
ஈழ தமிழர் பிரச்சினை குறித்து கருத்து வேறுபாடு ஏற்பட்ட காரணத்தால் விசிக தலைவர் திருமாவளவன் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை நேரில் சந்தித்து விளக்கம் அளித்தார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த விசிக தலைவர் திருமாவளவன், தமிழ்நாட்டில் உள்ள தலைவர்கள் ஈழத்தமிழர் பிரச்சினையில் அரசியல் செய்தார்கள் என குற்றம்சாட்டி இருந்தார். இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இது மதிமுக - விசிக இடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
மதிமுக சார்பில் திருமாவளவன் மீது வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில், ‘’ `விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் நெறியாளர், ம.தி.மு.க தலைவர் வைகோ பெயரைக் குறிப்பிட்டுக் கேட்டபோது, அதைக் கடந்துபோனது வருத்தமளிக்கிறது' என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தநிலையில் இன்று சென்னை அண்ணாநகரில் உள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இல்லத்திற்கு சென்ற திருமாவளவன், தனியார் தொலைக்காட்சி நேர்காணல் குறித்து விளக்கியதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், ‘’ தனியார் தொலைக்காட்சியில் நெறியாளர் குதர்க்கமாக கேட்டக் கேள்விக்கு நான் பதிலளிக்காமல் சென்றது விமர்சனத்துக்குள்ளாகியது. அண்ணன் வைகோவை பொறுத்தவரை ஈழத்தமிழர் பிரச்சினைக்கும், அவர்களது உரிமைக்காகவும் மிகப் பெரிய பங்காற்றியவர் வைகோ அவர்கள் என்பதை நாடறியும். தமிழக அரசியலில் மதிமுக மிகப் பெரிய இடத்தை அடைந்திருக்க முடியும். ஆனால் மதிமுக பின்னடவை சந்தித்தற்கு ஈழத்தமிழர் பிரச்சினை ஒரு காரணம் என்பது வரலாறு’’ என்றார்.