ஈபிஎஸ் தலைமையிலான பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் விசிக தலைவர் திருமாவளவன் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஈபிஎஸ் தலைமையில் நடைபெற்றப் பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அதன்படி அதிமுகவின் ஒற்றைத்தலைமையாக ஈபிஎஸ் உருவெடுத்துள்ளார். அவருக்கு அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக உள்ளிட்ட எந்த கட்சிகளும் வாழ்த்து தெரிவிக்காத நிலையில், திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் ட்விட்டர் வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், ‘’ அடிப்படை தொண்டனாக அரசியல் வாழ்வைத் தொடங்கிய எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்று அதிமுகவின் பொதுச்செயலாளராக உறுதிப்பட்டிருப்பது அவரது வலுவான ஆளுமைக்குச் சான்றாக உள்ளது. அவருக்கு எமது வாழ்த்துகள். இவ்வாய்ப்பு மீண்டும் பாஜகவைச் சுமப்பதற்குப் பயன்படுமேயானால் இங்கு யாவும் பாழே ‘’ என பதிவிட்டுள்ளார்.
இதற்கு திமுகவினர் கடும் எதிர்வினையாற்றி வருகின்றனர். உங்களை மிகவும் பிடிக்கும் ஆனால் இது போன்று துண்டுப் போட்டு வைக்கும் அரசியல் தான் சில நேரங்களில் வெறுப்பாகி விடுகிறது என கடும் விமர்சனத்தை முன் வைத்து வருகின்றனர்.