திருக்குறளுக்கும், காவிகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை: கனிமொழி எம்.பி

திருக்குறளுக்கும், காவிகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை: கனிமொழி எம்.பி

திருக்குறளுக்கும், காவிகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறிய கனிமொழி எம்.பி, இல்லை என்றால் கருணாநிதி உரை தெளிவாக உள்ளது. அதைப் படிக்க புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

சென்னை துறைமுகம் தொகுதிக்குட்பட்ட கொண்டித்தோப்பு பெருமாள் கோயில் கார்டன் தெருவில் திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, அமைச்சர் சேகர் பாபு ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

அப்போது நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி செய்தியாளர்களிடம் கூறுகையில்," சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா நிகழ்வுகள் சென்னை முழுவதும் உள்ள 17 இடங்களில் மிகச்சிறப்பாக மக்களின் வரவேற்பு பெற்று நடைபெற்று வருகிறது. அதற்காக சென்னையில் உள்ள அனைத்து மக்களுக்கும் நன்றி. எழுத்துத்தேர்வு பொங்கல் அன்று வைக்கப்பட்டதற்கு திமுக ஏற்கெனவே எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இங்கு பொங்கல் கொண்டாடும் இதே நாளில் பல மாநிலத்தில் விவசாயிகளுக்கான அறுவடை திருவிழா நடைபெறுகிறது. அத்தனை பேரின் உணர்வுகளை மதிக்காமல் இந்த தேர்வுகளை அந்த தினம் நடத்திருப்பது நாட்டின் ஒற்றுமையைக் குலைக்கும் வகையில் உள்ளது.

தமிழர்களின் உணர்வுகளை எந்த காலத்தில் அவர்கள் புரிந்து கொண்டதில்லை. ஆளுநர் உட்பட அனைவரும் தமிழர்களின் உணர்வுகளை புண்படுத்திக் கொண்டு வருகிறார்கள். மேலும், தமிழ் புத்தாண்டு தை ஒன்றாம் தேதி கொண்டாடப்படும் என்று கருணாநிதி அறிவித்து அதனைத் தொடர்ந்து தொடர்ந்து கொண்டாடி வருகிறோம்" என்றார்.

தமிழக ஆளுநர் ஆ.என். ரவி ஜல்லிக்கட்டு பார்ப்பதற்கு செல்வது குறித்த கேள்விக்கு," தமிழ்நாட்டின் உணர்வு இருக்கக்கூடிய தமிழ் வீரத்தைச் சொல்லும் வகையில் உள்ள விளையாட்டை பார்க்கச் செல்கிறார். யாராக இருந்தாலும் நிச்சயமாக வரவேற்று நம்முடைய பண்பாட்டை சொல்லித் தருவோம்" என்றார். திருவள்ளுவரின் காவி உடை குறித்த கேள்விக்கு," திருக்குறளைப் படித்தால் புரிந்து இருக்கும். திருக்குறளுக்கும், காவிகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இல்லை என்றால் கருணாநிதி உரை தெளிவாக உள்ளது. அதைப் படிக்க புரிந்து கொள்ள வேண்டும்" என தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து கொண்டித்தோப்பு குடியிருப்பில் உள்ள பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிய பின் அமைச்சர் சேகர்பாபு மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஆகியோர் உரியடித்து பொங்கல் விழாவைக் கொண்டாடினர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in