`அப்பன் பெயர் தெரியாதவர்களா அவர்கள்?'- ஆளுநருக்கு எதிராக கொந்தளிக்கும் திருமாவளவன்

`அப்பன் பெயர் தெரியாதவர்களா அவர்கள்?'- ஆளுநருக்கு எதிராக கொந்தளிக்கும் திருமாவளவன்

பட்டியல் இனத்தவரை 'ஹரிஜன்' எனக் குறிப்பிட்டுப் பேசிய தமிழக ஆளுநர் ரவிக்கு விசிக தலைவர் தொல். திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த அக்.17-ம் தேதி சென்னையில் மாணவர் விடுதியொன்றைத் திறந்து வைத்து பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தமிழ்நாட்டில் உள்ள பட்டியல் சமூகத்தை ‘ஹரிஜன்’ எனக் குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார். இது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.

ஹரிஜன் என்பது கடவுள் ஹரியின் குழந்தைகள் எனும் பொருளைத் தருவதால், அது பட்டியல் சமூகத்தினரை இழிவு படுத்தக் கூடியதாகவுள்ளது என அக்காலத்திலேயே அதற்குக் கடுமையான எதிர்ப்புக் கிளம்பியது. அதாவது, அச்சொல்லானது, ‘அப்பன் பெயர் தெரியாதவர்கள்’ என்னும் பொருளைத் தருவதால் அதனைப் பயன்படுத்தக் கூடாது என இந்திய அரசு 1982-ம் ஆண்டிலேயே ஆணையிட்டுள்ளது. அது ஆளுநருக்குத் தெரியுமா, தெரியாதா? அரசமைப்புச் சட்டத்தைப் போற்ற வேண்டிய ஒரு பொறுப்புள்ள பதவியில் இருப்பவர் ஆளுநர். அவரே இப்படிப் பேசியிருப்பதால் மற்றவர்களும் அச்சொல்லைத் தயக்கமில்லாமல் பயன்படுத்தக்கூடும். எனவே, ஆளுநர் அவ்வாறு தான் பேசியது ஏன் என்பதற்கு விளக்கமளிக்க வேண்டும்.

இந்திய அரசு அந்த சொல்லை பயன்படுத்த தடை விதித்த பிறகும் சிலர் அந்த சொல்லைப் பயன்படுத்துவதாகப் புகார் எழுந்த நிலையில் சமூக நீதி அமைச்சகத்துக்கான பாராளுமன்ற நிலைக்குழு புதிய உத்தரவு ஒன்றைப் பிறப்பிக்குமாறு தனது ஒன்பதாவது அறிக்கையில் பரிந்துரை செய்தது. மாநிலங்களவையில் 19.08.2010 அன்று வைக்கப்பட்ட அந்த அறிக்கையில், சாதிச் சான்றிதழ்களில் மட்டுமல்ல மற்ற விகிதங்களிலும் ஹரிஜன் என்ற வார்த்தையைப் பயன்படுத்தக் கூடாது என உத்தரவிடுமாறு கூறியது. அதன் அடிப்படையில் 2012-ம் ஆண்டு நவம்பர் 22-ம் நாள் சமூக நீதி அமைச்சகம் புதிய சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதன் பிறகும் ஆளுநர் அந்த வார்த்தையைப் பயன்படுத்தி இருப்பது சரிதானா என அவர் சிந்திக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in