குடியரசு தலைவரை மதிக்கத் தெரியாதா?... திருமாவளவன் கேள்வி!

பிரதமர் மோடி, அத்வானியுடன் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு.
பிரதமர் மோடி, அத்வானியுடன் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு.

குடியரசுத் தலைவரை நிற்க வைத்து படம் பிடித்து வெளியிடுவது என்ன வகையான பண்பாடு என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். 

திருமாவளவன்
திருமாவளவன்

நாட்டில் சமுதாய வளர்ச்சிக்காக சிறப்பாக தொண்டாற்றியவர்களுக்கு, மத்திய அரசாங்கத்தால் பத்மஸ்ரீ,  பத்ம பூஷண்,  பத்ம விபூஷண், பாரத ரத்னா ஆகிய விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது.  இதில், பாரத ரத்னா விருது  நாட்டிலேயே மிக உயரிய விருதாகும்.

இந்த ஆண்டு ஐந்து பேருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது. இந்தியாவின் மறைந்த முன்னாள் பிரதமர்கள் நரசிம்ம ராவ்,  சரண் சிங்,  பசுமை புரட்சியின் தந்தை என அழைக்கப்படும் எம்.எஸ். சுவாமிநாதன்,  மறைந்த முன்னாள் பீகார் மாநில முதலமைச்சர் கர்பூரி தாக்கூர்,  பாஜக தலைவராகவும், துணை பிரதமராகவும் பணியாற்றிய எல்.கே.அத்வானி ஆகியோருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது.

குடியரசு தலைவர் திரவுபதி முர்மு
குடியரசு தலைவர் திரவுபதி முர்மு

பாரத ரத்னா விருதுகளை வழங்கும் விழா குடியரசுத் தலைவர் மாளிகையில் மார்ச் - 30 ம் தேதி நடைபெற்றது.  இதில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார்.  முன்னாள் பிரதமர்கள் நரசிம்ம ராவ்,  சரண் சிங் மற்றும் எம்.எஸ். சுவாமிநாதன், மறைந்த முன்னாள் பீகார் மாநில முதலமைச்சர் கற்பூரி தாக்குர் உள்ளிட்டோருக்கு மார்ச் 30-ம் தேதி வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதுகளை அவர்களது குடும்பத்தினர் பெற்றுக்கொண்டனர்.

வயது முதிர்வு மற்றும் உடல் நலக் குறைவு காரணமாக,  பாஜக மூத்த தலைவர் அத்வானி அன்றைய தினம் குடியரசு தலைவர் மாளிகைக்கு வந்து விருதை பெற்றுக் கொள்ளவில்லை. அதனால் அவரது  வீட்டிற்கு நேற்று நேரில் சென்று  பாரத ரத்னா விருதை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார். அப்போது பிரதமர் மோடி, துணை குடியரசு தலைவர் ஜக்தீப் தன்கர், வெங்கையா நாயுடு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

அப்போது, பாஜக மூத்த தலைவர் அத்வானி மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் அமர்ந்திருந்தனர். குடியரசு தலைவர் திரவுபதி முர்மு நின்றிருந்தார். இது பலரது கண்டனத்துக்கு உள்ளாகி வருகிறது.  இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார்.

அதில், "பிரதமர், மேனாள் துணைப் பிரதமர் ஆகியோருக்கு தேசத்தின் முதல் குடிமகளான குடியரசுத் தலைவரை எங்ஙனம் மதிக்க வேண்டும் என்பது தெரியாதா? தேசத்தின் தலைமை, குறிப்பாக அரசின் தலைமை, குடியரசுத் தலைவர் தான் என்பதை வரையறுத்துக் கூறும் அரசமைப்புச் சட்டத்தையேனும் மதிக்க வேண்டும் என்பது கூட தெரியாதா?

இந்த அவமதிப்பு - இவர் பெண்மணி என்பதாலா? அல்லது இவர் பழங்குடி என்பதாலா?  அல்லது அரசமைப்புச் சட்டம் ஒரு பொருட்டில்லை என்பதாலா? இப்படியொரு படம் வெளியானது அறியாமல் நிகழ்ந்ததா? திட்டமிட்டே நடந்ததா? குடியரசுத் தலைவரை நிற்கவைத்து படம்பிடித்து வெளியிடுவது என்னவகை பண்பாடு? பெரும் அதிர்ச்சியளிக்கிறது" என்று திருமாவளவன் பதிவிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in