தில்லைக்கோயில் என்ன தனி நாடா?

மதுரையில் வழக்கறிஞர்கள் போராட்டம்
தில்லைக்கோயில் என்ன தனி நாடா?

பெண் பக்தர் லட்சுமியை சாதிப் பெயரைச் சொல்லி திட்டி, அடித்த தீட்சிதர்களைக் கைது செய்யக் கோரி, மதுரையில் வழக்கறிஞர்கள் சார்பில் போராட்டம் நடந்தது. மதுரை மாவட்ட நீதிமன்றம் அருகே நடந்த இந்தப் போராட்டத்துக்கு வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தலைமை தாங்கினார். மதுரை வழக்கறிஞர் சங்கத் தலைவர் நெடுஞ்செழியன், முன்னாள் செயலாளர் ஏ.கே.ராமசாமி, மதுரை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்க முன்னாள் தலைவர் ஜான் வின்சென்ட், வழக்கறிஞர்கள் நாகை திருவள்ளுவன், சின்னராசா, சி.ஜே.ராஜன், கனகவேல், ராஜேந்திரன், தியாகராஜன் உள்ளிட்ட பலர் பேசினார்கள்.

போராட்டத்தில் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் பேசும்போது, “தில்லை நடராஜர் கோயிலில் உள்ள சிற்றம்பல மேடையில் ஏறி தமிழில் தேவாரம் திருவாசம் பாடலாம் என்று 2008-ம் ஆண்டிலேயே தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவின் அடிப்படையில் இன்று கூட எந்த பக்தர் வேண்டுமென்றாலும் அந்த மேடையில் ஏறி தமிழில் தேவாரம் திருவாசகம் பாடலாம். ஆனால், அப்படி பாடச் சென்ற பக்தையை தீட்சிதர்கள், சாதியைச் சொல்லித் திட்டியதோடு, அடித்து விரட்டியிருக்கிறார்கள். சிதம்பரம் நடராஜர் கோயில் மக்கள் பணத்தில் மன்னர்களால் கட்டப்பட்ட கோயில். அங்கு அர்ச்சகர் வேலைக்கு அமர்த்தப்பட்டவர்கள்தான் தீட்சிதர்கள். தமிழர்கள் கட்டிய கோயிலில், தமிழர்கள் போடுகிற காணிக்கைப் பணத்தில் பிழைப்பு நடத்திக்கொண்டு, தமிழில் பாடக்கூடாது என்றும், தமிழர்கள் வழிபாடு நடத்தக்கூடாது என்றும் தடுப்பது சட்ட விரோதமானது மட்டுமல்ல, இது ஒரு மொழித் தீண்டாமை, சாதித் தீண்டாமை.

தமிழ்நாட்டுக்குள் இருக்கிற ஒரு கோயிலில் தமிழ்நாட்டின் எந்தச் சட்டமும் செல்லுபடியாகாது என்றால், அது என்ன தனி நாடா? அந்தக் கோயிலை இஷ்டத்துக்கு மாற்றியமைத்திருக்கிறார்கள் தீட்சிதர்கள். புதிய கட்டுமானங்களை ஏற்படுத்தியிருக்கிறார்கள். நிறைய நிதி முறைகேடுகளும் நடந்திருக்கின்றன. எனவே, அதுகுறித்து விசாரிக்க தனிக்குழு அமைக்க வேண்டும். அந்தக் கோயிலை வன்முறை செய்யும் தீட்சிதர்களிடம் இருந்து மீட்டு இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். பெண் பக்தையை சாதியைச் சொல்லித் திட்டி தாக்கிய தீட்சிதர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதை பாராட்டுகிறோம். ஆனால், அவர்களை உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்”.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.