`ஆபத்தாக முடியும்'- ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு தடை விதிக்கக் கோரி திருமாவளவன் வழக்கு

`ஆபத்தாக முடியும்'- ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு தடை விதிக்கக் கோரி திருமாவளவன் வழக்கு

ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கிய உத்தரவை திரும்பப் பெறக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

தமிழகம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் அக்டோபர் 2-ம் தேதி அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரி ஆர்எஸ்எஸ் அமைப்பின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளை விதித்து அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்கும்படி காவல் துறைக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், "ஆர்எஸ்எஸ் அமைப்பின் முந்தைய கால நடவடிக்கைகளை கருத்தில் கொள்ளாமல் அதன் அணிவகுப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மத நல்லிணக்கத்தை குலைத்து பிரித்தாளும் கொள்கையை பின்பற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த கோட்சே, மகாத்மா காந்தியை கொலை செய்தபோது இனிப்பு விநியோகித்து கொண்டாடியது ஆர்எஸ்எஸ். மகாத்மா காந்தியை கொன்ற ஆர்எஸ்எஸ் இயக்கத்துக்கு காந்தி ஜெயந்தி அன்று அணிவகுப்பு நடத்த அனுமதி வழங்ககூடாது. விஜயதசமி மீது நம்பிக்கை இல்லாத அம்பேத்கரின் கொள்கைக்கு முரணாக இந்த அணிவகுப்பு நடத்தப்படுகிறது. அம்பேத்கரை இந்துத்துவா ஆதரவாளராக சித்தரிக்க ஆர்எஸ்எஸ் முயற்சிக்கிறது.

அக்டோபர் 2-ம் தேதி வி.சி.க சார்பில் தமிழகம் முழுவதும் சமூக நல்லிணக்க ஊர்வலம் நடத்த உள்ளது. நீதிமன்ற நிபந்தனைகளை பின்பற்றாமல் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்த ஆர்எஸ்எஸ் திட்டமிட்டுள்ளது. தற்போது பாரதிய ஜனதா கட்சியின் மாவட்டத் தலைவர்கள் விளம்பரத்துக்காக தங்கள் வீடுகளின் முன் குண்டுகளை வீசி வரும் சம்பவங்கள் நடைபெறும் சூழலில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கினால் அது பொதுமக்கள் நடமாட்டத்திற்கு ஆபத்தாக முடியும் என்பதால் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க காவல்துறைக்கு தடை விதிக்க வேண்டும். அனுமதி அளிக்கும்படி பிறப்பித்த உத்தரவை திரும்ப பெற வேண்டும்" என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in