ஆர்எஸ்எஸ்-ஐ எதிர்கொள்ள அணிதிரட்டும் திருமாவளவன்!

ஆர்எஸ்எஸ்-ஐ எதிர்கொள்ள அணிதிரட்டும் திருமாவளவன்!

அணிவகுப்பு,  ஆ.ராசா உள்ளிட்ட திமுகவினருக்கு எதிரான ஊடகப் பிரச்சாரம், நேரடி களப் போராட்டங்கள் என தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் முன்னைவிட வேகமாக தனது வேலைத்திட்டத்தைத் செயல்படுத்தி வருகிறது. மத்தியில் பாஜக அமர்ந்திருப்பதால் இதையெல்லாம் எதிர்த்து தீவிர அரசியலில் ஈடுபட முடியாமல் திக்குமுக்காடுகிறது திமுக அரசு.  அதனால் வேறு ஒரு தளத்திலிருந்து திமுகவின் கூட்டணிக் கட்சியான விசிக ஆர்எஸ்எஸ் அமைப்புக்கான  எதிர்ப்பு அரசியலை முன்னெடுத்திருக்கிறது.

தமிழ்நாட்டில்  காந்தி ஜெயந்தி நாளில் அணிவகுப்பு ஊர்வலம்  நடத்த நீதிமன்றம் வரை சென்று அனுமதி வாங்கியிருக்கிறது ஆர்எஸ்எஸ். அதனால் இதைக் கட்டுப்படுத்த வழி தெரியாமல் தமிழக அரசு திகைத்து நிற்கிறது. ஆனால், ஆர்எஸ்எஸ் அணிவகுப்பை எப்படி எதிர்கொள்வது என்கிற திகைப்புடன் பலரும்  யோசித்துக் கொண்டிருக்கையில் முதல் ஆளாக எதிர்வினையாற்றினார் விசிக தலைவர் திருமாவளவன்.   

ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு நடத்தும் அதே அக்டோபர் 2-ம் தேதி சமூக நல்லிணக்கப் பேரணி நடத்தப்படுமென அதிரடி அறிவிப்பை திருமா வெளியிட்டார். அதோடு மட்டுமல்லாமல்  நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு தடையாணை கேட்டு வழக்கும் தொடர்ந்தார்.  இவ்விஷயத்தில் ஒத்த கருத்துடைய கட்சிகளின்  ஆதரவை  திரட்டவும் முனைந்தார். அதற்காக மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் சென்று மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவை கேட்டுப் பெற்றார் திருமா.

தொடர்ந்து மே 17 இயக்கம்,  திராவிடர் விடுதலைக் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்  எஸ்டிபிஐ என பல கட்சிகளையும், அமைப்புகளையும் அணுகி  நல்லிணக்கப் பேரணிக்கு ஆதரவாக திரட்டியிருக்கிறார்.  பேரணியைத் துவக்கி வைக்க திக தலைவர் கி.வீரமணியை அழைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. 

இப்படி, திராவிட மாடல் ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் திமுக ஆர்எஸ்எஸ்-ஐ  எதிர்கொள்ள யோசிக்கும் நேரத்தில், சரியான தடத்தைப் பிடித்து ஒத்த கருத்துடைய கட்சிகளை ஒருங்கிணைத்துக் கொண்டிருக்கிறார் திருமா. அவரது முயற்சி ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களுக்கு எதிராக இருப்பவர்களுக்கு பெரும் நிம்மதியைத் தந்திருக்கிறது. 

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது,  சனாதனமா...  சனநாயகமா?  என்கிற கோட்பாட்டை  முன்வைத்து ஒரு மாபெறும் மாநாட்டை நடத்தி திமுக கூட்டணியை வலிமைப் படுத்தினார் திருமா. அப்போதும், தானே முயன்று ஒவ்வொரு கட்சியாகப் பேசி ஆதரவைத் திரட்டினார். இப்போதும் அதே உத்வேகத்துடன்  சனாதன எதிர்ப்பு அணியை ஒருமுகப் படுத்துகிறார்.

இந்த அணியை அவர்  மேலும் வலுப்படுத்தும் நிலையில் இது வெறும் ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்காக மட்டுமின்றி, இனி வரும் காலங்களில் பெரும்பான்மையின் பெயரிலான அடிப்படைவாத செயல்திட்டங்களை முறியடிக்கும் ஜனநாயக முன்னணியாக நின்று சமூக அமைதியைக் காக்கப் போராடும் அமைப்பாக திகழும்  என்கிறார்கள் சிறுத்தைகள். 

சில நேரங்களில் சொல்லமுடியாத சங்கடங்களை திமுக தரப்பால் எதிர்கொண்டாலும் அதையெல்லாம் மனதில் கொள்ளாமல் திமுகவுக்கு உற்ற தோழனாக நின்று  காலத்தினால் செய்யும் உதவிகளை கச்சிதமாக செய்துகொண்டிருக்கிறார் திருமாவளவன்.  அதனால்தான் விசிகவை தடை செய்ய வேண்டும் என்று எச்.ராஜா உள்ளிட்டவர்கள் வேகம் காட்டுகிறார்கள். அதுவே திருமாவளவன்  சனாதன எதிர்ப்புப் பாதையில் சரியாகவே செல்கிறார் என்பதற்கான சான்று. அந்த வகையில், திருமாவின் தற்போதைய நகர்வுகள்  தமிழக அரசியலில் அவர் தன்னை ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக மாற்றிக் கொள்வதற்கான இன்னொரு மைல்கல் என்றே சொல்லலாம்! 

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in