‘சீமான் போல என்னையும் பேசவைத்து விட்டார்கள்’ - இடைத்தேர்தல் குறித்து அண்ணாமலை ஆதங்கம்

அண்ணாமலை
அண்ணாமலைசீமான் போல என்னையும் பேசவைத்து விட்டார்கள்’ - இடைத்தேர்தல் குறித்து அண்ணாமலை ஆதங்கம்

இளைஞர்களை அரசியலுக்குக் கொண்டுவருவது கஷ்டமாக இருக்கிறது. சீமான் தான் இதுபோல பேசிக்கொண்டிருந்தார், என்னையும் அதுபோல பேச வைத்துவிட்டார்கள். இளைஞர்களை தொண்டை தண்ணீர் போக கத்தி அரசியலுக்கு அழைத்து வந்தால், ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலைப் பார்த்து பெரும்பாலானோர் ஓடி விட்டனர் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆதங்கப்பட்டுள்ளார்.

கோவை நவக்கரை பகுதியில் பாஜக சார்பில் விவசாயிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, “ ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தல் குறித்து தலைமை தேர்தல் ஆணையத்துக்கும் புகார்களை பதிவு செய்துள்ளோம்.தேர்தலில் மக்களுக்கு காசு கொடுத்து வாக்கு கேட்பது புற்றுநோய் போன்றது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் சுமார் 500க்கும் மேற்பட்ட தேர்தல் விதிமீறல் வழக்குகள் பதிவாகியுள்ளன. இனியும் பரிசுப்பொருள்கள் வாங்கித்தான் ஓட்டுப்போட வேண்டுமா என்று தமிழக மக்கள் முடிவு செய்ய வேண்டும். ஈரோடு கிழக்குத் தொகுதியில் சராசரியாக ஓவ்வொரு வாக்காளருக்கும் தலா 20 ஆயிரம் ரூபாய் செலவு செய்து பரிசுப்பொருள்கள் கொடுத்துள்ளனர்.

இதுபோன்ற செயல் தமிழகத்தின் வளர்ச்சியை 10 ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச்செல்லும். உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலம் கீழே இருந்து முன்னேறி வந்திருக்கிறது. இன்னும் 5 ஆண்டுகளில் தமிழ்நாடு பொருளாதாரத்தை உ.பி மாநிலம் முந்தி செல்லும். எத்தனை நாட்களுக்கு நாம் இதுபோன்ற அநாகரீக அரசியலை ஏற்றுக்கொள்ள போகிறோம். இந்த முறை ஊடகங்கள் சிறப்பாக செயல்பட்டு உண்மையை வெளிக்கொண்டு வந்தனர். இதுபோல ஓட்டுக்கு பணம் கொடுத்தால், அவர்கள் மக்களிடம்தான் மீண்டும் கொள்ளையடிப்பார்கள்.

மேகாலயா, நாகாலாந்தும் திரிபுரா போன்ற மாநிலங்களிலும் தேர்தல் நடக்கிறது. ஆனால் சமூகநீதி, முன்னேறிய மாநிலம் என்று சொல்லும் தமிழ்நாடு போல் எந்த மாநிலத்திலும் குற்றச்சாட்டுகள் வரவில்லை. எனவே தமிழ்நாடு மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். இதே நிலை நீடித்தால், நல்லவர்கள் யாரும் அரசியலுக்கு வரமாட்டார்கள். தனியாக போராடினால் 5 முதல் 6 சதவிகிதம் வரை வாக்கு கிடைக்கும். அதனை வைத்து என்ன செய்ய முடியும்?. இப்போது ஒரு தொகுதியில் தேர்தலுக்கு 45 கோடி ரூபாய் செலவு செய்கிறார்கள், இடைத்தேர்தலில் 100 கோடி ரூபாய் செலவு செய்கிறார்கள். இதுபோன்ற நிலையில் இளைஞர்களை அரசியலுக்கு அழைத்தால், அவர்கள் எப்படி வருவார்கள்.

இந்த மாதிரியான அரசியலை தான் முன்னெடுக்க வேண்டுமா? அப்படிதான் வெற்றிபெற வேண்டுமா?. தேர்தல் முடிவு எப்படி வரும் என்பது எனக்கு நன்றாக தெரியும். இதற்கு நீங்கள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

ஆனால் இதுபோன்ற அரசியலை மக்கள் ஆதரித்தால், புதியவர்கள் நல்லவர்கள் யாரும் அரசியலுக்கு வரமாட்டார்கள். மக்கள் அடிப்படையில் நல்லவர்கள் ஆனால் தொடர்ந்து நச்சரித்து செய்து பணம் வாங்க வைக்கிறார்கள். திருமங்கலம் போல ஈரோடு கிழக்கு தொகுதிக்கும் இந்த அவப்பெயர் வேண்டுமா?. இதுபோன்ற சூழலால் நாங்களும் குற்ற உணர்ச்சியில் தலைகுனிந்து நின்றிருக்கிறோம். இளைஞர்களை அரசியலுக்குக் கொண்டுவருவது கஷ்டமாக இருக்கிறது. சீமான் தான் இதுபோல பேசிக்கொண்டிருந்தார், என்னையும் அதுபோல பேச வைத்துவிட்டார்கள். மாணவர்களை தொண்டை தண்ணீர் போக கத்தி அரசியலுக்கு அழைத்து வந்தால், ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலைப் பார்த்து பெரும்பாலானோர் ஓடி விட்டனர்" என்று தெரிவித்தார்

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in