அவர் ஏன் மணிப்பூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறவில்லை. நாடு விட்டு நாடு பறக்கும் பிரதமருக்கு, அருகில் இருக்கக் கூடிய மணிப்பூர் மக்களை ஏன் சந்திக்க முடியவில்லை. நேரமில்லையா? எது அரசியல். பாஜகவினர் செய்வதுதான் அப்பட்டமான அரசியல்.

சொந்த மண்ணிலேயே இந்த மண்ணின் மைந்தர்கள் அகதிகளாக நிற்கும் அவலம் இந்த அரசுக்கு மிகப்பெரிய தலைகுனிவை ஏற்படுத்தி இருக்கிறது. பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலம் நடத்தி மிகக் கேவலமான கூட்டு பாலியல் வல்லுறவை நடத்தி இருக்கிறார்கள். இதற்காக, உள்ளபடியே இந்த அரசு வருத்தம் தெரிவித்திருக்க வேண்டும். ஆனால், ஒரு வரியில் பிரதமர் மோடி அவர்கள் இது கண்டிக்கத்தக்கது என்று சொல்லிவிட்டு அவர் தனது வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறார்.

மணிப்பூர் விவகாரம் தொடர்பான பிரதமர் மோடி உரையை எப்படிப் பார்க்கிறீர்கள்?

அரசியல் மேடைகளில் பேசுவது போல பேசியுள்ளார் பிரதமர். மணிப்பூர் விவகாரம் குறித்து பேசச் சொன்னால் காங்கிரஸ் மீது குற்றச்சாட்டை முன்வைக்கிறார். அதுவல்ல எதிர்கட்சிகள் கேட்டது. மணிப்பூர் மக்களுக்கு என்ன பதில் என்பதுதான். அங்கு ஒரு இன அழிப்பே நடக்கிறது. அதுகுறித்து பேசுவதற்கு பிரதமருக்கு ஒன்றுமில்லாதது ஆச்சரியமாக இருந்தது. அவர் பேசியதை அவரே போட்டுப் பார்த்தால் கூட நாட்டை ஆளும் பிரதமருக்கு அழகுதானா என தன்னை நோக்கி அவரே கேள்வி கேட்டுக் கொள்வார்.

பாஜக பெண் எம்பி-க்களைப் பார்த்து ராகுல் காந்தி ஃபிளையிங் கிஸ் கொடுத்தார் என அமைச்சர் ஸ்மிருதி இரானி கிளப்பிய புகார் குறித்து..?

மணிப்பூர் விவகாரத்தில் எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு ஈடு கொடுக்க முடியாமல் போனதால் இந்த மாதிரியான ஒரு பொய்யான குற்றச்சாட்டை முன் வைத்துத் திசைத் திருப்பப் பார்த்தார்கள். ராகுல் காந்தி இருக்கை எங்கோ இருக்கிறது, அந்தம்மாவின் இருக்கை எங்கோ உள்ளது. இதில் ராகுல் காந்தி எங்கிருந்து ஃபிளையிங் கிஸ் கொடுத்திருப்பார்? அவர் கூறுவதைப் பாஜகவினரே ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். குற்றச்சாட்டு சொன்ன ஒரு மணி நேரத்தில் ட்விட்டர் மூலமாகவே என்ன நடந்தது என்பது அனைவருக்கு தெரிந்துவிட்டது.

பாதயாத்திரை செல்லும் பாஜக தலைவர் அண்ணாமலை போகுமிடமெல்லாம் திமுக கூட்டணியை கடுமையாக விமர்சிக்கிறாரே?

அண்ணாமலை காமெடி செய்துகொண்டுள்ளார். அது எந்தவிதத்திலும் தமிழக மக்களிடம் எடுபடாது. ஊழல் செய்ததால் தான் கர்நாடகாவில் பாஜக ஆட்சியை இழந்துள்ளது என்ற உண்மை அண்ணாமலைக்கு நன்கு தெரிந்திருந்தும் தங்களை உத்தமர்கள் என அவர் கூறுவதை தமிழக மக்கள் எப்படி நம்புவார்கள்? இதை அவர் எண்ணி பார்த்திருக்க வேண்டும். என்ன நடந்தாலும், வரும் மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 40 தொகுதியை நிச்சயம் வெல்லும்.

விசிக என்எல்சி உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்கவில்லை என்றும் அதிமுக ஆட்சியில் இருந்த வீரியம் தற்போது இல்லை என்றும் விமர்சனம் வருகிறதே?

மக்களுக்கு பிரச்சினை என்றால் விசிக தயங்காமல் குரல் கொடுத்துள்ளது. தவறு செய்யும்போது பல நேரங்களில் அதைச் சுட்டிக் காட்டியுள்ளோம். வேங்கைவயல் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டுமென தமிழக அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியுள்ளோம். என்எல்சி-க்கு நிலம் வழங்கிய விவசாயிகளின் கோரிக்கைகளை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இழப்பீட்டில் உள்ள வேறுபாடுகளை களைய வேண்டும். நிலம் வழங்கக் கூடிய விவசாயிகளின் குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர பணி வழங்குவது உறுதி செய்யப்பட வேண்டும். நிலம் வழங்கியவர்களையும் நிறுவனத்தின் பங்குதாரர்களாக அறிவிக்க வேண்டும் என நாடாளுமன்றத்திலேயே குரல் கொடுத்தவன் நான். எங்களுக்குக் கூட்டணி என்பது வேறு கொள்கை என்பது வேறு.

நாடாளுமன்ற தேர்தலில் விசிகவின் வியூகம் என்ன? ஒரு வேளை திமுக கூட்டணியில் பாமக இணைந்தால் உங்கள் நிலைப்பாடு என்னவாக இருக்கும்?

தமிழகத்தைத் தாண்டி ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா என விசிகவின் அமைப்பு ரீதியான எல்லைகள் விரிந்துள்ளது. திமுக கூட்டணியில் தான் விசிக இருக்கும். பாஜகவின் பாசிச முகத்தை மக்களிடம் தோலுரித்துக் காட்டுவதுதான் எங்களின் வியூகமாக இருக்கும். மற்றவர்கள் இணைவார்களா என்ற யூகங்களுக்கு என்னால் கருத்துக் கூற முடியாது.

மாயாவதி, சந்திரசேகர் ராவ் உள்ளிட்டோர் விலகி நிற்பது ‘இந்தியா’ கூட்டணிக்கு பாதிப்பை ஏற்படுத்தாதா?

இவர்கள் விலகி நிற்பது நிச்சயமாக பாதிப்பை ஏற்படுத்தும். பாஜகவை வீழ்த்த வேண்டுமென்றால் விலகி நிற்கும் அனைவரும் ஒன்றாக இணைய வேண்டும் என்பதே எனது நோக்கம். வாய்ப்புக் கிடைத்தால் நானே இவர்களிடம் பேசுவேன். இந்தியா கூட்டணியின் ஒரே நோக்கம் பாசிச பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பதே. அந்தக் கொள்கையை பிரதானமாக வைத்து வேற்றுமை, வெறுப்புகளை களைந்து அனைவரும் ஓர் அணியில் திரள வேண்டும் என்பதே எங்கள் அனைவரின் நோக்கம்.

சிறுபான்மை மக்கள் குறித்த சீமான் பேச்சை எப்படி பார்க்கிறீர்கள்?

மொழி உணர்வு, இன உணர்வு தேவை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், இந்தியா முழுவதும் முஸ்லிம் என்ற உணர்வும், கிறிஸ்தவர் என்ற உணர்வும் தான் அவர்களுக்கு பாதுகாப்பைத் தரும். அந்த உணர்வை சிதைக்க வேண்டும் என்பது தான் சங்பரிவார் அமைப்புகளின் நோக்கம். இதே கருத்தை சீமான் போன்றவர்கள் பேசுவது அதிர்ச்சியைத் தருகிறது. இந்த நிலைப்பாட்டில் இருந்து சீமான் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in